இவர்கள் செய்கிற பணிகளையெல்லாம் நினைத்துப் பார்த்தால் தூக்கமே வராது … கண் கலங்க வைத்த முன்னாள் கலெக்டர் !
இவர்கள் செய்கிற பணிகளையெல்லாம் நினைத்துப் பார்த்தால் தூக்கமே வராது … கண் கலங்க வைத்த முன்னாள் கலெக்டர் !
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றியவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வை.மூர்த்தி. 2025 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த சேவை நிறுவனம் என்ற விருதை முதல்வர் கரங்களால் பெற்ற Society for education village action and improvement (SEVAI) தொண்டு நிறுவனத்தின் 40-வது ஆண்டு விழா மற்றும் சேவை நிறுவன இயக்குநர் சேவை கோவிந்தராஜுன் 50 ஆண்டுகள் சமூகப் பணிக்கு பாராட்டு விழா ஆக-29 அன்று திருச்சி பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரில் மேநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த விழாவில், பங்கேற்ற முன்னாள் ஆட்சியர் வை.மூர்த்தி திருச்சி மாவட்டத்தில் தான் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் முன்னோடி திட்டங்கள் பலவற்றை சேவை தொண்டு நிறுவனத்தின் வழியே அறிமுகப்படுத்திய தருணங்களை நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார்.
அரசுக்கு இணையாக, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயல்பாடு இப்படியெல்லாம் இருந்திருக்கிறதா? என்று உணர்ச்சிமேலிட வைக்கிறது அவரது உயிரோட்டமான உரை.
ஸ்கோப் நிறுவனமும் சேவை கோவிந்தராஜும் என் இரு கண்கள் !
என்னை யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. என்னுடைய உயிர் நண்பர்கள். எனது இரு கண்கள். சேவையும் ஸ்கோப்பும். இதற்குமேல் விளக்கம் தேவையில்லை. நான் செயல்பட அடிப்படை காரணம். என் தாய்க்கும் தந்தைக்கும் இணையான இந்த இரண்டு கண்கள்தான். நீங்கள் இந்த நாட்டை ஆளக்கூடியவர்கள். இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பிள்ளையும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உங்களை அர்பணித்துக்கொள்ள வேண்டும். அதற்கான அடித்தளத்தை சேவை செய்து கொண்டிருக்கிறார். இவர்களெல்லாம் மக்களின் சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.

மாவட்டத்தின் ஆட்சியராக அல்ல; மக்களின் ஊழியனாக …
நான் இந்த மாவட்டத்திலே ஒரு சேவகனாக பணிபுரிந்தேன். மக்களுக்கு சேவை புரிகின்ற பணிதான் எனக்கு வழங்கப்பட்டது. நான் மாவட்ட ஆட்சியர் அல்ல. இந்த மாவட்டத்தின் ஊழியனாக பணியாற்றினேன். நான் பணியாற்றிய காலத்தில் மக்களுக்கு ஏதேனும் செய்திருந்தால், அரசாங்கத்தின் திட்டங்கள் என்பது வேறு. அந்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் அமைப்புகள் என்பது வேறு. அந்த இரண்டையும் ஒன்றாக்கி, அவர்களெல்லாம் அரசாங்கத்தின் அங்கங்கள் என்ற அளவிலே, வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத ஒரு சிறப்பை இவர்கள்தான் உருவாக்கித் தந்த தளகர்த்தகர்களாக இருக்கிறார்கள். நான் இந்த மாவட்டத்தில் பணியாற்றி சென்றது, ஒரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால். ஆனால், நான் ஒவ்வொரு முறையும் விழுங்குகிறேனே … ஒவ்வொரு முறையும் கண் சிமிட்டுகிறேனே … அப்பொழுதெல்லாம் என் சிந்தனையில் என் உடம்பில் என் உணர்வில் கலந்து நிற்பவர்கள் யாரென்று சொன்னால் இப்படி மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய சேவை நிறுவனங்கள்தான். அதில் தலையாய சேவை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இந்த மேடையிலே அமர்ந்திருக்கும் பெருமக்கள்தான்.
