காய்கறி விதைத் தொகுப்பு மற்றும் பழச்செடித் தொகுப்பு விநியோகம்!
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் வெளியிடப்பட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டம் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காய்கறி விதைத் தொகுப்பு மற்றும் பழச்செடித் தொகுப்பு வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஊட்டச்சத்து மிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக ரூ.60/- மதிப்பிலான தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பும், ரூ.100/-மதிப்பிலான பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
பயனடைய விரும்பும் பயனாளிகள் தங்களது ஆதார் அல்லது குடும்ப அட்டை நகலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பித்து தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இத்திட்டத்தின்கீழ் ஒரு பயனாளி அதிகபட்சமாக இரண்டு தொகுப்புகள் வரை மட்டுமே பெற இயலும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் .வே.சரவணன் இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.