எடப்பாடி பழனிசாமி நம்பி அல்ல!
”முத்தலாக் தடை மசோதாவை அ.தி.மு.க. எதிர்க்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். முத்தலாக் விஷயத்தில் கண்மூடித்தனமாகச் செயல்படுகிறது மத்திய அரசு. வகுப்புவாத அரசியலைச் செயல்படுத்த நினைக்கிறது பி.ஜே.பி”
– 2018 டிசம்பர் 27-ம் தேதி நாடாளுமன்றத்தில் இப்படி உரையாற்றினார் அன்வர் ராஜா.

”முத்தலாக் தடை மசோதா மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் சம உரிமைகளையும், நல் வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள பாலினச் சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்டத் திருத்த மசோதா மேலும் வலுச் சேர்க்கும். சமூக சடங்குகளைப் பெண்கள் மீது திணிக்காமல், சம உரிமைகளை வழங்கிடும்”
– 2019 ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் குமார் இப்படிப் பேசினார்.
இந்த இரண்டு உரைகளையும் ஒரே கட்சிதான் பேசியது. இந்த இரண்டு பேரும் அதிமுக எம்.பி-கள்தான். முன்னது 16-ஆவது நாடாளுமன்றம். பின்னது 17-ஆவது நாடாளுமன்றம்.
2018 டிசம்பர் 27-ம் தேதிக்கும் 2019 ஜூலை 25-ம் தேதிக்கு இடைப்பட்ட 211 நாட்களில் தன் நிலைப்பாட்டையே அ.தி.மு.க மாற்றிக் கொண்டது?
”முத்தலாக் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் நிலைப்பாட்டைத்தான் தெரிவிக்கிறேன்” எனச் சொல்லி அன்றைக்கு முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்துப் பேசினார் அன்வர் ராஜா. ஆனால், பன்னீர்செல்வத்தின் மகன் அதே முத்தலாக் மசோதாவை ஆதரித்துப் பேசினார். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா. ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு தமிழிலும் பேசினார். ”முத்தலாக் மசோதா முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாகத் தலையிடுகிறது. இது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இறைவனுக்கே எதிரானது. முத்தலாக் மசோதாவில் 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும் பிரிவுக்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்றெல்லாம் சீறிவிட்டு, எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளையும் மேற்கொள் காட்டினார். அன்வர் ராஜா.
” ‘தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்வதன் வருந்தி ஆகணும். எனவே, நீங்கள் வேண்டுமென்றே இதைச் செய்தீர்கள் என்றால் அதற்காக வருந்தித்தான் தீர வேண்டும். வேறு வழியே இல்லை” எனக் கர்ஜித்தார் அன்வர் ராஜா.
நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா ஆற்றிய உரையை ‘முத்தலாக் உரிமை மீறும் செயல்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்கள். அந்தப் புத்தகத்தின் வெளியிட்டு விழாவுக்கு அப்போதை மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தலைமை தாங்கினார். செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயக்குமார், நிலோபர் கபில் என ஆறு அமைச்சர்கள் அந்த விழாவில் பங்கேற்றனர். அந்த விழாவில் பேசிய வேலுமணி, “நாடாளுமன்றத்தில் பேசி நமது நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும் என அன்வர் ராஜாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் அனுமதி வழங்கினார். அன்வர் ராஜாவின் உரை வீரம் மிக்கது” என்றார்.
“அம்மாவின் வழியில் செயல்படும் அரசு சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும். அ.தி.மு.க-வின் கொள்கை என வரும்போது நாங்கள் எப்போதும் அம்மாவின் வழியில் உறுதியாக இருப்போம்” என அந்தப் புத்தக வெளியிட்டு விழாவில் பேசினார் அமைச்சர் தங்கமணி. இப்படி முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிராக இருந்த அ.தி.மு.க-வின் நிலைப்பாடு அப்படியே பல்டி அடித்து மோடி ராகம் பாடியது.
தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகள் மாறுவது அரசியலில் நடக்கும் சம்பிரதாயம். ஆனால், நாடாளுமன்றத்துக்கு நாடாளுமன்றம் கொள்கைகளையே மாற்றும் புதிய அரசியல் தியரியை எழுதியது அதிமுக.
