எப்போ சார் கரெண்டு பில்லை உயர்த்துவீங்க ? பீதியை கிளப்பிய ஊடகங்கள் !
வாட்சப் வதந்தியும் – மின் கட்டண உயர்வும் – பலியான முன்னணி ஊடகங்கள்
தமிழகத்தில் ஜூலை-01 ஆம் தேதி முதலாக, மின் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக பரபரப்பு செய்திகள் இரண்டு நாட்களாக வட்டமடித்து வந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசிடம் அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார், அமைச்சர் சா.சி.சிவசங்கர்.
இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் சார்பில் வெளியான அறிக்கையில், ”கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பின்வருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தற்சமயம் மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை. எனினும் தொடர்பான ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் ஆணை நடைமுறைப்படுத்துகையில் வழங்கிடும் போது, அதனை வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்கக் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர வேண்டும், எனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்” என்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு மத்தியில், முன்னணி அச்சு ஊடகம் தொடங்கி முன்னணி காட்சி ஊடகங்கள் வரையில் ஒரு சுற்று ஆராய்ச்சியையே நடத்தி முடித்துவிட்டன. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் கட்டண உயர்வு இருக்கும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்து விட்டதாகவும்; அதன்படி, 2023 ஜூலையில் 2.18% உயர்ந்தது; அதனை தொடர்ந்து 2024 ஜூலையில் 4.8% உயர்ந்தது; அதன்படி, இந்த ஆண்டு ஜூலையில் 3% வரை உயரும் என்றெல்லாம் எழுதித்தள்ளின. பணவீக்கம் 3.16% இருப்பதால், அதே அளவுக்கு 3.16% உயர வாய்ப்பிருப்பதாகவும் ஆரூடம் கூறின.

இதன் விளைவாக, இவ்வாறு வெளியான செய்திகளுக்கான பின்னூட்டங்களில், ஏதோ, தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமுலுக்கு வந்துவிட்டதைப் போலவே ”அடாவடி கொள்ளை அராஜகத்தின் உச்சம் என்றெல்லாம்” பொங்கி எழுந்திருந்தார்கள்.
செய்திகளை முந்தித்தருவதில் உள்ள போட்டியில், செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தாமல், அல்லது கேடான உள்நோக்கத்துடன் வெளியிட்டதாகவே கருதவேண்டியிருக்கிறது.
– ஆதிரன்.