சேவை – குடும்பத்தை சேர்ந்தவன் நான் !
எப்பொழுதும் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மக்களினுடைய வளர்ச்சிக்கும் வித்திட்டவர்கள்தான். அதனால்தான், இந்தியாவிலேயே,மிக உயர்ந்த விருதான பத்மபூசன் விருதை ஸ்கோப் அவர்களுக்கு இந்த நாடு தந்திருக்கிறது. அதே போல சேவை நிறுவனத்திற்கும் தர நாடு தயாராகிக்கொண்டிருக்கிறது. அதன் தொடக்கமாக தமிழக அரசு சிறந்த சேவை நிறுவனத்துக்கான விருதை கொடுத்து பாராட்டியிருக்கிறது. அதற்காக தமிழக அரசை பாராட்டுவதற்காகத்தான் இங்கே நானாகவே வந்திருக்கிறேன்.
நீங்கள் எல்லோரும் என் குடும்பத்தை சார்ந்தவர்கள். அதனால்தான், நான் என் அப்பா வீட்டுக்கு அம்மா வீட்டுக்கு வருவதைப் போல வந்திருக்கிறேன். நான் ஒன்றும் அன்னியன் அல்ல. நாம் நம் குடும்பத்தை சேர்ந்த, சேவையை சேர்ந்த அங்கத்தினர்கள்.
இதனைவிட அன்பானவர்களை பார்க்க முடியுமா?
ஒரு அரசு எப்படி செயல்படுகிறதோ, அது போல சேவையை செயல்பட வைக்கக்கூடிய திறமையைப் பெற்றவர் நமது சேவை நிறுவனர் சேவை கோவிந்தராஜ் அவர்கள். ஒரு அரசு நினைத்தால், எதையும் செய்ய முடியும். அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் யாரென்று சொன்னால், தளகர்த்தகர்களாக இருப்பவர்கள் யாரென்று சொன்னால் இங்கே அமர்ந்திருப்பவர்கள்தான். அதனால்தான் அவர்களைப் பற்றி நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். இது வகுப்பிலே சொல்லிக் கொடுத்தால் தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இதுபோன்ற கூட்டத்தில் கிடைக்கிற செய்தி இருக்கிறதே, அது மிக மிக அவசியம்.

நீங்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகலாம். எப்படி ஆகலாம் என்று சொன்னால், நீங்களெல்லாம் அழகான கட்டிடத்தில் அழகான ஆடிட்டோரியத்தில் அழகான ஒரு சூழலில் திறமைசாலிகளான ஆசிரியர்கள் உள்ள சூழலில் படிக்கிறீர்கள். நான் படித்தது மரத்தின் கீழ். உடைந்த பென்சில். கரியும் தூளும் போட்டு கரும்பலகை தயார் செய்வோம். நீங்கள் பெற்றிருப்பதை போலவே, எங்கள் ஆசிரியர்கள் திறமைசாலிகள். நாங்க படிச்சது கிராமத்துல. மதியம் என்ன சாப்பாடு தெரியாது. சாப்பாட்ட பத்தின நினைவுகளே இருக்காது. ஏனென்றால், வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டுமென்று வெறியோடு படித்தவர்கள் நாங்கள். கூழை குடித்துவிட்டு மதியானத்துக்கு ஓடுவோம். நாங்கள் படித்தது அந்த சூழலில். நீங்கள் படிப்பது பைவ்ஸ்டார் சூழல் என்று சொன்னால், நாங்கள் ஸ்டாரே இல்லாத பள்ளிக்கூடத்துல படிச்சோம். அப்படிபட்ட சூழலில் படித்த முதல் தலைமுறை பட்டதாரியான நானே, மாவட்ட ஆட்சியர் ஆகியிருக்கிறேன் என்று சொன்னால், உங்களால் ஏன் முடியாது. அதனால் இன்றிலிருந்து நீங்கள் முயற்சி பன்னனும்.
