மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரி இளந்தூது மாணவர் இதழ் பயிற்சி பணிப்பட்டறை மற்றும் இணையதள வெளியீட்டு விழா !
மன்னன்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் வெளிவரும் இளந்தூது மாணவர் இதழின் 36ஆவது ஆசிரியர் குழு சார்பாக ‘வித்தகப்புரட்சி’ என்னும் தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப் பணிப்பட்டறை நடைபெற்றது. இளந்தூது ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் த.செபஸ்தி ஜான்பாஸ்கர் வரவேற்புரை வழங்கினார். தொடக்கவிழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.நாகராஜன் அவர்கள் தலைமையேற்று இளந்தூதுவின் இணையதளத்தை வெளியீட்டு அதன் சிறப்பினை எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளாரான சதீஸ்குமார் பிரபுராம் அவர்கள் மாணவர்கள் படைப்பிலக்கியங்கள் மீதும் ஊடகங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டுமென்றும் ஊடகத்துறையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் மாணவர்கள் ஊக்கம் கொள்ளும் வகையில் சிறப்புரை நல்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னை தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் துரை.குணசேகரன், கல்லூரியின் புலமுதன்மையர் முனைவர் ச.மயில்வாகனன், தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு ஆகியோர் இளந்தூதுவின் வரலாற்றினை எடுத்துரைத்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வு மூன்று அமர்வுகளாக நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கட்புலத்துறை உதவிப்பேராசிரியர் ஆர்.எம்.சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளாரான சதீஸ்குமார் பிரபுராம் அவர்கள் ‘ஊடகம் மற்றும் இதழியல்’ என்னும் பொருண்மையில் சிறப்புரை நல்கினார்.
தொடர்ந்து நிகழ்ந்த இரண்டாவது அமர்வில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ந.சரவணன் தலைமையில் விஜய் தொலைக்காட்சிப் புகழ் நகைச்சுவை தென்றல் சரவெடி சரவணன் அவர்கள், ‘அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தின் வளர்ச்சி’ என்னும் பொருண்மையில் உரை நிகழ்த்தினார்.
இரண்டாம் நாள் (14/02/25) காலை 10.00 மணிக்கு ஏ.வி.சி.கல்லூரியின் புல முதன்மையர் முனைவர் ச.மயில்வாகனன் அவர்கள் நடுவராக இருந்து, ‘வாழ்க்கை மேம்பாட்டிற்கு பெரிதும் துணையாக இருப்பது பழைய தலைமுறையா? புதிய தலைமுறையா? என்ற சிந்தனைப் பட்டிமன்றம் நடைபெற்றது. மாணவர்கள் இரு அணிகளாகக் கலந்துகொண்டு கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மூன்றாம் அமர்வில் வேதியியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் அ.ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையேற்க தொழில்முனைவோர் தமிழரசி பி.இ., அவர்கள் ‘நெகிழி விழிப்புணர்வு’ என்னும் தலைப்பில் சிறப்புரை நல்கினார். அதனையடுத்து தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா.மஞ்சுளா அவர்கள் தலைமையில் ‘விந்தை செய்குவோம்’ என்னும் தலைப்பில் மாணவர்களும் கலந்துகொண்ட கவியரங்கம் நடைபெற்றது.
14/02/25 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு நிறைவு விழா நடைபெற்றது. கல்லூரித் துணைமுதல்வர் முனைவர் மா.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈரோடு, பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர மைய உதவிப்பேராசிரியர் முனைவர் அ.நடராஜன் கலந்துகொண்டு நிறைவு விழா சிறப்புரை வழங்கினார். நிறைவு விழாவில் இளந்தூது ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.செபஸ்திஜான் பாஸ்கர், தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் இளந்தூது இணை ஆசிரியர் இரா.ஹரிபிரசாத் வரவேற்புரை வழங்க இளந்தூது ஆசிரியர் மு.கார்த்தி நன்றி கூறினார்.
இப்பயிற்சிப் பட்டறையில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்றனர். அவர்கள் குழுக்களாகக் இணைந்து மாதிரி இதழிணை வடிவமைத்தனர். அதில் சிறந்த இதழாக ஏ.வி.சி. கல்லூரி தமிழாய்வுத்துறை மாணவர்கள் முதலிடத்தையும் பூம்புகார்க் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.