இனியும் யாரும் எங்களுக்காகக் கெஞ்ச வேண்டாம் … கண்ணீர் விட்ட ஈகியரின் தாய் !
நாங்கள் உழைத்துப் பிழைக்கும் மானம் உள்ள விவசாய சாதி.
காவிரி உரிமை மீட்புக்காக, ஒன்பது ஆண்டுகள் முன்பு “என்னுடைய இறப்பு காவிரித் தாயின் உரிமை மீட்பின் கடைசி உயிரிழப்பாக இருக்கவேண்டும்” என்று எழுதி வைத்துவிட்டு உயிர்த்தியாகம் செய்த மன்னை விக்னேஷ் என்னும் இளைஞனின் நினைவேந்தல் நிகழ்ச்சி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் தமிழ்நாடு அமரர் வெள்ளையன் அவர்களின் வணிகர் சங்கப்பேரவை தேசிய திருக்கோயில்கள் கூட்மைப்பு சார்பில் நடைபெற்றது.
பேரணியில் விக்னேஷ் திரு உருவப்படத்தை கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளி உதயகுமார் திறந்து வைத்தார். தியாக தீபத்தை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன் ஏற்றி வைத்தார். பேரணியை வணிகர் சங்க மாநிலத் தலைவர் மெஸமர்காந் வெள்ளையன் கொடி அனைத்துத் தொடங்கி வைத்தார்.
பேரணி நூற்றுக் கணக்கானவர்களுடன் வீதி வலம் வந்து விக்னேஷ் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் இடத்தை அடைந்தது. இறுதியாக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விவசாயத் தோழர் ஆசிரியர் பார்த்த சாரதி நண்பர்களுடன் சிறப்பாகச் செய்திருந்தார். தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் என். டிகண்ணன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய புலவர் ஆதி நெடுஞ்செழியன் ஒன்பது ஆண்டுகளாகியும் காவிரிக்காக தன் உயிரையே தியாகம் செய்த விக்னேஷின் குடும்பம் இன்றளவும் வறுமையில் வாடுகிறது. பெற்ற மகனை இழந்து வறுமையில் வாடும் அக்குடும்பத்திற்கு ஆதரவு அளிக்குமாறு பல கட்சிகள் பொதுநல அமைப்புகள் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்தும்; விக்னேஷின் பெற்றோர்கள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட்டும் இதுவரை எந்த உதவியும் கிடைக்கப்பெறாமல் இருப்பது வருத்தத்திற்குரியது” என்றார்.
இறுதியில் பேசிய விக்னேஷின் தாயார், ”இவ்வளவு தூரம் பல ஆண்டுகளாக பலரும் கோரிக்கை வைத்தும் நாங்களே முதல்வரை நேராகச் சந்தித்தும் எந்த உதவியும் செய்யாத அரசை இனியும் யாரும் எங்களுக்காகக் கெஞ்ச வேண்டாம்” என்றார்.
நாங்கள் உழைத்துப் பிழைக்கும் மானம் உள்ள விவசாய சாதி. போதும் விட்டு விடுங்கள். இனி ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அரசு கருதினால் நாட்டையே குறிப்பாக ஏழை விவசாயிகளை தொழிலாளர்களை இளைஞர்களை தினம் தினம் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் மதுக் கடைகளை மூடவும் உங்கள் போதைப் பழக்கத்திலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றவும் செய்யுங்கள் என்று பார்வைக் குறைபாடுடைய அந்தத் தாய் கண்ணீர் மல்கப் பேசிய உரை அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. அரசு இரங்கட்டும். அந்தக் குடும்பத்திற்கு உதவட்டும் என்பதே அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக வெளிப்பட்டது.
— தஞ்சை க.நடராஜன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.