இதுதான் தமிழ்நாடு !
அகரம் நிறுவனத்தின் மூலம் திரைக்கலைஞர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ஏழை – எளிய குடும்பத்தினரின் கல்விக் கனவை நிறைவேற்றி அவர்களை மருத்துவர்களாக-பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறைகளில் வல்லுநர்களாக்கியிருக்கிறார்கள். இது ஒரு மகத்தான சாதனை.
அறக்கட்டளை ஒன்றின் இத்தகையப் பணியைப் பாராட்டும் நிலையில், அரசின் சார்பிலான செயல்பாடுகள் குறித்த கேள்விகள் எழுவது இயற்கை. தமிழ்நாட்டிற்கானத் தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே அமைகின்றன என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி நோக்கத்தில் அந்தந்த பகுதிக்கேற்ற தொழிற்சாலைகளும், அதன் மூலமான வேலைவாய்ப்புகளும் கடந்த நான்காண்டுகளாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
நெற்களஞ்சியம் எனப் போற்றப்பட்ட தஞ்சை டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மிகவும் வளர்ச்சி குறைந்தவையாக உள்ள நிலையில், தஞ்சையில் நியோ டைடல் பூங்கா தொடங்கப்பட்டதுடன், நாகை முதல் தஞ்சை வரையிலான வேளாண் பெருவழித்தடம், திருவாரூர் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா, நாகையில் மினி டைடல் பூங்கா போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகள், வடமாவட்டங்களில் பல சிப்காட் தொழிற்பேட்டைகள், மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கானத் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
தென்தமிழ்நாட்டிற்கானத் தொழில் வளர்ச்சியின் தேவை குறித்து கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மிகவும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் சுப்பிரமணிய சாமியுடன் சேர்ந்து சதி செய்து நிறுத்திவிட்ட நிலையில், தென்மாவட்ட இளைஞர்களை ஈர்க்கும் சாதி அமைப்புகள், போதை பழக்கங்கள், இதர காரணங்களினால் அவர்கள் திசை திரும்பும் நிலையை மாற்றிடும் வகையில், புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது.
2024 ஜனவரியில் சென்னையில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 17 மாதங்களிலேயே உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட், தூத்துக்குடியில் தன்னுடைய வி.எஃ.ப்.6, வி.எஃப்.7 வகை மின்சார கார்களின் உற்பத்தியைத் தொடங்கி, தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.
2024 பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் மெடிக்கல் நாட்டப்பட்டு 2025 ஜூலையில் முழுமையான அளவில் உற்பத்தியை தொடங்கும் வகையில் விரைவாக இந்த நிறுவனத்தின் முதலீட்டையும் அதன் வாயிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதில் தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா முனைப்புடன் செயல்பட்டதை முதல்வர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
வின்ஃபாஸ்ட் என்பது வெளிநாட்டு நிறுவனம் என்றாலும் அதில் பணியாற்றுகிறவர்கள் தமிழ்நாட்டினராக அதுவும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். தொடக்க விழா மேடையில் அவர்களுக்கான பணி ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்கள், டைடல் பார்க்குகள் ஆகியவற்றில் அந்தந்த பகுதியில் உள்ளவர்கள், குறிப்பாக பெண்கள் அதிகளவில் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். அவர்களுக்கான கல்வியையும் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைக்காகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். அந்த அமைதிப் புரட்சியுடனான பயணம் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
— கோவி.லெனின், மூத்த பத்திரிகையாளர்