குவாரியை நடத்துவதில் தகராறு ! கத்திக்குத்தில் முடிந்த பேச்சுவார்த்தை ! ஒருவர் பலியான சோகம் !
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் கல்குவாரி பிரச்சனை தொடர்பாக வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உறவினர்கள் சாலை மறியலால் பதட்ட சூழல் உருவாகியிருக்கிறது.
தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலுகா, கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சியில் சங்கிலிக்கரடு என்ற இடத்தில் வருவாய்த்துறை சொந்தமான கல்குவாரிகள் உள்ளது.
கல் உடைத்து எடுப்பதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சதீஷ்குமார் என்ற சசிக்கு சொந்த ஊர் காமய கவுண்டன்பட்டி. அங்குள்ள சங்கிலிக்கரடு பகுதியில் உள்ள கல்குவாரியில் தங்களுக்கு கல் உடைப்பதற்கு உரிமை உண்டு. அதனால் தாங்களும் கல் உடைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சதீஷ்குமார் என்ற சசி தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் இந்த பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கனிம வளங்கள் அருகே உள்ள கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதை தடுத்திட வேண்டும் கனிமவள கொள்ளையை தடுத்திட வேண்டும் என்று கூறி சசி சார்ந்திருக்கும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினருடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தி உள்ளார்.
இந்த கல்குவாரி பிரச்சினை தொடர்பாக சசிகுமாருக்கும் எதிர் தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இரவு காமய கவுண்டன்பட்டியில் உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் சசியை காமய கவுண்டன்பட்டியில் செயல்பட்டு வரும் கல்குவாரி சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளனர். இதன் காரணமாக சசி நேற்று இரவு பேச்சுவார்த்தைக்காக அங்கே சென்று உள்ளார்.
அப்போது அங்கு பேச்சு வார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்போது அங்கு இருந்த காமைய கவுண்டன்பட்டி பகுதியைச் சார்ந்த சின்னசாமி என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசியை கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சசி கீழே சரிந்து விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சசியை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சசியின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் மற்றும் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு இந்த தகவல் கிடைக்கப்பெற கம்பம் அரசு மருத்துவமனை முன்பு குவியத் துவங்கினார்.
உடனடியாக சசியை கத்தியால் குத்தியவர்கள் மற்றும் குத்துவதற்கு காரணமாக இருந்தவர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் குமுளி நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சசி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடனே மீட்டு பரிசோதனைக்காக அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்று வைத்தனர். சசி உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் அவரது உறவினர்கள் கடும் கொந்தளிப்போடு காணப்பட்டனர்.
உடனடியாக இந்த சசிகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காரணமான சுமார் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். குவாரி விவகாரத்தில் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
— ஜெய்ஸ்ரீராம்