தாடிக்காரர்களின் சிலைகள்
தலைவர்களின் விந்து என்ன என்று நக்கிப் பார்த்து அவர்களின் செயல்களை மதிப்பீடு செய்யும் கூட்டம் ஒன்று குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம், எந்தத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களின் இலட்சிய நோக்கங்களையும் அதனால் சமுதாயத்திற்கு விளைந்த நன்மைகளையும் மதிப்பிட்டு மரியாதை செலுத்துவதை மரபாகவும் பண்பாடாகவும் கொண்டுள்ளது. ஆரிய-திராவிட யுத்தம் ஆயிரமாயிரமாண்டு காலமாகத் தொடர்ந்தாலும் தமிழுக்குச் செம்மொழித் தகுதி தரவேண்டும் என குரல் கொடுத்த பரிதிமாற்கலைஞரை (சூரியநாராயண சாஸ்திரி) மதித்துப் போற்றிய இயக்கம். மகாகவி பாரதியின் எட்டயபுரம் இல்லத்தை அரசுடைமையாக்கியும், ராஜாஜிக்கு நினைவாலயம் அமைத்தும் போற்றிய இயக்கம்.

தமிழ் நாட்டின் எல்லைக்கு அப்பால் உள்ள தலைவர்களையும் மதிக்கத் தவறியதில்லை. அண்ணல் அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலைக்கழகம், அவர் பெயரில் மாவட்டம் (வேலூர் அம்பேத்கர் மாவட்டம்), சென்னையில் மணிமண்டபம் என பல சிறப்புகளை சேர்த்தவர் கலைஞர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக இந்திய நாடாளுமன்றத்திலும் ஒன்றிய அமைச்சரவையிலும் பணியாற்றிய பாபு ஜெகஜீவன்ராமுக்கு சென்னை எழிலகம் வளாகத்தில் சிலை அமைத்து, அதை குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனைக் கொண்டு திறந்து வைக்கச் செய்து, சம்பவம் செய்வதரும் கலைஞர்தான். சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு இந்தியாவின் முதல் சிலையை சென்னையில் அமைத்தவர் இன்றைய முதலமைச்சர்.

பேரறிஞர் அண்ணா ஆட்சியில் நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது கடற்கரையில் அமைக்கப்பட்ட 10 சிலைகளில் தமிழ்த் தொண்டாற்றிய ஐரோப்பியர்களான ராபர்ட் கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோரின் சிலைகளும் இடம்பெற்றிருப்பதை இப்போதும் காணலாம். சிந்துவெளி அகழாய்வுகள் திராவிடப் பண்பாட்டின் அடையாளங்களாக இருக்கின்றன என்பதை நூறாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய சர் ஜான் மார்ஷலுக்கு அண்மையில் அவருடைய பிறந்தநாளில் சென்னை அருங்காட்சிய வளாகத்தில் சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்.
திராவிட மாடல் ஆட்சியில் கல்வி நிலைய வளாகங்களில், சமூகத்திற்கும் அறிவியக்கத்திற்கும் தொண்டாற்றியவர்களின் சிலைகள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டர் அப்துல்கலாம் சிலையாக உயர்ந்து நிற்கிறார். இந்திய தேசிய கீதத்தில் தென்னிந்தியாவை ‘திராவிடம் ‘ எனக் குறிப்பிட்டு எழுதிய கவி ரவீந்திரநாத்தின் சிலை குயின் மேரீஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் அப்துல்கலாம் சிலை
தாகூர் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் அடையாளம் அவரது தாடி. தமிழ்த் திரைப்படப் பாடல்களிலும் அது இடம் பெற்றிருக்கிறது. இந்தியாவின் வங்காள மாநிலத்து தாடிக்காரரின் சிலையுடன், ஜெர்மானிய தாடிக்காரரான கார்ல் மார்க்ஸ் சிலையும் சென்னையில் அமையவிருப்பதை சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிடும்போது, “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிற புவியியல் ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம். இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறியபோதிலும், சமுதாய நிலை மாறவில்லை. அது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சிகரமான தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்” என்றார்.

