அடித்தட்டு மக்களின் கைக்கு எட்டா அன்றாட பொருள்கள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசம் !
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 12.11.2024 மற்றும் 13.11.2024 தேதிகளில் திருச்சி மாநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வை. சிவபுண்ணியம் முன்னாள் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், துணைச் செயலாளர்கள் நா பெரியசாமி, மு வீரபாண்டியன், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் டி. எம் மூர்த்தி, மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் எம் பி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் க மாரிமுத்து எம் எல் ஏ, மாநில செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள். திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். சிவா, புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ராஜ்குமார் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.விமான நிலையங்கள் தனியாரிடம் தரக் கூடாது
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
விவசாயிகளிடமும், பொது மக்களிடமும் மிகக் குறைந்த விலையில் நிலங்களை கையகப்படுத்தி, மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு, படிப்படியாக மேம்படுத்தப்பட்ட விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்க ஏலம் விடும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதில் திருச்சி விமான நிலையம் ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கப்பட்டு, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் நான்காயிரம் பயணிகள் பயன்படுத்தப்படும் வசதியுள்ள திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தனியாருக்கு வழங்குவதால் பயணிகள் சுமை அதிகரிக்கும். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்தை அதானி குழுமம் எடுத்துக் கொண்டு, பயணிக்கு தலா ரூ 140 /= ஒன்றிய அரசுக்குசெலுத்தும் நிலையில், உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளிடம் முறையே ரூ.506 மற்றும், 1069 வசூலிக்கிறது.
இப்படி தனியார் லாப வேட்டைக்கு நாட்டின் பொது சொத்துக்கள் தாரை வார்ப்பதையும், சேவைப் பணிக்கு பொதுமக்கள் தனியார்கள் தயவுக்கு தள்ளப்படுவதையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் கடுமையாக எதிர்ப்பதுடன், திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான நிலையங்களை தனியாருக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
2.மீனவர் வாழ்வுரிமை பாதுகாக்க வேண்டும்
கச்சத் தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 10 ஆம் தேதி கைது செய்துள்ளனர். மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், கடற்கொள்ளையினராலும் தொடர்ந்து தாக்கப்படுவது அவர்களது வாழ்வுரிமையை பறித்து வருகிறது.
நடப்பாண்டில் மட்டும் 350க்கும் அதிகமான மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடித்துள்ளது. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்த ஒன்றிய அரசு அதனை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது.
கைது செய்யப்படும் மீனவர்களிடம் இருந்து படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை இலங்கை அரசு பறிமுதல் செய்து, சேதப்படுத்துகிறது. அண்மை காலமாக, மீனவர்கள் எண்ணிப்பார்க்க முடியாத பெருந்தொகை இலங்கை நீதிமன்றங்களில் அபராதமாக விதிப்பதும், இந்த அபராத தொகை கட்ட தவறினால் சிறை தண்டனை விதிப்பதும் அதிகரித்து வருகிறது. மேலும் கைது செய்யப்படும் மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, இழிவுபடுத்தி அனுப்பப்படுகிறார்கள்.
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள இருநாடுகளின் கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தில், “தமிழக மீனவர்களுக்கு எதிராக படை பலத்தை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒன்றிய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி, தமிழக மீனவர்கள் வாழ்வுரிமையை உறுதி செய்து, பாதுகாக்கவும், அவர்கள் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுவதை தடுக்கவும், இதுவரை இலங்கை சிறையில் இருந்து வரும் மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் உள்ளிட்ட மீன்பிடி கருவிகளை மீட்டுத் தரவும், தொடர்ந்து நிகழ்ந்து வரும் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் உறுதிமிக்க ராஜிய ரீதியான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
3.உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அரசமைப்பு அமர்வின் தீர்ப்பு குறித்து
தனியார் சொத்துக்களை பொது நலனுக்காக கையகப்படுத்தும் அரசு அதிகாரம் குறித்த மேல் முறையீட்டின் மீது தலைமை நீதிபதி தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு கடந்த 05.11.2024 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. பொது நலனுக்காக என்ற பெயரில் தனியார் சொத்துக்களை கையகப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை என 8:1 என்ற முறையில் பெரும்பான்மை தீர்ப்பு கூறுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்பு சட்டத்தின் கூறுகள் 39(பி) மற்றும் 39 (சி) ஆகியவற்றின் உணர்வுக்கு மாறானது. சமூக கூட்டு உழைப்பால் உருவாகும் செல்வத்தை, பொருள் வளங்களை தனியார் வசப்படுத்திக் கொள்ளும் வர்க்க சார்பு கொண்டதாகும்.
