திமுக ஆட்சி கலைப்பு – அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி – அமித்ஷா
கடந்த மார்ச்சு 25ஆம் நாள் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காலையில் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அதிமுகவின் முன்னணியில் உள்ள ஒருசில தலைவர்களுக்கு மட்டும் தகவல் சொல்லப்பட்டது.
அன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,“தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதிகள், மும்மொழி, மூன்றாவது மொழி பிரச்சனைகள் குறித்து பேசி, தமிழ்நாட்டின் நலனுக்கு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்ற சொன்னவுடன் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் பார்த்துகொண்டனர். அதில் முன்னாள் அமைச்சர் செங்கேட்டையனும் உள்ளடக்கம்.

பகல் 2 மணிக்கு டெல்லி விமானநிலையத்தில் இறங்கிய எடப்பாடி அதிமுக அலுவலகம் சென்று கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்கள்,“நீங்கள் இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷா-வைச் சந்திப்பதாக தகவல் உள்ளதே” என்று கேட்டபோது,“இப்படியெல்லாம் கேள்வி கேட்டு பரபரப்பு செய்தியை வெளியிட வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.
நான் காணொலி வாயிலாக டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்தேன். இப்போது நேரடியாகப் பார்வையிட வந்திருக்கிறேன் அவ்வளவுதான். உங்கள் கற்பனைக்கு அளவு வேண்டாமா?” என்று சொல்லி செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டார். பின்னர் ஓய்வெடுக்க டெல்லியில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்றார்.
அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
இரவு எட்டு மணி அளவில் தமிழ்நாடு தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ்-இல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறுகின்றது. இதில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் முன்னணி தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடப்பாடியும் தனியாக 45 நிமிடங்கள் உரையாடியதாகவும் செய்திகள் வெளியாயின. பின்னர் அன்றிரவே சென்னை திரும்பிய எடப்பாடி அதிகாலை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,“தமிழ்நாட்டிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி தொடர்பாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாகவும், தமிழ்நாட்டின் நலன் கருதி சில வேண்டுகோளை முன்வைத்ததாக” கூறினார்.
தமிழ்நாட்டின் நலன் கருதி கல்வி நிதியை விடுவிக்கவேண்டும் என்றால் அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்திருக்கவேண்டும். நிதி அமைச்சரைச் சந்திருக்க வேண்டும். உள்துறை அமைச்சரைச் சந்தித்ததின் பின்னணி குறித்து பல தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அமித்ஷா – எடப்பாடி சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்தவர், பிரபல தொழில் அதிபர் மிதுன் என்று சொல்லப்படுகின்றது. மிதுன் எடப்பாடி பழனிசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். எடப்பாடியின் சம்மந்தியின் வீட்டில் தொடர்ந்து ED ரெய்டு நடைபெற்று வருகின்றது. அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. சம்மந்தி மீதான ரெய்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்து என்று பத்திரிக்கையாளர் லெட்சுமணன் குறிப்பிடுகின்றார்.
இந்தச் சந்திப்பின்போது, 2026இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக் கூட்டணியில் அதிமுக இணைய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் மார்ச்சு 25ஆம் நாள் அமித்ஷா – எடப்பாடி சந்திப்பு டெல்லியில் நடந்து முடிந்தவுடன், அமித்ஷா வெளியிட்ட X வலைதளத்தில்,“2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் ஆட்சி அமையும். ஊழல் ஆட்சி அப்புறப்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக – அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை உடனே அறிவிக்க வேண்டாம் என்றும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் 120 இடங்களில் அதிமுக போட்டியிடுவது என்றும் 114 இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எடப்பாடி முதல் அமைச்சர் வேட்பாளர் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்றப்பட வேண்டும் என்பதை எடப்பாடி வலியுறுத்தியபோது, எங்கள் கட்சி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று எடப்பாடியிடம் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் கட்சிகள் போட்டியிடும் என்ற அமித்ஷாவின் வேண்டுகோளை எடப்பாடி ஏற்றுக்கொண்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் திடீர் சந்திப்புக்குக் காரணம் குறித்து பத்திரிக்கையாளர் லெட்சுமணன் பேசும்போது,“செங்கோட்டையனை வைத்து அதிமுகவை உடைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியது. மேலும் ED ரெய்டுகளிலிருந்து சம்மந்தி மற்றும் கட்சியினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடியிலிருந்து எடப்பாடிக்கு மீள வழி தெரியவில்லை. அதனால்தான் அமித்ஷா சந்திப்பு நிகழ்ந்துள்ளது” என்று கூறினார்.

டெல்லியிலிருந்து கிடைத்த இன்னொரு தகவல் என்னவென்றால், சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு 6 மாதத்திற்கு முன்பு திமுக ஆட்சியைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்று அமித்ஷாவிடம் எடப்பாடி மிக முக்கிய கோரிக்கையை வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சிக் கலைக்கப்பட்டால் மனரீதியாக திமுகவின் உறுதி குலையும். எல்லா மந்திரிகளின் மீதும் ED ரெய்டு நடத்தி, சிறையில் அடைத்து, டெல்லியில் ஆம் ஆத்மியைத் தோற்கடித்து போல தமிழ்நாட்டிலும் தோற்கடிக்கலாம் என்ற எண்ணத்துடன் ஆட்சிக் கலைப்பு திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதிமுக தரப்பில் இந்தச் சந்திப்பை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அன்வர் ராஜா, செம்மலை ஆகியோர் விரும்பவில்லை. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைதலைவர் உதயக்குமார் இந்தச் சந்திப்பு குறித்து பேசும்போது,“இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா – தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடியார் சந்திப்பு தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜகவோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தொடர்ந்து சொல்லி வந்த எடப்பாடி தற்போது, “கூட்டணிக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. தேர்தலின்போது கூட்டணி குறித்து தகவல் தெரிவிக்கப்படும்” என்று நழுவலாக பதில் அளித்துள்ளது அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்டுவிட்டது என்பதைவிட பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைகிறது என்பதுதான் எதிர்பாராத திருப்பமாக உள்ளது. திருப்பம் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வெற்றியைத் தருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
— ஆதவன்.