200 கோடி வரி முறைகேடு! வாய் திறக்காத கம்யூனிஸ்ட் கட்சியினர்! டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு…
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி வரி முறைகேட்டில், கூட்டணி தர்மத்திற்காக வாய் திறக்காமல் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மௌனமாக இருப்பது ஏன்? அதிமுக மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு…
மாநகராட்சியில் கடந்த 10 கால அம்மாவின் ஆட்சி காலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட்டது. 2011 ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக 250 கோடியை அம்மா வழங்கினார், மதுரை மாநகராட்சியின் ஸ்மார்ட் திட்ட பணிகளுக்கு எடப்பாடியார் ஆயிரம் கோடி வழங்கினார்.
அதேபோல மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 1,292 கோடியில் குடிநீர் திட்டத்தை வழங்கினார். 50 கோடியில் மதுரையில் நான்கு மாசி வீதிகளிலும் சாலைகள் பணிகள், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், மதுரை தெப்பக்குளத்தில் நிரந்தர தண்ணீர் தேக்கம், வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள், 300 கோடிக்கு மேல் வைகை கரைகளில் சாலை வசதி இதுபோன்று மதுரை மாநகராட்சி மட்டும் ஏறத்தாழ ஆறாயிரம் கோடி அளவில் அம்மா ஆட்சி காலத்தில் திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது இதை எங்களால் பட்டியலிட்டு சொல்ல முடியும்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சியை முதன்மை மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவோம் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மதுரை மாநகராட்சியை பிடித்த திமுக எந்த வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை.
மதுரை மாநகராட்சியில் 2021-2022 ஆண்டில் 430 கோடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது 2022- 2023 ஆண்டில் 1,251 கோடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது, 2023- 2024 ஆண்டில் 1,751 கோடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. 2024-2025 ஆண்டில் 1,296 கோடி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது, 2025- 2026 ஆண்டில் 1,480 கோடி நிதி நிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,215 கோடி அளவில் மதுரை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது, ஆனால் இந்த நான்காண்டுகளில் சரிவர சாலைகள் போடவில்லை.
முதலமைச்சர் மதுரைக்கு வருகிறார் என்றால் அவர் வரும் சாலை மட்டும் போடப்படுகிறது. தெருவிளக்கு பராமரிப்பு இல்லை, கடந்த நான்காண்டுகளில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் செய்த பணிகளை வெள்ளை அறிக்கையாக மக்களுக்கு விட வேண்டும். இதற்கெல்லாம் மேலே 200 கோடிக்கு மேல் வரிமுறைகேட்டை செய்துள்ளார்கள். இன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இதுகுறித்து வாய் திறக்கவில்லை?
அதிமுகவும், பாஜகவும் தும்மினால் கூட அதற்கு குறையை கண்டுபிடித்து அதில் விளம்பரம் தேடிக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இது குறித்து வாய் திறக்கவில்லை ? முதலமைச்சர் கோபித்துக் கொள்வார் என்பதற்காக வாய் திறக்கவில்லையா? அடித்தட்ட மக்களுக்கு வீட்டு வரியை உயர்த்தி விட்டு, வணிக நிறுவனங்களுக்கு வீட்டு வரியை விதித்ததுஉங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடத்தில் ஓட்டுக்களை பெற்ற நீங்கள் வாய் திறக்காமல் இருப்பது மர்மம் என்ன? என கேள்வி எழப்பினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்