ஐ.ஏ.எஸ். மட்டும்தான் ஆகனும்னு நினைக்க வேண்டாம். ஐ.ஆர்.எஸ். ஆகலாம். இன்கம்டாக்ஸ் ஆபிசர், கஸ்டம்ஸ் ஆபிசர் ஆகலாம். பலதரப்பட்ட படிப்புகள், பலதரப்பட்ட பதவிகள் எல்லாம் இருக்கு. நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உணர்வோடு படித்தால், நான் சொன்ன பதவிகளில் ஏதாவது ஒரு பதவியை நிச்சயமாக பெற முடியும்.
1200 பிள்ளைகள் படிக்கக்கூடிய இந்த பிள்ளைகள் எல்லோருக்கும் காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, எல்லோருக்கும் உதவித்தொகை, படிப்பதற்கேற்ற சூழல், திறமைசாலியான ஆசிரியர்கள் அன்பான நிர்வாகம். இதனைவிட அன்பானவர்களை பார்க்க முடியுமா?

அரசுக்கு இணையான நிர்வாகம் !
சேவை கோவிந்தராஜும், ஸ்கோப் நிறுவனமும் செய்த திட்டங்களை பட்டியல் போட்டால், மதியான நேரம் வந்து பசி வந்திடும். ஆனால், இது அறிவுப்பசி. ஒவ்வொரு குழந்தைகளும் தெரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. இந்த கிராமத்துல அறிவோம் வாங்க-னு ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அறிவுச்சுரங்கம், வாழ்ந்து காட்டுவோம், உயர்ந்து காட்டுவோம், அறுசுவை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, ஆதரவற்றவர்களுக்கான திட்டம் என சொல்லிக் கொண்டே போகலாம். இதெல்லாம் என்ன அரசாங்கத்திடமிருந்து வந்த திட்டங்கள்னு நினைக்கிறீங்களா? ஊர்கூடினு ஒரு நிகழ்ச்சி, மக்களைத்தேடி மனுநீதினு ஒரு திட்டம். இந்த திட்டங்களையெல்லாம் தயாரித்தவர்கள் சென்னையில இல்லை, அமைச்சர்கள் இல்லை, அரசாங்கம் அல்ல. இங்கே உட்கார்ந்து இருக்கிறார்களே, இவர்கள்தான் தயாரித்துக் கொடுத்தார்கள்.
ஸ்கோப் தந்த இந்தியாவின் முன்னோடி திட்டம் !
கிராமம் கிராமமாக போவோம். சில பேர் ஸ்லம் என்பார்கள். நான் உறைவிடம் என்பேன். அது ஒரு குடியிருப்பு. உன்கிட்ட வசதியா இருக்க அஞ்சு மாடியில இருக்க. என்கிட்ட வசதியில்ல நான் கூரையில இருக்கேன். அது என் குடியிருப்பு. நான் அதை பெருமையாக கருதியிருக்கிறேன். அங்கே வசிக்கும் பெண்கள் எல்லாம் காலையில எழுந்தால் சாயந்திரம் பொழுது விடியற வரைக்கும் ஒதுங்கிறதுக்கு இடமே கிடையாது நகரப்பகுதியில. டாய்லட் வசதி கிடையாது. அதைப்பற்றி, சேவை, ஸ்கோப், கிராமலயா நாங்கள் எல்லோரும் சிந்தித்தோம். அதன் வெளிப்பாடுதான். டாய்லட் டோர் ஸ்டெப். குடிசைக்கு பக்கத்திலேயே டாய்லட் போடுவோம். இடம் எங்கே இருக்கும்? வீட்டுக்கு முன்னாடி திண்ணை இருக்கும். அதுக்கு பக்கத்துல, டாய்லட் வச்சி ரெண்டு பக்கம் தட்டிய கட்டி அதன் கழிவுகளை அப்படியே வீட்டுக்கு பின்னாடி குழி தோண்டி போக வச்சோம். இத செய்து காட்டியது சுப்புராயன் அய்யாவும், சேவை அய்யாவும். வீடு வீடாக போட்டோம்.