அத்தோடு நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் 1977 ஆம் ஆண்டில் அமைந்த ஏழு நீதிபதிகள் அரசமைப்பு சட்ட அமர்வு வழங்கிய உத்தரவை விமர்சித்து, தனியாருக்கு சொந்தமான வளங்களும், சமூகத்தின் பொருள் வளங்கள் என்றே கருதப்பட வேண்டும் என்ற கருத்தை சுட்டிக் காட்டி, “இது சோசலிச கோட்பாடு சார்ந்த இறுக்கமான பார்வையை வெளிப்படுத்துவது” என்று தலைமை நீதிபதி கூறியிருப்பது சமூக சொத்துக்கள் குறித்து இதுவரை இருந்து வரும் கருத்தையும், சமூக அறிவியல் அடிப்படைகளையும் நிராகரிக்கும் திசையில் அமைந்துள்ளது.
பெரும்பான்மை தீர்ப்புக்கு மாற்றாக நீதிபதி சுதன்ஷு தூலியா வழங்கிய தீர்ப்பில் பொருளாதார, சமூக வாழ்வில் ஏற்றத்தாழ்வு தொடரும் நிலையில், பொது நலனுக்காக கையகப்படுத்தும் பொருள் வளங்கள்” என்பதன் எல்லையை பெரும்பான்மை தீர்ப்பு சுருக்கும் ” என சுட்டிக்காட்டி இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமியற்றும் அவைகளிடமே விடப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
தனியார் சொத்துக்களை சமூக பொது நலனுக்காக கையகப்படுத்தும் அரசு அதிகாரம் தொடர்பான தீர்ப்பை நாடாளுமன்றம் விவாதித்து, அரசமைப்பு சட்டத்தின் (39 பி மற்றும் 39 சி கூறுகளின் நோக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது.
4.விலை உயர்வை சமாளிக்க பூண்டு, தக்காளி உள்ளிட்ட நியாய விலைக் கடைகளில் வழங்குக
நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. குறிப்பாக காய்கறிகள், சமையல் எண்ணெய் வகைகளின் விலைகள் உயர்ந்து, அவைகள் அடித்தட்டு மக்களின் கைக்கு எட்டா பொருளாகி வருகிறது.
சமையலுக்கு இன்றியமையாத் தேவையான பூண்டு விலை கிலோ ரூ420/= தக்காளி விலை கிலோ ரூ 80/=, வெங்காயம் கிலோ ரூ 70 க்கும் மேலாக உயர்த்துள்ளது. உணவு தானிய விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் பாஜக ஒன்றிய அரசு படுதோல்வி அடைந்து வருகிறது. வேலையின்மையையும் வேலையிழப்புகளையும் தீவிரப் படுத்தி வரும் நவ தாராளமயக் கொள்கையின் விளைவாகவே விலைவாசி உயர்ந்து வருகிறது.
மாத வருமானப் பிரிவினரும், தினக்கூலித் தொழிலாளர்களும் விலைவாசி உயர்வை எதிர் கொள்ள, பூண்டு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து, பொது விநியோக திட்டத்தின் மூலம் நியாய விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
5. ஈஷா ஆசிரமம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வலியுறுத்தி நடைபெறும் மாதர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு
கோவை மாவட்டத்தில் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் இயங்கி வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஈஷா யோகா ஆசிரமத்தின் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இதன் சத்குரு ஜக்கி வாசுதேவ் கொலை வழக்கு உள்ளிட்ட குற்றப் பின்னணி கொண்டவர் என்ற புகாரும் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் கட்டிடங்களும், கட்டுமானங்களும் சட்ட விரோதமாக அமைந்துள்ளன என்றும், பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் நிலங்கள், வன நிலங்கள், அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்றும் புகார்கள் இருக்கின்றன.
அண்மையில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஆசிரம வளாகத்தில் தகன மேடை அமைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி சிறுமிகளும் பாலியல் வன் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இது போன்ற ஏராளமான புகார்களுக்கு ஆளாகி வரும் ஈஷா யோகா ஆசிரமம் தொடர்பான புகார்களை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனம் 23.11.2024 ஆம் தேதி (சனிக்கிழமை) கோவையில் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முழு ஆதரவு தெரிவிப்பதுடன், நீதி, நியாயம் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு பெண்களும் உழைக்கும் மக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவா்கள் கேட்டுக் கொள்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.