திருமண தடையை நீக்கும் “தேவிகாபுரம்” கனககிரீஸ்வரர் ஆலயம் ! – ஆன்மீகப் பயணம்
நம் தமிழர்கள் கட்டிய பழம் பெரும் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றான பெரியநாயகி அம்மன் சமேத பொன்மலை நாதர் என்னும் “கனகிரீஸ்வரர்” ஆலயம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சேட் பட் செல்லும் பாதையில் தேவிகாபுரம் என்னும் ஊரில் உள்ளது. இந்த தெய்வீக ஸ்தலம் இந்த ஊரில் உள்ள சிற்பங்கள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கிட்டத்தட்ட மலை உச்சியின் அளவில் கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டதாக அமைந்திருக்கின்றன. இந்த தெய்வ ஸ்தலம் கிபி 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது. 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பொன்மலை என்னும் கனககிரி மலையில் அருள் பாலிப்பதால் சிவபெருமானுக்கு பொன்மலைநாதர் கனககிரீஸ்வரர் என்ற பெயர்கள் வந்ததாக சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் ஒரே கருவறையில் 2 லிங்கங்கள் காணப்படுகிறது. அதில் ஒன்று சுயம்பு மூர்த்தி பொன்மலை நாதராகவும் மற்றொன்று ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதன் ஆகவும் காட்சியளிக்கிறது. கனககிரீஸ்வரர் மலையின் உச்சியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றார். மேலும், அம்பாள் ஆலயத்தின் பின்புறமாக தென்மேற்கு பகுதியில் 500 அடி உயரத்தில் அதாவது மலையின் உச்சியில் ஈசன் அமர்ந்திருக்கின்றார். அம்பிகை பெரிய நாயகிக்கு இங்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. அம்பாள் ஈசனை சரி பாதியாக அடைவதற்கு இந்த இடத்தில் தவம் இருந்ததால் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்தால் திருமண தடை நீங்கி திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாளின் தவத்தில் மயங்கிய சிவபெருமான் பங்குனி உத்திரத்தன்று, மலையில் இருந்து கீழே இறங்கி வந்து அம்பாளை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம் உள்ளது. மலையின் உச்சியில் உள்ள கனககிரீஸ்வரர் திருக்கோயில் மூலஸ்தானத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். இதற்கான ஒரு கதையும் உண்டு.

ஒருமுறை வேடன் ஒருவன் காட்டில் கிழங்குகளை தோண்டிக் கொண்டிருக்கும்போது திடீரென ஓரிடத்தில் ரத்தம் வெள்ளமாக பாய துவங்கியது. பயத்தில் வேடன் உற்று நோக்கும் போது அங்கிருந்த சுயம்பு லிங்கத்தின் மீது கோடாரி பட்டு ரத்தம் வருவது அறிந்து வேதனையுற்றான். இரத்தப் பாய்ச்சலை தடுக்க ஏதேதோ முயற்சி செய்தும் முடியாமல் போக இறுதியில், வெந்நீர் ஊற்றி அபிஷேகம் செய்து காயத்தை ஆற்றினான். இதனால் ரத்தம் கசிவது நின்று விட்டது. அதன்படியே இன்றளவும் சிவபெருமானுக்கு வெந்நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் ஒரு முறை இந்த கோவிலில் வழியாக போருக்கு சென்ற பல்லவ மன்னன் இக்கோவிலின் பெருமையை கேள்விப்பட்டு இருக்கின்றான். பல்லவ மன்னன் தான் போரில் வெற்றி பெற்றால் மலையின் மேல் உள்ள சிவனுக்கு பெரிய கோவில் ஒன்று கட்டித் தருவதாக வேண்டி கொண்டான். போரில் வெற்றி கொண்ட பல்லவ மன்னன் தன் வேண்டுதலை மறந்து விட்டான். பிறகு, மன்னனுக்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டது.
அப்போதுதான் ஈசனுக்கு, கோயில் கட்டி தருவதாக கூறியது நினைவுக்கு வந்தது. பல்லவ மன்னன் ஈசனுக்கு கோயிலை கட்டிய போது வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் காணாமல் போனது வருத்தத்தில் இருந்த பல்லவ மன்னன் காசியில் இருந்து மற்றொரு லிங்கத்தை கொண்டு வந்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்தான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த மறுகணமே சுயம்புலிங்கம் திரும்பவும் காட்சியளித்தது. கடவுளை மறந்த பல்லவ மன்னனை ஈசன் மறந்து இருக்கிறார் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. மேலும், பல்லவ மன்னன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு “கனககிரீஸ்வரர்” என்ற பெயர் வைத்து அதே கருவறையில் இரண்டு மூலவர்கள் வைத்து இன்றளவும் வழிபட்டு வருகின்றனர். மேலும் இங்குள்ள ஒரு சிறப்பு சிவபெருமானை 365 படிகளை தாண்டி சென்றால் மட்டுமே பார்க்க முடியும். பௌர்ணமி நாளன்று இங்கு கிரிவலம் வந்து சிவனை வழிபட்டால் திருமண தடை உள்ளிட்ட தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. ஆகவே, இங்கு பௌர்ணமி நாள்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். மன துயரம் நீங்க பொன்மலை நாதரை வழிபடுவதும் சிறப்பான ஒன்றாக உள்ளது. மேலும், திருமண தடை உள்ளவர்கள் ஒரு மறை இக்கோவிலுக்கு சென்று தரிசித்து வருவது நன்மை பயக்கும்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.