சேவையும் தயாள குணமும் கொண்டவர்கள் !
கல்நாயக்கன் தெருவுல இரவு நேரத்துல ஒரு கூட்டம் ஒன்னு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க சேவை சார். சுய உதவிக்குழு கூட்டம். கடல் அலை பார்த்திருப்பீர்கள். இரவுதான் போய் உட்காருகிறோம். அப்படியே அலை போல ஜனங்க வர்றாங்க. மிளகுபாறையில தரையில உட்காருவோம். அம்பேத்கர் நகர்ல ஸ்ரீரங்கத்துல தரையில உட்காருவோம். வண்ணாங்குப்பத்துல தரையில உட்காருவோம்.
குழந்தைங்க டாய்லட் போயிட்டு தானாகவே கழுவிக்கிற சிஸ்டத்தை, வட நாட்டுல இல்ல, ஸ்வீடன்ல இல்ல அமெரிக்காவில இல்ல, இலண்டன்ல இல்ல திருச்சி மிளகுபாறையில அத கொண்டு வந்தாங்கன்னா அதுக்கு காரணம் ஸ்கோப் சாரும் சேவை சாரும்தான். டாய்லெட் டோர் ஸ்டெப். இந்திய நாட்டிற்கே டாய்லட் பத்தி முதல் முறை செய்தியை இந்த மாவட்டம்தான் அனுப்பி வைத்தது என்பதை பதிவு செய்து அவர்களை பாராட்டி இப்போது மகிழ்கிறேன். இதுபோல பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.
அதுபோல ஒரு நாள் கள ஆய்வுக்கு போயிட்டு வந்தோம். அப்போ ஒரு குடிசையில ஒரு சின்ன விளக்கு வெளிச்சத்துல திருவள்ளுவர் படிப்பகம்னு வச்சிருந்தாங்க. மூனே மாசத்துல இப்படி ஒரு கட்டிடத்தை கட்டி கொடுத்தாரு ஸ்கோப் சார். மக்கள் அதனை இப்போது சமுதாயக்கூடமாகவும், பள்ளிக்கூடமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இடுப்பளவு நீரில் களப்பணி …
110 இடங்களில் சுகாதார வளாகங்களை கட்டனும்னு முடிவு எடுத்து, பரமசிவம்னு அவர்களது நண்பர் அவர் ஆறு கோடி, கலெக்டர் நிதியிலிருந்து நான் 2 கோடி, மாநகராட்சியில 2 கோடி, தமிழ்நாடு அரசாங்கத்துல 2.5 கோடி வாங்கி, 110 இடங்களில் ஸ்லம் ஏரியாவில் உருவாக்கி கொடுத்தோம். இந்த மாவட்டத்துலதான் நடந்திருக்கு. இதுபோல எண்ணற்ற திட்டங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
ஒரு வெள்ள நிவாரணப் பணியில் நடக்கிறபோது, நாங்க இரண்டு பேரும் இடுப்பளவு தண்ணியில எல்லா இடத்துக்கும் போவோம். அவர்களுக்குத் தேவையான பாய், சாப்பாடு பாத்திரம், மளிகை சாமான்கள், தங்குவதற்கான இடங்கள் இதனையெல்லாம் வெள்ள காலங்களில் சீரும் சிறப்புமாக செய்து கொடுத்திருக்காரு.
இல்லம் நான்கு உள்ளம் ஒன்று !
