வழிதவறி சென்ற சிறுமியை வன்புணர்வு செய்த ஆசாமிக்கு ஆயுள் தண்டனை !
கடந்த 2021 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமி தனது அம்மாவிடம் கோபித்துக் கொண்டு விடியற்காலை 3 மணி அளவில் தஞ்சாவூர் பஸ் ஏறி கரந்தை பஸ் ஸ்டாப்பில் இறங்கி தனியே நின்றுள்ளார். இந்நிலையில் தனியே நின்ற சிறுமியிடம், தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் ராஜசேகர் (34/25) என்பவர், ஏன் இங்கு நிற்கிறாய், எங்கிருந்து வந்தாய், எங்க வீட்டிற்கு வா எங்க வீட்டில் பாப்பா ஒருவர் உள்ளார் என்று கூப்பிட்டு சிறுமி வர மறுத்தும் நாளைக்கு உன் அம்மாவிடம் கூட்டி போய் விடுகிறேன் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக, ஆசை வார்த்தைகள் கூறி, வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், கீழப்பழூர் காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் பின்பு போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணையின் அடிப்படையில், கீழப்பழூர் காவல்துறையினர் எதிரி ராஜசேகரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஆக-25 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
எதிரி ராஜசேகரை குற்றவாளி என தீர்ப்பளித்து, சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்த குற்றத்திற்காக, எதிரிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதமும் (அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் காலம் சிறை தண்டனை), சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதமும் (அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனை) விதித்து நீதிபதி மணிமேகலை தீர்ப்பளித்திருக்கிறார். மேலும் சிறுமிக்கு பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு நிவாரணம் நான்கு லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.