நியோமேக்ஸ் : நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கூட்டம் ! என்னதான் நடக்குது ?
நியோமேக்ஸ் ! நட்சத்திர ஹோட்டல்களில் இரகசியக் கூட்டம் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் தொடர் கண்காணிப்பில் இதுவரை 16 மாவட்டங்களுக்கான நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக ”க்ளைம் கமிட்டி” அமைக்கும் பணியை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்நிலையில், தீர்வை பணமாக பெறுவதா? நிலமாக பெறுவதா? நிலமாக பெறுவதில் உள்ள சிக்கல்கள். பணமாக பெறுவதில் உள்ள சிக்கல்கள். இரண்டு ஆண்டுகள் நம்பிக்கையோடு காத்திருந்து தற்போது வெறும் அசல் பணத்தை மட்டும் பெற்றுக் கொள்வதா? என்பது உள்ளிட்ட பல்வேறு விடை காண வேண்டிய கேள்விகளுக்கான விவாதங்களாக வழக்கின் போக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒருபக்கம், நீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்தான், நீதிமன்றத்திற்கோ பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசுக்கோ தெரியாமல் இரகசியக் கூட்டங்களை நியோமேக்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக பிரத்யேக தகவல் வந்து சேர்ந்திருக்கிறது.
நட்சத்திர ஹோட்டலில் இரகசியக் கூட்டம் :
மதுரை தாஜ் ஹோட்டலில், கடந்த செப்-14 அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர் பாலா பங்கேற்றிருக்கிறார். முன்னரே அடையாளப்படுத்தப்பட்ட 200 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, டோக்கன் இருப்பவர்கள் மட்டுமே உள்ளே நுழையும் வகையில் பாதுகாப்பு அம்சங்களோடு இந்தக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
இரண்டு மணி நேரம் நடைபெற்றக் கூட்டத்தில், பாலா தப்பித் தவறியும்கூட நியோமேக்ஸ் குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. வந்திருந்த 200 பேரில் மூன்று பங்கு பேர் முற்றிலும் புதிய முகங்கள்.

டை-அப் ப்ராஜெக்ட்ஸ் என்ற பெயரில் தமிழகம் முழுவதுமே புதிய வகையிலான பிசினஸை முன்னெடுத்திருக்கிறது, நியோமேக்ஸ். வழக்கம் போலவே, ”லட்டு” என்ற பெயருக்கு போலீசு தடை விதித்தால், அதை உதிர்த்துவிட்டு ”பூந்தி” என்ற பெயரில் புதிய பிசினஸை தொடங்குவதைப் போல, தற்போது ”ராக்போர்ட் எனெர்ஜி” என்ற பெயரில் புதிய நிறுவனத்தின் பெயரில் இந்த பிசினஸை நடத்தி வருகிறார்கள்.
உச்சிப்புளி, வத்தலக்குண்டு ஆகிய இடங்களைத் தொடர்ந்து மணப்பாறையிலிருந்து குளித்தலை செல்லும் வழியில் சின்ன ரெட்டிப்பட்டி அருகில் சாலையின் ஓரமாகவே அமைந்திருக்கும் என்.ஆர்.சி. கார்டனில் பிளாட்டுகளை விற்பணை செய்வதற்கான கூட்டமாக இந்த ரகசியக் கூட்டம் நடந்திருக்கிறது.
தீர்வுத் திட்டம் என்ற பெயரில் அடாவடிக் கொள்ளை !
இதுபோன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 500 – 1000 வரையில் பிளாட்டுகள் போட்டு எதிர்பார்த்த அளவில் விற்பணையாகாமல் முடங்கிக் கிடக்கும் இடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களை அணுகி, அடிமாட்டு விலைக்கு மொத்தமாக 200 – 500 பிளாட்டுகளை வாங்குகிறார்கள். இந்த விலைக்கு கொடுத்துவிடு. மூன்று மாதத்தில் விற்றுத் தருகிறேன். என்ன விலைக்கு விற்கிறேன் என்பதை பற்றி நீ தலையிடக்கூடாது என்பதுதான் அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம். பின்னர், வாங்கிய விலையிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை வைத்து விற்பணை செய்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், என்.ஆர்.சி. கார்டனில் பிளாட்டுகள் என்ன விலைக்கு போகிறது என்பதை நாமும் விசாரித்தோம். சதுர அடி ஒன்றுக்கு 700 முதல் 750 வரையில் தற்போது மார்க்கெட் மதிப்பு என்றார்கள். சம்பந்தபட்ட புரோமோட்டர்ஸிடம் நேரடியாக அணுகினால், சதுர அடி 600 ரூபாய்க்கு வாங்கி விட முடியும். ஆனால், நியோமேக்ஸ் நிர்ணயித்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? சதுர அடி ஆயிரம் ரூபாய்.

ஆக, சதுர அடி நிலத்தை வெறும் ஐநூறு ரூபாய்க்கு வாங்கிவிட்டு, அதனை அப்படியே இரட்டிப்பாக்கி பாதிக்கப்பட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர் தலையிலேயே நிவாரணம் என்ற பெயரில் கட்டுகிறது. பத்து இலட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கினால், அதில் 7.5 இலட்சத்துக்கு பாண்டுகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். மீதமுள்ள 2.5 இலட்சத்தை கையில் கொடுக்க வேண்டுமாம்.
எப்படி இருக்கிறது, பாருங்களேன். ஏற்கெனவே போட்ட முதலுக்கு வட்டியை கட்டி விட்டு, முதிர்வுத் தொகையும் இல்லை என்ற நிலை வந்து அசலாவது கிடைக்காதா? என ஏங்கியிருக்கும் முதலீட்டாளனிடமே மேலும் 2.5 இலட்சத்தை வாங்கிக்கொண்டு, 5 இலட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்தை பத்து இலட்சம் ரூபாய்க்கு அவன் தலையில் கட்டுவதைத்தான் தீர்வுத் திட்டம் என்பதாக நியோமேக்ஸ் அறிவித்து செயல்படுத்தி வருகிறது என்பதைத்தான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை !
இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் பெரும்பாலும் அந்தந்த மாவட்டத்தின் நட்சத்திர ஹோட்டல்களில்தான் கூட்டங்களை நடத்துகிறார்கள். பிரம்மாண்டமான கட்டிடத்தையும் உணவுகளை காட்டி மூளைச்சலவை செய்து வருகிறார்கள். சாதாரண லாட்ஜ்களில் கூட போலீசின் கெடுபிடி இருந்து வரும் நிலையில், இதுபோன்ற நட்சத்திர விடுதிகளில் தைரியமாக 200 பேர் கூடி கூட்டம் நடத்த முடிகிறதென்றால், இதனை எப்படி புரிந்து கொள்வது? இதுபோன்ற இரகசிய கூட்டங்களை முன்னரே கண்டறிந்து தடுத்து நிறுத்துவதற்குரிய போதுமான ஏற்பாடுகளை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் மட்டுமல்ல; தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.