அங்குசம் சேனலில் இணைய

பிரபல உயர்கல்வி நிறுவன இயக்குநர் மீது பாய்ந்த வன்கொடுமை வழக்கு ! பின்னணி என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் என்றழைக்கப்படும் BIM நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநர் அசித் குமார் பர்மாவுக்கு எதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி பீமநகரை சேர்ந்த பேராசிரியர் சி.என்.எஸ்.ராம்நாத்பாபு என்பவர் அளித்த புகாரின் கீழ் இந்த வழக்கு பதிவாகியிருக்கிறது. இந்திய அளவில் பிரபலமான உயர்கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை அதிர்ச்சிகரமானது மட்டுமல்ல; சற்றே ஆச்சர்யமானதும் விந்தையானதும்கூட.

பேராசிரியர் ராம்நாத்பாபு
பேராசிரியர் ராம்நாத்பாபு

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பொதுவில் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சாதிய ரீதியில் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வரும் ஒன்றுதான். ஆனால், பெரும்பாலும் அவை கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. சம்பந்தபட்ட மாணவர் அல்லது பேராசிரியர்களின் தனிப்பட்ட விவகாரமாகவே சுருக்கப்படுவதும் உலக வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருப்பதே, பெரிய விசயம்தான்.

பேராசிரியர் ராம்நாத்பாபு இதே பிம் நிறுவனத்தில், உதவிப்பேராசிரியராக இரண்டே கால் ஆண்டுகள் பணியாற்றியவர். தனக்கான தகுதிகாண் பருவம் நிறைவடைந்த பின்பும், சுமார் 83 நாட்கள் கழித்து எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி வேலையிலிருந்து தடாலடியாக நீக்கப்பட்டவர். சட்டவிரோத பணிநீக்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இறுதியாக, நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு அவரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டுமென்று உத்தரவிட்டும் அதனை அமல்படுத்த மறுத்து வருகிறது பிம் நிர்வாகம்.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்

இந்த பின்புலத்தில்தான், இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பிம் நிறுவனத்தில் தான் பணியாற்றிய காலத்திலிருந்தே, தற்போதைய இயக்குநர் அசித்குமார் பர்மாவால் தொடர்ந்து சாதிய ரீதியிலான தாக்குதலுக்கு ஆளாகி வந்திருக்கிறார் பேராசிரியர் ராம்நாத்பாபு.

மற்ற பேராசிரியர்களுக்கு ஒதுக்கப்படுவதைப் போல, பிரதான பாடப்பிரிவுகள் அவருக்கு ஒதுக்காமல், மற்றவர்களுக்கு ஒதுக்கியது போக எஞ்சிய, இரண்டாம் பட்சமான அல்லது விருப்ப பாடங்களாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டுமே ராம்நாத் பாபுவுக்கு ஒதுக்கி வந்திருக்கிறார் அசித் குமார் பர்மா. ராம்நாத் பாபுவின் சாதிய பின்னணியை தெரிந்து கொண்டு, அவரை இழிவு படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு அவமதிப்புகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். சக பேராசிரியர்கள் முன்னிலையில் அவரை மட்டம் தட்டுவது. இழிவாக பேசுவது. கற்பித்தலுக்கு இலாயக்கற்றவர் என்பது. அதுநாள் வரையில் இருந்த நடைமுறைகளை மாற்றி, இரகசியமான முறையில் மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்த மதிப்பீடுகளை பெறுவது, அதை வைத்து அவரை இழிவுபடுத்துவது என பல்வேறு வகைகளில் தொடர்ந்து அவமானத்திற்குள்ளாக்கியிருக்கிறார் அசித் குமார் பர்மா.

உச்சகட்டமாக, கல்வி நிறுவனத்தில் தேங்கியிருந்த பழைய பேப்பர், பிளாஸ்டிக், இரும்பு சாமான்களை எடைக்கு போடும் பொறுப்பை ராம்நாத்பாபுவிடம் வேண்டுமென்றே ஒப்படைத்திருக்கிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியல்லாத வேறு பிற பணியாளர்களை கொண்டோ,  அல்லது செக்யூரிட்டிகளை கொண்டோ அந்த பணியை செய்திருக்க முடியும் என்ற நிலையில், பலர் முன்னிலையில் அவரை இழிவு படுத்த வேண்டுமென்ற உள் நோக்கத்திலிருந்தே அவ்வாறு செய்யுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார். எச்சில் வைத்து குடித்த டம்ளரை கழுவி வை என்று கட்டளையிடுவது வரையிலான தரம் தாழ்ந்து நடத்தியிருக்கிறார்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

