பகுதி நேர ஆசிரியா்களின் பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு ! ஐபெட்டோ வா.அண்ணாமலை
முந்தைய ஆட்சியாளர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் தலைமையில் உள்ள அரசிடம் நீதி கேட்டு போராடி வருகிறார்கள்… தலைவர் கலைஞர் அவர்களின் அரசின் கொள்கையை பின்பற்றி தீர்வு காண வேணுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி, வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் சார்பிலும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முந்தைய ஆட்சியாளர்களால் தையல், ஓவியம், உடற்கல்வி, கணினி மற்றும் இசை என 16 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த எண்ணிக்கையில் இறந்தவர்கள், ஊதிய பற்றாக்குறையால் பணியை விட்டு விலகியவர்கள் என 4000 பேர் இப்போது பணியில் இல்லை.
எஞ்சியுள்ள 12000 பேர் தான் இப்போது பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தான் போராடி வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என 52,000 பேர் பணியமனம் செய்யப்பட்டார்கள்.
தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைவருடைய வேண்டுகோளினையும் ஏற்று கொண்டதோடு அவர்களின் ஊதியப் பாதிப்பினையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒரே கையெழுத்தில் அவர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவந்து பணிவரன் முறை செய்து ஆணை வழங்கினார்… என்பதை நெஞ்சிருக்கும் வரை எவராலும் மறக்கத்தான் முடியுமா!?..
இந்திய பெருநாட்டில் இதற்கு முன்னரும் எந்த அரசும் இது போன்ற சரித்திர சாதனையை செய்ததில்லை!… இதற்குப் பின்னரும் எந்த மாநிலத்திலும் 52,000 பேர் பணிநியமனம் செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்படப்போவதில்லை… தலைவர் கலைஞர் அவர்களின் மகனாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் இந்த 12 ஆயிரம் பேருக்கும் பணி நிரந்தரம் செய்து அவர்களை முழு நேர சிறப்பாசிரியர்களாக ஆணை வழங்கி உதவிடுமாறு பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவும் ஆட்சியின் மீது அக்கறை கொண்டுள்ள… தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் நாங்கள் போராடுகிற பொழுது என் பெயருக்கு முன்னால் உள்ள கருணை என்னிடம் நிறைய இருக்கிறது… ஆனால் பின்னால் உள்ள அந்த இரண்டு எழுத்து (நிதி) என்னிடம் இல்லையே!.. என்று நகைச்சுவையாக பேசுவார்… ஆனால் அவரது காலத்தில்தான் நான்கு ஊதிய குழுக்களை அமல்படுத்தினார். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்தார். என்பதை மனசாட்சி உள்ளவர்களால் மறக்கத்தான் முடியுமா?..
தங்கள் அரசு காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட ஏதாவது சிலவற்றையாவது செய்து தலைவர் கலைஞர் அரசின் சரித்திரத்தினை தொடர வேண்டுமாய் மீண்டும் மீண்டும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்…
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு முதலமைச்சர்… ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்ற வரலாற்று பதிவு ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
— வா.அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்.