இல்லம் நான்கு உள்ளம் ஒன்று என்ற திட்டத்தை கொண்டு வந்தேன். முதல் வீடு அந்தணர்க்கு. இரண்டாவது வீடு ஆதிதிராவிடர். மூன்றாவது வீடு இஸ்லாமியர். நான்காவது வீடு கிறிஸ்துவர். பயனாளிகள் வந்திருந்தார்கள். நானும் அமைச்சர் நேருவும் அமர்ந்து கொண்டு ஒரு குடத்தில் அவரவர்கள் பெயர்களை எழுதி போடச் சொன்னோம். அவர்களையே தேர்ந்தெடுக்க சொன்னோம். அதில் 106 பேருக்குத்தான் வீடுகள் வழங்கப்பட்டது. மீதி 400 பேருக்கு வீடு வழங்க முடியல. உடனடியா, காணக்கிளிய நல்லூர்ல ஒரு இடம் எடுத்து சேவை அவர்கள் அந்த ஏழை எளிய 400 பேருக்கும் வீடு தந்தார் என்று சொன்னால் சேவை கோவிந்தராஜுவின் பெருந்தன்மையையும் அவரது ஈடுபாட்டையும் காண்பித்தது.
நினைத்துப் பார்த்தால் தூக்கம் வராது …
இப்போது உங்களுக்கு உற்சாகம் வருகிறது. ஏன் வருகிறதென்றால்? எனக்கு எப்படி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்? நாளையே நான் கலெக்டர் ஆகிவிட முடியாதா? உடனே, நான் சேவை மாதிரி, ஸ்கோப் மாதிரி ஆகிவிட முடியாதா? கிராமாலயா மாதிரி ஆகிவிட முடியாதா? விஞ்ஞானி மாதிரி ஆகிவிட முடியாதா? என்ற எண்ணமெல்லாம் உங்களுக்கு இப்போ ஓடிகிட்டு இருக்கு. ஏனென்று சொன்னால், இவர்களை போன்ற மாமனிதர்களை சந்திக்கும்போதெல்லாம், அவர்கள் செய்கிற பணிகளையெல்லாம் நினைத்து நினைத்து பார்க்கிற போதெல்லாம். நமக்கு தூக்கமே வராது.
பத்துக்கு பத்து வீட்டில் பாம்புகளுடன் குடித்தனம் !
பாம்பு பிடிக்கிற மக்கள் இருப்பார்கள். நான் ஒரு நாள் ஒரு வீட்டிற்கு போனேன். அவர்கள் வீட்டில் மூன்று குழந்தைகள். அவங்க ரெண்டு பேரு. அஞ்சு பேரு மொத்தம். சின்னதா ஒரு பத்தடி வட்டத்துல, குடியிருக்காங்க. அவங்க படுத்துக்கிற இடமும், அவங்கள சுத்தி இருக்கிற தல மாட்டுல இருபது பானை இருக்கு. அந்த 20 பானையிலயும் பழைய வேட்டி துணிய கிழித்து மூடி சிறிய பொத்தல் போட்டு வைத்திருந்தார்கள். அது என்னப்பானு கேட்டேன். பத்து பானையிலும் பத்து பாம்பு. பாம்பாட்டிகள் அவர்கள். பாம்பு பிடிப்பவர்கள். இந்த இந்த ஜனங்க, இந்த குழந்தை, இந்த இடத்துல எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்? இந்த மக்களுக்கெல்லாம் ஒரு பணியை செய்வோம் என்று ஒரு திட்டம் தீட்டினோம்.