முத்தலாக் தடை மசோதாவை ஆதரித்துப் பேசிய ரவீந்திரநாத் தன் பேச்சில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். ”சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான், கோயிலுக்குப் போகும் போது, நமக்கு முன்பாக முதல் வரிசையில் நின்று கடவுளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி இரட்டை வேடம் போட்டு மக்களைக் குழப்புகிறீர்கள்” என்றார்.
இரட்டை வேடம் பற்றியெல்லாம் பேசிவிட்டு, முத்தலாக் விஷத்தில் ரவீந்திரநாத்தே இரட்டை வேடம் போட்டார். கடவுள் இல்லை எனச் சொல்லிவிட்டு கோவிலில் முன் வரிசையில் நிற்பவர்களைத் தன் பேச்சில் குறிப்பிடும் போது ”டபுள் ஸ்டாண்ட் எடுக்கிறார்கள்” என்றார் ரவீந்திரநாத். முத்தலாக் தடை விஷயத்தில் அ.தி.மு.க எடுத்ததும் அக்மார்க் டபுள் ஸ்டாண்ட்தான்.
எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக விசுவாசியான அன்வர் ராஜா இன்றைக்கு திமுகவில் சேர்ந்திருக்கிறார். பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகும் அதே கொள்கையுடன் அதிமுக இருக்கும் என நினைத்தார் அன்வர் ராஜா. ஆனால், பழனிசாமியால் அதிமுக கொள்கையால் நடைபோட முடியவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக. அப்போது, “தமிழகச் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்தால் தலைவர்களுக்கு மகிழ்ச்சி; சேராவிட்டால் அதிமுக தொண்டர்களுக்கு மிக்க மகிழ்ச்சி!” என்று அன்வர் ராஜா தன் வருத்தத்தைப் பதிவு செய்தார்.
அதன் பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைக் கூட்டணியில் அதிமுக சேர்த்துக் கொள்ளவில்லை. அதனால், அன்வர் ராஜா அதிமுகவில் நீடித்தார். அந்தத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை’’ என்று பேசினார். அதனால், அன்வர் ராஜா அதிமுகவில் தொடர்ந்தார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற வாக்குறுதியை பழனிசாமி காப்பாற்றவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டார். விளைவு அன்வர் ராஜா திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பயணத்தைத் தொடங்கி முதல் விக்கெட்டை இழந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அன்வர் ராஜா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அறிவாலயம் தாவப் போகிறார்கள் என்பதை உணர்ந்தே ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் முஸ்லிம்களைப் பற்றியெல்லாம் உருகினார் பழனிசாமி. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் “அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினர் அரண் போல் பாதுகாக்கப்பட்டனர்” என்று சொன்னார். ’’ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் ஆட்சி அமைக்கும். எங்களுக்குக் கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை’’ எனச் சொல்லி தன் பாஜக கூட்டணியிலிருந்து விலகவும் தயார் என்பது போல சமிக்ஞை செய்தார். இவையெல்லாமே தன்னுடைய சகாக்களைத் தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி செய்த நாடகம் என்பது குழந்தைக்கு கூட தெரியும் அன்வர் ராஜாக்களுக்கு தெரியாமல் இருக்குமா?
அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து வெளியேறப் போகிறார் என்பதை தெரிந்து கொண்டதால்தான் திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்ப்பது போலப் பேசினார். ஆனால், அன்வர் ராஜா போன்றவர்களால் பழனிசாமியையோ அவரது பேச்சையோ நம்பவில்லை.
‘தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் தப்பு செய்வதன் வருந்தி ஆகணும்’ என முத்தலாக் மசோதாவில் எம்.ஜி.ஆர் பாடலைப் பாடினார் அன்வர் ராஜா.

பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தது. தவறிச் செய்தது அல்ல. தெரிந்தே செய்த தப்பு. பழனிசாமி திருந்தவும் மாட்டார்; வருந்தவும் மாட்டார். பாதம் தாங்கி பழகிவிட்ட பழனிசாமியை நிமிர்த்தவே முடியாது.
அன்வர் ராஜா பாடிய எம்.ஜி.ஆர் பாடலில் இன்னொரு சரணமும் உண்டு.
அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல்
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப் போல்
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல்
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி!
எடப்பாடி பழனிசாமி நம்பி அல்ல!
– எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி