நடந்து போறதுக்கும் வரி போடாம இருந்தா சரி! TOT பரிதாபங்கள்!
தமிழகத்தில் முதன் முதலாக தேசிய நெடுஞ்சாலை ஒன்று தனியார்மயமாகியிருக்கிறது. அதுவும் அதானியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. என்ன? ஆச்சர்யமாக இருக்கிறதா? சாலைகளைக்கூட, தனியார்மயமாக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறதா? ஆம். உண்மைதான்.
இதுபோன்று நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை தனியார்வசம் ஒப்படைப்பதெற்கென்றே ஒன்றிய அரசின் கைவசம் உள்ள திட்டம்தான் டோல்- ஆப்பரேட்- டிரான்ஸ்பர் (டி.ஓ.டி.) என்பது. இந்த திட்டத்தின் கீழ்தான், திருச்சியிலிருந்து விராலிமலை, மேலூர் வழியாக மதுரையை இணைக்கும் நான்கு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலையை ( எண் 38) அதானியின் வசம் ஒப்படைத்திருக்கிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த சாலையை இதுவரையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் பராமரித்து வந்தது. விராலிமலை அருகே பூதக்குடி, மேலூர் அருகே சிட்டம்பட்டி ஆகிய 2 இடங்களில் சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கக்கட்டணங்களையும் வசூலித்து வந்தது.
![தேசிய நெடுஞ்சாலை ஆணையம்](https://angusam.com/wp-content/uploads/2025/01/18.01.2025-angusam.com-4.jpg)
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறுப்பில், மாநில மற்றும் ஒன்றி அரசு சார்ந்த நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மேற்படி சாலைகளை பராமரித்தும் சுங்கம் வசூலித்தும் வந்த நிலையில்தான், அதன் முழுப்பொறுப்பையும் அதானியின் வசம் ஒப்படைத்திருக்கிறது.
நடந்து போறதுக்கும் வரி போடாம இருந்தா சரி! TOT பரிதாபங்கள்!
மத்திய அரசின் டோல்- ஆப்பரேட்- டிரான்ஸ்பர் (டி.ஓ.டி.) திட்டத்தின் கீழ் திருச்சி – மதுரை சாலைக்கான ஏல அறிவிப்பை கடந்த ஆண்டில் வெளியிட்டிருந்தது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அதற்கான ஏலத்தில் அதானி ரோடு டிரான்ஸ்போர்ட், IRB INFRASTRUCTURE DEVELOPERS LTD, எபிக் கன்ஸ்ட்ரக்ஷன், PRAKASH ASPHALTINGS & TOLL HIGHWAYS (INDIA) LTD நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், போட்டியில் பங்கேற்ற நிறுவனத்தைவிட கூடுதலாக ரூ. 1692 கோடி என்பதாக ஏலத்தொகையை பதிவு செய்திருந்த அதானி நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. இது, இருபது ஆண்டுகளுக்கான ஏலம் என்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, மதுரை- கன்னியாகுமாரி இடையிலான 243 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை ; திருச்சி- தஞ்சாவூர் இடையிலான 56.5 கிலோமீட்டர் நீலநெடுஞ்சாலை ; மதுரை- தூத்துக்குடி இடையிலான நெடுஞ்சாலை ; தூத்துக்குடி- திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆகியவையும் அடுத்தடுத்து தனியார் வசம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கெனவே, திருச்சி முதல் சென்னை வரையிலான– 330 கி.மீ. தூரத்திற்கு 7 டோல்பிளாசாக்கள் அமைந்திருக்கின்றன. 60 கி.மீ. இடைவெளியில்தான் டோல்பிளாசாக்கள் அமைக்க வேண்டுமென்ற விதிமுறையின்படி பார்த்தால், 5 டோல்பிளாசாக்கள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனாலும், ஏழு இருக்கிறது. சுங்கக்கட்டணமாகவே திருச்சி – சென்னை ஒரு வழி பயணத்திற்கு ரூ. 480.00 ஆகிறது. இந்த சுங்ககட்டணம் வசூலிப்பதிலேயே, ஆயிரம் சர்ச்சைகள் சுழன்றடித்து வருகின்றன. இந்த பின்னணியில்தான், முழுக்க தனியார்வசம் நெடுஞ்சாலைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்போதைய சூழலில், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டு சில வாகனங்களுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறார்கள். இனி, பாதசாரிகளுக்கும்கூட சுங்கக்கட்டணம் வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.