என்னுடைய இரண்டு கண்கள் இவர்கள் ! 25 ஆண்டுகள் கழித்து திருச்சிக்கு வந்த முன்னாள் கலெக்டர் வை.மூர்த்தி
வீடியோ லிங்
அது எப்படி தீட்டினால், மக்களுக்குப் போய் சேருமென்று பார்த்தோம். 3 வயது 4 வயசுதான் இருக்கும் ஒரு குழந்தை. அது அதுமாதிரி ரெண்டு மடங்கு இருக்கிற பாம்ப கையில பிடிச்சுகிச்சு. பாம்பு கொத்தல. அந்த குழந்தையும் தைரியமா பிடிச்சிருக்கு. இதை போட்டோ எடுக்கிறோம். அந்த போட்டோவ இரவு முழுவதும் உட்கார்ந்து சேவை சார் அலுவலகத்துல அந்த பாம்பாட்டிகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒரு திட்டம் தயாரிக்கிறோம். அந்த திட்டத்த எடுத்துகிட்ட தில்லிக்கு கொண்டு போனேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகிட்ட போய் காட்டினேன். படத்தை பார்த்து பதட்டப்பட்டாரு. பாம்ப புடிச்சி வச்சிருக்கியேனு சொன்னாரு. அந்த பாம்பாட்டியின் வாழ்வாதாரத்தை எப்படி உயர்த்த வேண்டுமென்ற சிந்தனை தினம்தோறும் நினைக்கக் கூடியவர்கள்தான் இந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த திட்டம் ஒரு அடையாளம். அதன் மூலம் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெற்று அவர்களுக்கெல்லாம் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னால், இதுதான் உண்மையான சேவை என்று கருதுகிறேன். அந்த சேவையை செய்தவர், நம் சேவை கோவிந்தராஜ் அவர்கள்.
இரவு நேர காப்பகங்கள் உருவான கதை !
இதுமாதிரி, தினம்தோறும் ஒரு திட்டம் வரும். நைட் நேரத்துல இரயில்வே ஸ்டேஷனுக்கும் பஸ்டாண்டுக்கும் பார்த்தீர்கள்னா.. தெருவோரமா, பிளாட்பாரத்துல நிறைய மக்கள் படுத்திருப்பார்கள். இதெல்லாம் பார்க்கனும் பிள்ளைகள். மழை வந்தா எல்லாத்தையும் எடுத்துகிட்ட ஓடுவாங்க. அவர்களை பற்றிய சிந்தனையும் உங்களுக்கு வேண்டும். அந்த சிந்தனையின் வெளிப்பாடுதான், நைட் சென்டர். தமிழ்நாட்டுல முதல் முறையாக திருச்சி மாவட்டத்துலதான் அத்தகைய இரவுநேர காப்பகங்களை தொடங்கினோம் என்று சொன்னால், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் இந்த ஸ்கோப்பும் சேவையும் மற்றவர்களும்தான். இப்படி நீங்கள் கை தட்டிக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு திட்டங்களை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அனுபவம் தந்த அறிவுச்சுரங்கம் !
அறிவுச்சுரங்கம் என்றொரு புத்தகத்தை போட்டோம். நான் படிச்சிட்டு தேர்வு எழுதிட்டு வேலைக்கு போறதுக்காக ஒரு பொது அறிவு புத்தகம் வாங்கனும்னு பார்த்தா, அப்போ 27 ரூபாய் அந்த புக். 27 ரூபாய் கொடுத்து உடனடியாக வாங்க முடியல. என்னுடைய நண்பர்தான் இந்த புத்தகத்தை பத்தி சொன்னாரு. எனக்கு அப்போ 19 வயது இருக்கும். அந்த புத்தகத்தை நான் எடுத்துக்கிறதா? இல்லை நண்பருக்கு கொடுக்கிறதானுதான் மனசுல ஓடுது. என் மனசுல என்ன இருக்கு? இந்த புத்தகத்தை பற்றி சொன்ன என் நண்பனுக்கு அந்த புத்தகம் போய் சேரனும். ஒரு மாசம் உட்கார்ந்து 270 பக்கத்தையும் கையாலேயே எழுதிட்டேன். எழுதி, பிரிண்ட் பன்னுன புத்தகத்தை என் நண்பருக்கு கொடுத்திட்டேன். கையால எழுதுன புத்தகத்தை நான் வச்சிகிட்டேன்.
