அது அந்தக்காலம் ! மாநிலத்திலேயே முதலிடம் – இது எங்கள் காலம் ! அசத்திய அரியலூர் மாவட்டம் !
அது அந்தக்காலம் ! மாநிலத்திலேயே முதலிடம் – இது எங்கள் காலம் ! அசத்திய அரியலூர் மாவட்டம் !
+2 பொதுத்தேர்வில் 98.82 சதவிகித தேர்ச்சியுடன் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது, அரியலூர் மாவட்டம். 98.32 சதவிகித தேர்ச்சியுடன் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதத்திலும் முதல் மாவட்டம் அரியலூர்தான். அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 29 அரசுப்பள்ளிகளையும் சேர்த்து 58 மேநிலைப்பள்ளிகளில் பயின்ற 8432 மாணவர்களின் கூட்டு முயற்சியில் இந்த வெற்றியை எட்டிப் பிடித்திருக்கிறார்கள்.
சிமெண்ட் ஆலைகள் தவிர, சொல்லிக்கொள்ளும்படியாக வேறு எந்த தொழில்வளமும் இல்லாத மாவட்டங்களுள் ஒன்று அரியலூர். பொருளாதாரத்தில் மட்டுமல்ல; கல்வியிலும் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக அறியப்பட்ட மாவட்டம்தான் அரியலூர். அதெல்லாம், அந்தக்காலம் என்பதாக, வரலாற்றை திருத்தி எழுதியிருக்கிறார்கள் மாணவச் செல்வங்கள். கடந்த ஆண்டில், 97.25 சதவிகிதத்துடன் மூன்றாடமிடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் இடத்தை எட்டியிருக்கிறார்கள்.
இந்த மாற்றத்துக்கு பின்னணியில் ஆசிரியர்கள் உள்ளிட்டு பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒருவரை கை காட்டுகிறார்கள். அது, அந்த மாவட்டத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர். தற்போதைய அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சராக செயலாற்றும் சிவசங்கர் வழங்கிய உற்சாகமும் பங்களிப்பும்தான் காரணம் என்கிறார்கள்.

தனது சொந்தப் பணம் ரூ.5 இலட்சத்தை செலவு செய்து அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வினா-விடை புத்தகத்தை அச்சிட்டு விநியோகித்திருக்கிறார். அரசுப்பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடி உற்சாகப்படுத்தியிருக்கிறார். கல்வித்துறை அதிகாரிகளையும் இந்த பணியில் திறம்பட ஈடுபடுத்தியிருக்கிறார். அவர்களும் தங்கள் பங்குக்கு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கியிருக்கிறார்கள். படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து, அவர்களும் கௌரவமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதை உத்தரவாதப்படுத்தும் வகையில், காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்தியிருக்கிறார்கள். மாணவர்களின் உடற்சோர்வு, மனச்சோர்வுகளையும் கருத்திற்கொண்டு, சிற்றுண்டிகள் வழங்கி அரவணைத்திருக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள 29 அரசுப்பள்ளிகளில், 79 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையிலும் இந்த இலக்கை அடைந்திருக்கிறார்கள் என்பது கவனத்தை பெறுகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மாநிலத்தின் அமைச்சர் என்பதைத்தாண்டி, தனிப்பட்ட முறையில் வாசிப்பை நேசிப்பவர் அமைச்சர் சா.சி.சிவசங்கர். மனிதநேயத்தோடு மக்களை அணுகுபவர். இப்போதும்கூட, அவரது முகநூல் பக்கத்தில் முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக இரத்தம் தானம் கேட்கும் கோரிக்கை அறிவிப்புதான் முதலில் நிற்கும். தேர்வு நேரத்தில், அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு இரண்டு பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டிய சிக்கலை உணர்ந்தவர் அவர்களுக்கென்று தனி பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

அவர் ஏற்பாடு செய்த பேருந்துகள் அரசுப்பள்ளிகளின் முன்பாக மாணவர்களுக்காக காத்திருந்து ஏற்றிச் சென்றது. ஒரு பேருந்தை தவறவிட்டாலோ, அல்லது அந்த பேருந்து சற்று காலதாமதம் ஆனாலோ, இன்னொரு ஊரில் இறங்கி அடுத்து மாற வேண்டிய பேருந்தை பிடிப்பதில் சிக்கலும் தாமதமும் ஏற்படும் அது தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டுதான் அந்த பேருந்து சேவையை வழங்கியிருந்தார், அமைச்சர் சா.சி.சிவசங்கர். மாணவர்களின் அயராத உழைப்பு; ஆசிரியர்களின் கூட்டுழைப்பு; கல்வித்துறை அதிகாரிகளின் முன்னெடுப்பு இவர்களையெல்லாம் ஒரே நேர்கோட்டுப் பாதையில் ஊக்கம் தந்து வழிநடத்திய மாவட்டத்தின் அமைச்சர் சிவசங்கரின் முன்முயற்சி ஆகியவற்றின் கூட்டுப்பலனாக இந்த உச்சத்தை தொட்டிருக்கிறது அரியலூர் மாவட்டம்.
அன்று, வாழ்நாள் கனவை சிதைத்த நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை ஒருமுகப்படுத்தியது அரியலூர் மாணவி அனிதாவின் மரணம். நீங்கள் வகுக்கும் தகுதி – திறமை அளவுகோல்களால் எங்களை அடக்கிவிட முடியாதென்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள், தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் அனிதாவின் வாரிசுகள்!
— கலைமதி.