இந்திய அளவில் கராத்தே போட்டியில் தங்கம் வென்று அசத்திய அரசுப்பள்ளி மாணவி !
தேசியப் பள்ளிக் கல்விக் குழும விளையாட்டு போட்டியில் கராத்தே பிரிவில் தங்கம் வென்ற முதல் அரசுப் பள்ளி மாணவி அ.ச. நித்திலா அவர்களுக்கு பாராட்டுகள்!
தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து, இந்தியத் தாயின் தவப் புதல்வியாய்; விடுதலைப் போராட்டத் தியாகி பகத்சிங் மண்ணான பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் நடைபெற்ற 68வது இந்திய அளவிலான பள்ளிக் கல்விக் குழும விளையாட்டு போட்டியில் கராத்தே பிரிவில் தமிழ்நாடு மாநில அணியைத் தலைமையேற்று வழிநடத்தியதுடன், 46 கிலோ பிரிவில் தங்கம் வென்று தமிழ்நாடு மாநில அரசுப் பள்ளிகளின் முதல் மாணவி என்ற பெருமையோடு தமிழ்நாடு திரும்பும் A. S. நித்திலா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
அம்மா அஸ்வினி ஆராய்ச்சி மாணவராக இருந்தபோதே தமிழ்நாட்டில் மிகச் சிறந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பணி புரிந்த மிகப் பெரும் களச் செயல்பாட்டாளர். தந்தை சென்சே (SENSEI) சம்பத்குமார் உலக அளவில் கராத்தே போட்டிகளின் நடுவர், புகழ்பெற்ற கராத்தே பயிற்சியாளர்.
தாய் – தந்தை இருவரும் நினைத்திருந்தால் எந்த பள்ளியிலும் தனது மகளுக்கு இடம் வாங்கி இருக்க முடியும்.
தாய் – தந்தை இருவரும் அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவத்திற்கான போராட்டத்தை உள்வாங்கிய தொழிலாளர் வர்க்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் அரசுப் பள்ளி மட்டுமே கண்ணியமிக்க குழந்தைப் பருவத்தை ஒரு குழந்தைக்கு உறுதிசெய்ய முடியும் என்பதை உணர்ந்து, தங்களின் வீட்டிற்கு அருகமையில் உள்ள அரசுப் பள்ளியில் தங்களது மகளை சேர்த்துப் படிக்க வைத்தனர்.
ஏழ்மையின் காரணமாக அல்ல.
வறுமையின் காரணமாக அல்ல.
இயலாமையின் காரணமாக அல்ல.
கண்ணியமிக்க குழந்தைப் பருவத்தை தங்களது குழந்தைக்கு உறுதிப்படுத்த அரசுப் பள்ளியில் சேர்த்தனர். அரசுப் பள்ளியில் படிக்கவைத்தனர்.
தங்களது சொந்த வாழ்க்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டனர். தங்களது திருமணத்தின் மூலம் சாதியை மறுத்து, மனிதம் காத்தனர், சுயமரியாதைக்காரர்கள் என்பதை நிரூபித்தனர்.
தங்களின் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து தங்களது அடுத்தத் தலைமுறைக்கு கண்ணியமிக்க வாழ்க்கை வாழ்வதற்கான இயல்பான வழியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை தனியார் பள்ளிகள் அதிலும் அதிகப்படியாக சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் ஆகியப் பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமே தட்டிப் பறித்துக் கொண்டிருந்த கராத்தே பிரிவு தங்கப் பதக்கத்தை, கண்ணியமிக்க சென்னை கலைஞர் கருணாநிதி நகரின் அசோக் நகர் பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அ. ச. நித்திலா அவர்கள் வென்று தேசிய அளவிலான பள்ளிக் குழும விளையாட்டுப் போட்டியில் கராத்தே பிரிவில் தங்கம் வென்ற முதல் அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைத் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு பெற்றுத் தந்துள்ளார்.
“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
என்ற திருக்குறள் நெறியில், தாய் -தந்தை தங்களது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்து அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்தனர்.
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்”
என்ற திருவள்ளுவர் நெறியில், மகள் தனது தாய் – தந்தை இருவரையும் மனித குலமே போற்றும் அளவிற்கு பெருமைப் படுத்தி உள்ளார்.
அன்பு மாணவி அ. ச. நித்திலா, அவரின் பெற்றோர் அஸ்வினி – சம்பத்குமார், அவரின் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
அ. ச. நித்திலா வாழ்க பல்லாண்டு! வலுப்பெறட்டும் அரசுப் பள்ளிகள்!
கண்ணியமிக்க குழந்தைப் பருவத்தை ஒவ்வொரு குழந்தைக்கும் உத்தரவாதப் படுத்த உறுதியேற்போம்
சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதிசெய்ய பாகுபாடு இல்லாத சமச்சீர் கல்வி முறைமையை வென்றெடுப்போம்!
வாழ்த்துக்களுடன்,
முனைவர் பி. இரத்தினசபாபதி, தலைவர்;
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.