நெல்லை – தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகள் வழங்க சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகள் வழங்க சிறப்பு முகாம் – ஏற்கனவே 141 பேர் பல்வேறு உதவிகளை பெற்றுள்ள நிலையில் இன்று 22 தொழிலாளர்கள் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.
நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் சுமார் நான்கு தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு இயங்கி வந்த தனியார் தேயிலை நிறுவனம் அதன் உற்பத்தியை நிறுத்தியது. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தனர். மேலும் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. மேலும் அரசு தெரிவித்த அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
அதன்படி அப்பகுதி மக்களின் கோரிக்கையின் பேரில் இன்று மாஞ்சோலையிலுள்ள தொடக்கப்பள்ளியில் மறுவாழ்வு உதவிகள் வழங்க சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வித்துறை, தேர்தல் துறை, வங்கி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று தொழிலாளர்களிடமிருந்து 22 உதவி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெறப்பட்டன.
இதுகுறித்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் (பொறுப்பு) ஜெயா தெரிவிக்கையில், முழு இழப்பீட்டு தொகை, வீடு மற்றும் பிற பயன்கள் என அவரவர் விரும்பிய தகுதிபெற்ற பயன்களை 141 தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைப்படி அவர்களுக்கு உகந்த நாளில் மீண்டும் ஒரு முகாம் நடத்தப்படும், மக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரப்பணிகள் உள்ளிட்ட வசதிகள் மணிமுத்தாறு பேரூராட்சியால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வாரம் இருமுறை நடமாடும் மருத்துவ குழு மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தினசரி பேருந்து சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதி நிலச்சரிவு ஏற்படுவதற்கான மித அபாயம் உள்ள பகுதி என்பதால், அப்பகுதி மக்களுக்கும் தகுந்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.
— மணிபாரதி.