கார்ல் மார்க்ஸின் நம்பிக்கை இந்தியாவின் தெற்குத் திசையிலிருந்துதான் செயல் வடிவம் பெறத் தொடங்கியது. அவர் குறிப்பிட்ட மறுமலர்ச்சியை சமுதாயத்தில் ஏற்படுத்தியது திராவிட இயக்கம்.
சோவியத் யூனியன் ஆயுதப் புரட்சி மூலம் மார்க்ஸிய தத்துவங்களை நிலைநிறுத்தியது என்றால், தமிழ்நாட்டில் மார்க்சியத் தத்துவத்தின் சாரங்களை சமூக நீதிக் கொள்கையுடன் குழைத்து, கல்வி-வேலைவாய்ப்பு-பொருளாதாரம்-வாழ்வுரிமை எனப் பல நிலைகளிலும் ஜனநாயக வழியிலான மாற்றங்களைக் கொண்டு வந்த வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன்முதலில் தமிழில் வெளியிட்டவர் பெரியார். பச்சையப்பன் கல்லூரி மாணவராக அண்ணா எழுதிய முதல் கட்டுரை Moscow Mob Parade ஆகும். பெரியாரின் அண்ணாவையும் சந்தித்திருக்காவிட்டால் கம்யூனிஸ்ட்டாகியிருப்பேன் என்ற கலைஞரைப் பற்றி, ‘ரத்தம் சிந்தி போராட வேண்டிய உரிமையை ஒரு துளி பேனா மையால் சாத்தித்தவர்” என்று கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் மணலி கந்தசாமி குறிப்பிட்டார்.

நிலச்சீர்திருத்ததையும், குத்தகைதாரர் நில உரிமைச் சட்டத்தையும் கொண்டு வந்து இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழை எளிய விவசாயிகளுக்குப் பகிர்ந்து தந்ததை கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கத் தலைவர் கோ.வீரையன் தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
தலைவர்களும் அறிஞர்களும் மொழி-இன-நில எல்லைகளைக் கடந்து மக்களின் மனதில் நிலைத்திருப்பார்கள். ஜெர்மானியத் தாடிக்காரர் கார்ல் மார்க்ஸ் நம்முடைய மண்ணில் போற்றப்படுவதுபோல, ஈரோட்டுத் தாடிக்காரர் தந்தை பெரியார் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இன்று குறிப்பிடப்படுகிறார். இந்திய நாடாளுமன்றத்தில் அவர் பெயரை உச்சரித்துவிட்டு உறுதிமொழி ஏற்கிறார்கள்.
தேர்தல் அரசியல் களத்தில் திராவிட இயக்கத்துடன் சி.பி.ஐ., சி.பி.எம் போன்ற கம்யூனிஸ்ட் இயக்கங்கள் உடன்பட்டும் இருந்துள்ளன. முரண்பட்டும் எதிர்த்துள்ளன. எனினும், கம்யூனிசத் தத்துவத்தின் அடிப்படைகள் பலவும் திராவிட இயக்கத் தலைவர்களின் உணர்வுடன் ஊறிய ஒன்று. நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான டி.எம்.நாயரை ‘திராவிட லெனின்’ என்றவர் பெரியார். தன்னிடம் குழந்தைகளைக் கொண்டு வந்து கொடுத்து பெயர் வைக்கச் சொன்னபோது மாஸ்கோ, ரஷ்யா என்று பெயர் வைத்தார் அவர்.
கலைஞர் தன் மகனுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் நினைவாக ஸ்டாலின் என்று பெயர் வைத்தார். அந்த ஸ்டாலின், கம்யூனிசக் கொள்கையை வகுத்தளித்த கார்ல் மார்க்ஸூக்கு தமிழ்நாட்டின் தலைநகரில் சிலை வைக்கிறார்.
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்.