பத்து பைசா பிரியாணி … சும்மா வாசனை காட்டி ஏமாத்திட்டாங்க !
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபர்கள் புதிய கிளை திறந்த உணவகத்தில் ” வாடிக்கையாளர்களை கவரும் வகையில் “10 பைசா நாணயம் கொடுத்தால் சிக்கன் பிரியாணி” என்ற அதிரடி ஆஃபர் அறிவித்தது.
மேலும், “இரண்டு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம், இரண்டு மட்டன் பிரியாணிக்கு சிக்கன் 65 இலவசம்” என சுவையான வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டன.
அந்த அறிவிப்பு பரவியவுடன், பிரியாணி வாசனைக்கே மயங்கிய பொதுமக்கள் காலை முதலே கடை முன் வரிசையில் காத்திருந்தனர். சிலரோ பிரியாணியை வாங்காமல் செல்ல மாட்டோம் என சபதம் எடுத்து நின்றனர்.
ஆனால், கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் “வரிசையில் நில்… பிரியாணி எங்கும் போகாது என தெரிவித்தனர். ஆனால் பிரியாணி பாதியிலேயே தீர்ந்து போனது.
இதனால், நீண்ட வரிசையில் பல மணி நேரமாக வெயிலில் காத்திருந்த ஆண் மற்றும் பெண்கள் வாசனை மட்டும் முகர்ந்து விட்டு ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து ஆவேசமாக பேசிய பெண் ஒருவர் பட்டாசு ஆலைக்கு போகாமல், கணவரோட சேர்ந்து 7 மணிக்கே வந்து வரிசையில் நின்னோம். பிரியாணி கிடைக்காமல் சம்பளமோட சேர்த்து சாப்பாடு கூட போய்விட்டது. சும்மா நம்மளை வாசனை காட்டி ஏமாத்திட்டாங்க!” என்றார்.
தொடர்ந்து சிவகாசி பகுதிகளில் வியாபார யுக்தி என்ற பெயரில் ஆபர்கள் சமீப காலமாக புதிதாக திறக்கப்படும் அனைத்து வணிக நிறுவனங்களும் கொடுக்கின்றனர். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுத்து விடுவதால் நீண்ட நேரமாக காத்திருக்கும் மற்றவர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டும் தான்.
இது போன்ற விளம்பரங்களை நம்ப கூடாது என்ற அனுபவம் மட்டுமே பொதுமக்களுக்கு இலவசமாக கிடைத்துள்ளது.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.