சேவை என்பது என் உள்ளத்தில், உணர்வில், என் ரத்தத்துல ஏற்கெனவே கலந்துருக்கு. அதனால அந்த புத்தகத்தை பயன்படுத்தி நான் தேர்ச்சி அடைந்துவிட்டேன். முதன்முதல்ல வேலைக்கு போயிட்டேன். அந்த நினைவு எனக்கு இருந்த காரணத்தினால்தான், இந்த ஏழை எளிய மக்களுக்கு பொது அறிவு புத்தகத்தை போடனும்னு நினைச்சேன். 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அத்தனை பேருக்கும் தினமலர் பத்திரிகை வாயிலாக இலவசமாக அனைத்து மாணவர்களுக்கும் விநியோகித்தோம் என்று சொன்னால், அதற்கும் இவர்கள்தான் காரணம். அதற்கு பெயர்தான் அறிவுச்சுரங்கம் என்ற புத்தகம். அதன்பிறகு, டி.என்.பி.எல். பேப்பர் மில்லில் எம்.டி.யாக சென்ற பிறகு அறிவுச்சுரங்கம் புத்தகத்தை இலட்சகணக்கான பிரதிகள் அச்சடித்து மாணவர்களுக்கு இலவசமாகவே கொடுத்தோம். ஆக, எந்த சிந்தனைக்கும் வித்தாக விளங்குவது இந்த மாவட்டம். எல்லா சிந்தனைகளுக்கும் வித்தாகி, விருட்சமாக வளர்வதற்கு காரணம் இங்கே அமர்ந்திருக்கும் சேவை நிறுவனத்தை சேர்ந்தவர்கள்தான்.
மக்கள் நல வாழ்வில் மாவட்ட நலக்குழு !
இப்போ மனசுக்குள்ள நிறைய திட்டங்கள் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு ஊர்ல, ஒரு கிராமத்துல, எங்கேயாவது போனால் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென்பதற்காகவும் நல்ல படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, பலவிதமான பயிற்றுநர்களை உருவாக்கி மாவட்ட நல குழு என்றொரு அமைப்பை ஏற்படுத்தினோம். மாவட்ட நல குழுவின் பொருளாளராகவும் செயலாளராகவும் பல ஆண்டுகள் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பணியாற்றியவர் சேவை கோவிந்தராஜ் அவர்கள்.
என்னுடைய இரண்டு கண்கள் இவர்கள் ! 25 ஆண்டுகள் கழித்து திருச்சிக்கு வந்த முன்னாள் கலெக்டர் வை.மூர்த்தி
வீடியோ லிங்
பாராட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் …
அந்த சேவையின் பணிகளை நாடு பாராட்டிக் கொண்டிருக்கிறது. ஸ்கோப் அவர்களின் பணிகளை இந்த நாடும் உலகமும் பாராட்டிக் கொண்டிருக்கிறது. பாராட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் இவர்கள். பெருமைக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள். மக்களுடைய பணியே தங்களது பணி. மக்களுக்கான சேவையே தங்களது சேவை. என்பதை மனதிலே நிறுத்தி. வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு தொண்டாற்றுவதே என் கடன் என்று இவர்கள் ஆற்றி வருகின்ற பணியை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும்.
உந்தித்தள்ளிய நன்றியுணர்வு !
அந்த பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய இவர்களை காண வேண்டும் என்பதற்காகவே, என் மன உந்துதலால் ஒரு நன்றியுணர்வோடு எனக்கு செய்த அந்த நன்றியை நன்றி மறவாமல் அவரை பாராட்ட வேண்டுமென்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். நான் சொன்ன செய்திகளையெல்லாம் மனதில் ஏற்றிக் கொண்டு நீங்களும் இவ்வாறு ஆக வேண்டுமென்ற உணர்வோடு 25 ஆண்டுகள் கழித்தும் நான் இந்த மாவட்டத்தின் மீது, இந்த மக்கள் மீது, இவர்கள் மீது பற்றும் ஆர்வமும் நட்பும் உணர்வோடு வந்திருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு இந்த மக்கள்தான் காரணம். இந்த மக்களுக்கும் நன்றிகளை கூறி, சாதனையாளர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.