சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் !
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கீழத்திருத்தங்கள் செங்கமலப்பட்டி கிராமத்தில் ஸ்ரீநிதி பட்டாசு ஆலை மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர், அப்போது போதிய பாதுகாப்பு வசதி இல்லை என அதிகாரிகள் ஆலையை சஸ்பெண்ட் செய்து மூட உத்தரவிட்டனர்.
மேலும் இந்த ஆலையை உடனடியாக திறக்க கோரி தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு ஆலை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது பேட்டியளித்த பட்டாசு தொழிலாளி மாரியம்மாள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்த பட்டாசு ஆலையில் வேலை செய்கிறேன்.
இந்த தொழிலை விட்டால் வேற எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது இந்த தொழிலை நம்பி தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது.
திடீரென கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆலையில் போதிய பாதுகாப்பு இல்லை என சஸ்பெண்ட் செய்து மூடிவிட்டார்கள், இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாடம் சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் நாங்கள் பொருளாதாரத்தால் மிகவும் பின்தங்கி சிரமப்பட்டு வருகிறோம். உடனடியாக மாவட்ட நிர்வாகமும் அரசும் கவனம் செலுத்தி விரைந்து பட்டாசு ஆலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
— மாரீஸ்வரன்