எப்படி வாழவேண்டும் என்பதைக் காசு கொடுத்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா? அர்த்தமுள்ள ஆன்மீகம் !
காசு கொடுத்தால் எப்படி வாழவேண்டும்? என்பதை ஒரு மலையில் இருக்கிற ஆசிரமத்தில் உங்களை உட்கார வைத்து, அவர்கள் உங்களைப் பயிற்றுவிக்கக் கூடும். அப்படியெலாம் சொல்லிக் கொடுத்து வாழ்வதா? வாழும் கலை என்பதுதான் கேள்வி. உங்கள் தாயின் கருவறையிலிருந்து வெளியே விழுந்து, மார்பில் பால் அருந்தக் கற்றுக் கொண்டீர்களோ, அப்போது உங்களுக்கு வாழும் கலை வசப்பட்டுவிட்டது இல்லையா? உங்கள் தாயின் கருவறையிலிருந்து மூச்சுத் திணறி வெளியே வந்து சுவாசிக்கும்போதே வாழும் கலை உங்களுக்கு வசப்பட்டுவிட்டது இல்லையா? எப்படி வாழவேண்டும் என்பதைக் காசு கொடுத்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா? என்ற கேள்விகள் எல்லாம் உள்ளன.
நான் மதுரையில் படித்தவன், வளர்ந்தவன். அங்கே சிந்தாமணி என்ற ஒரு திரையரங்கம் உள்ளது. அதில் படம் பார்க்க டிக்கெட் வாங்குவது என்பது மிகவும் கடினமான செயல். டிக்கெட் கவுண்டர் கதவு திறக்கும்போது, பின்னாலிருந்து தள்ளும்போது தடுமாறி கீழே விழுந்துவிடுவோம். அப்படி சிரமத்தோடு தெரிந்த நண்பர் ஒருவருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துக் கொடுத்தேன். பதிலுக்கு அவர் எனக்கு முட்டை போண்டா வாங்கிக் கொடுத்தார். ஒருவருக்கு ஒருவர் இதில் நன்மை உள்ளது. இதுதானே வாழும் கலை. இதைக் கற்றுக்கொள்ள எதற்குக் காசு கொடுக்கவேண்டும்?இதில் பயில்வதற்கு என்ன இருக்கிறது?
சரி, ஆசிரிமம் சென்று வாழும் கலையைப் பயின்று, சான்றிதழ் பெற்று அதன்படி வாழ்ந்தவர்கள் யார்? வாழ்ந்து, வாழ்வில் உயர்ந்தவர் யார்? வாழும் கலையில் சொல்வது என்ன? முண்டியடித்து முன்னாடி வா! எல்லாரையும் பின்னுக்குத் தள்ளு… முன்னுக்கு வா ! இதைத்தானே சொல்லித் தருகிறார்கள். நம்மைப் பந்தயக் குதிரையைப் போல நம்மை அவர்கள் தயார் செய்கிறார்கள்.
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஊரில் ஓட்டப்பந்தயம் நிகழ்த்தப்படுகின்றது. ஓடுவதற்காக ஆண், பெண் பிள்ளைகள் வரிசையாக தொடக்கக்கோட்டில் நிற்கிறார்கள். அவர்கள் ஓடலாம் என்பதற்கான கொடி அசைக்கப்பட்டு விட்டது. பிள்ளைகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். யாரும் ஓடவில்லை. பந்தயம் இன்னும் தொடங்கவில்லை. பந்தயம் நடத்துபவர்கள் ஓடு… ஓடு… என்று தூண்டுகிறார்கள். முன்னாடி ஓடு… முன்னாடி ஓடு…. என்று சொல்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பிள்ளைகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு கைகளைப் பிணைத்துக்கொண்டு, அரண்போல செல்கிறார்கள். இதில் யார் முதலில்? யார் கடைசியில்? ஒருவருமில்லை. பந்தயம் நடத்தப்பட வேண்டிய தேவை பொய்யாகிவிட்டது. பிள்ளைகள் ஒன்றிணைந்து நிற்பதன் மூலம் நாங்கள் வெற்றியைப் பகிர்ந்துகொள்கிறோம். தோல்வியாக இருந்தாலும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதைத்தான் இவர்களின் செயல்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்கள் பாடம் நடத்தாமல் வாழும் கலையைக் கற்றுக்கொடுக்காமல், பிள்ளைகள் வாழும் கலையை உலகிற்குக் கற்றுக்கொடுத்தார்கள். எல்லாரோடும் இணைந்து போவதுதான் உண்மையான வாழும் கலை.
— முனைவா் கரு.ஆறுமுகத்தமிழன்.