அசித்குமார் பர்மா
அசித்குமார் பர்மா

தன்னை உயர் சாதியினர் என்றும் சத்ரியன் என்றும் பெருமையாக குறிப்பிட்டுக் கொள்ளும் அசித் குமார் பர்மா, உன்னையெல்லாம் இங்கு யார் வேலைக்கு வர சொன்னது? ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ள ஏதோ ஒரு கல்வி நிறுவனத்திற்கு போக வேண்டியதுதானே? என்றெல்லாம் கேட்டிருக்கிறார். நீயாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்பு என்று விரட்டியிருக்கிறார். சக பேராசிரியர்கள் சாட்சியாகவே, உன்னை விரைவில் வேலையைவிட்டு தூக்க போகிறேன் என்று சவால் வேறு விட்டிருக்கிறார்.

இந்த பின்புலத்திலிருந்துதான், தற்போது ராம்நாத்பாபு முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலிருந்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் எளிதில் நடந்துவிட்ட காரியம் அல்ல. மூன்றாண்டு காலம் நடையாய் நடந்து, மனுவுக்கு மேல் மனு போட்டு இந்த இடத்திற்கு நகர்த்தி கொண்டு வந்திருக்கிறார், பேராசிரியர் ராம்நாத் பாபு.

All india council for technical education (AICTE), AICTE public grivence redressal cell, National commission for scheduled castes, convenor, registrar, vice chancellor – BDU, union cabinet minister for education, secretary dept of higher education, ministry of social justice and empowerment govt of india என தொடர்புடைய துறைகள் அத்தனைக்கும் முதல்வர், பிரதமர், கவர்னர், ஜனாதிபதி, தமிழகம் உள்ளிட்ட எம்.பி.க்கள் வரையில் ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேருக்கும் தனக்கு எதிராக இழைக்கப்படும் சாதிய ரீதியிலான வன்கொடுமைகளை புகாராக தெரிவித்திருக்கிறார். ஆனாலும், எந்த பலனும் இல்லை.

இறுதியாக, நீதிமன்ற வழக்கில் ஆதாரங்களுடன் இவற்றையெல்லாம் முன்வைக்கப்பட்டதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது தீர்ப்பில் சாதிய ரீதியில் இவர் பழிவாங்கப்பட்டிருப்பதை கோடிட்டு காட்டியிருந்தார். அந்த தீர்ப்பு மற்றும் முந்தைய தொடர் நடவடிக்கைகளின் விளைவாகத்தான் தற்போது குறைந்தபட்சம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி BIMஇதுநாள் வரையில் தனிப்பட்ட பிரச்சினை என்பதாகவே, தமக்கு தெரிந்த அளவில் புகார் அளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது என்பதாக சட்டப்பூர்வமான வழிகளை பின்பற்றி அதில் குறிப்பிடத்தக்க முதல் கட்ட வெற்றியையும் எட்டியிருக்கிறார். ஆனாலும், அவரால் இன்னும் பிம் வளாகத்திற்குள் நுழைய முடியவில்லை.  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வேண்டுமானாலும் தொடுத்துக் கொள். உன்னை வேலையில் மீண்டும் சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார் பிம் இயக்குநர் அசித் குமார் பர்மா.

வாயில் மலத்தை திணிப்பதும், சிறுநீரை கழிப்பதும், சாதி மாறி காதல் திருமணம் செய்து கொள்பவர்களை அறுவாள் கொண்டு வெட்டி சாய்ப்பதும்தான் சாதிய வன்மம் என்றில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் வரைமுறையின்றி நிகழ்த்தப்படும் இதுபோன்ற போக்குகளும் சாதிய வன்மங்கள்தான். ரோஹித் வெமூலா தொடங்கி சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் மீனா கந்தசாமியின் உறுதியான போராட்டம் வரையில் பல உதாரணங்கள் இருக்கின்றன. இவர்களின் வரைமுறையற்ற அதிகாரத்தை எதிர்த்து போரிடும் வலிமையின்றி தற்கொலை செய்து கொண்டு மாண்டவர்களின் எதிர்மறை அனுபவங்களும் உண்டு. அந்த வரிசையில் தமிழகத்தின் முன்னணி உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் தனக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட வன்கொடுமை அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார், பேராசிரியர் ராம்நாத் பாபு. இதுநாள் வரையில் தனிப்பட்ட முறையில் போராடி வந்தவர் இன்று சமூகத்தின் அறம் சார்ந்த ஆதரவை வேண்டி நிற்கிறார். தேரை இழுத்து தெருவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார், ராம்நாத் பாபு. என்ன எதிர்வினையாற்றப் போகிறது, தமிழ்ச்சமூகம் ?

 

    —          இளங்கதிர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.