பெற்றோர் பெண்ணுக்குத் தரும் சீதனம் கொஞ்சம் நூறுகளில் பவுனும் , கோழைத்தனமும் அல்ல ..
ஃபேஸ்புக் வந்தால் தான் நாட்டு நடப்பே தெரியுது.
திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில் புதுமணப்பெண் ரிதன்யா காருக்குள் விஷமருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம்
அந்தப் பொண்ணு புதுசா வாழப்போன குடும்பத்தில் தன்னால் பொருந்த முடியலைன்னு சொன்ன பிறகும் யாருமே கணவன் மனைவி இருவருக்குமான கவுன்சிலிங் குறித்து யோசிக்காமல் போனது அந்தப் பெற்றோரின் பேரிழப்பிற்கு முதல் காரணமாகி விட்டது.
ஆடியோ கேட்டதில் அந்தப் பெண் சார்ந்த சமூகத்தில் இதையெல்லாம் தவறாகவே கருதாத நடைமுறைகள் காலம் தாண்டியும் காப்பாற்றப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. அவமானம் !
தனக்காக தன் பெற்றோர் நிறைய செலவழித்திருக்கிறார்கள் என்கிற குற்ற உணர்வுடனே அந்தப் பெண் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கிறார் என்பதும் அவள் பேசியிருப்பதில் புரிகிறது. அந்த குற்ற உணர்வே இந்தப் பிரச்சினையின் மூலத் தீர்வைக் கண்டுபிடிக்கும் அத்தனை வழிகளையும் அடைத்து வைத்திருந்து இருக்கிறது.
கவின் என்று குறிப்பிடப்பட்ட அந்த முரடன் படித்தவன் தானா என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது ; ‘ காய்ந்த மாடு கம்பை மேய்ந்த மாதிரி’ன்னு கிராமங்களில் ஒரு வழக்கு சொல்வாங்க. தயங்கும் மனைவியைப் புரிந்து கொள்ள பக்குவப்படுத்த .. காத்திருந்து கையாள கவுன்செலிங் அழைத்துச் செல்ல இத்தனை நாகரீகமும் இந்தத் தலைமுறை ஆளான அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் தானே ? தெரிந்திருக்க வில்லையா ? அல்லது ஆண் எனும் அகங்காரமா ?
‘சரியான காட்டான்’ அவனை இப்படித்தான் திட்டித் தொலைக்கத் தோன்றுகிறது. இந்தத் தற்கொலையை கொலை போல நோக்கக்கூடிய விஷயமாக்கி இருப்பது அங்கே சாதாரண சம்பிரதாயமாகிப்போன வரதட்சணை எனும் கொடுமை ! ஒருவேளை தன் பெற்றோர் தனக்காக நிறைய செலவழித்திருக்க வில்லை என்றிருந்தால் .. ஒருவேளை அந்தப் பெண் தன் வாழ்க்கைக்கான தீர்வை நிச்சயம் இன்னும் தெளிவாக சிந்தித்திருப்பாள்.
பெற்றோர் பெண்ணுக்குத் தரும் சீதனம் கொஞ்சம் நூறுகளில் பவுனும் , கோழைத்தனமும் அல்ல .. என்பதை எப்போது இந்த பெற்றவர்கள் புரிந்து கொள்வார்கள் ??
முன்னூறு பவுன் வாங்கியும் மருமகளைக் காக்கத் தெரியாத ராட்சஸ மாமியாரையும் மாமனாரையும் நான் மிருகங்கள் கணக்கில் சேர்த்து விட்டேன். அவர்களைத் திட்டி ஒரு நேர விரயம் வேண்டுமா என !
ஆக .. கல்வி எதைத்தான் கற்றுத் தருகிறது ??
— ரேவதி மணிபாலன்