சின்னவாடி – பட்டாசு ஆலை வெடி விபத்து- ஒரு பெண் பலி ! நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள் !
விருதுநகர் மாவட்டம், கோவில் புலிக்குத்தி அருகே சின்னவாடி கிராம எல்லைக்கு உட்பட்ட சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ சத்திய பிரபு என்ற பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று 30க்கும் மேற்பட்ட அறைகளுடன் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது.
நேற்று பிப்ரவரி 5 மதியம் 2 மணி அளவில் தொழிலாளர்கள் உணவு இடைவெளியின் போது பேன்சி ரக பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருள் கலவை இருந்த அறையில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் தீ பொறி பரவி 8 க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமானது,
உடனடியாக விபத்து குறித்து தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு மீட்பு பணியின் போது, விபத்தில் காயமடைந்த அதிவீரன் பட்டியைச் சேர்ந்த, வீரலட்சுமி, கஸ்தூரி, வைத்தீஸ்வரி, ஆவுடையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் ஆகியோர் காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலமாக சாத்தூர் விருதுநகர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் ஜேசிபி இயந்திரம் கொண்டு கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது, அடையாளம் தெரியாத பெண் தொழிலாளர் உடல் கருகிய நிலையில் இருந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த பெண் வதுவார்பட்டியை சேர்ந்த ராமலட்சுமி வயது 50 என தெரியவந்துள்ளது.
வெடி விபத்தின் போது மதியம் உணவு நேரம் என்பதால் அனைத்து தொழிலாளர்களும் அறையை விட்டு வெளியே அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்ததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சில தொழிலாளர்கள் முள் வேலிகளை தாண்டி காட்டுப்பகுதிக்குள் ஓடியதால் கை கால்களில் சிறு வெட்டு காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
விபத்து ஏற்பட்ட பகுதியை விருதுநகர் மாவட்ட பொறுப்பு மதுரை எஸ்.பி. அரவிந்தன், ஏ.டி.எஸ்.பி. சூரியமூர்த்தி, டி.எஸ்.பி. லோகேஷ் குமார், நாகராஜன், வருவாய்த்துறையினர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார், ஆலை உரிமையாளர் மோகன்ராஜ், போர் மேன், செல்வராஜ், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஆலையில் உள்ள அறைகள் தனி நபர்களுக்கு பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விட்டதாகவும்,
அவ்வாறு குத்தகைக்கு எடுத்த நபர்கள் விதிகளை மீறி வான வெடி பட்டாசுக்கு தேவையான மணி மருந்து கலவைகளை அனுமதிக்கப்பட்ட அறையை விட்டு திறந்தவெளியில் மரத்தடியில் வைத்து உற்பத்தி செய்து வெயிலில் காய வைத்த போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் படுகாயம் அடைந்த 6 நபர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
— மாரீஸ்வரன்.