இதை செஞ்சா … ஒரு லட்சம் தாரேன் … அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !
திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு இலட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்பதாக அமைச்சர் ஒருவரே அறிவித்திருப்பது தொண்டர்களிடத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற திமுகவினர் கண்ணும், கருத்துமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.

மதுரை, உத்தங்குடியில் திமுக வடக்கு மாவட்ட இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், திமுக இளைஞர்அணியில் அதிக உறுப்பினர் சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு இலட்ச ரூபாய் சன்மானம் பரிசாக வழங்கப்படும். அதனையடுத்து 2, 3, 4, சன்மானம் பரிசாக வழங்கப்படும். திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்டம் மதுரை வடக்கு மாவட்டமாக இருக்கவேண்டும்.
கடந்த காலங்களில் திமுக மாநில மாநாடு, பொதுக்குழுவை நாம் சிறப்பாக நடத்தி இருக்கிறோம். மதுரையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டை நடத்த துணை முதல்வரிடம் அனுமதி கேட்டு இருக்கிறேன். நிச்சயமாக இளைஞரணி மாநில மாநாடு நடத்த துணை முதல்வர் அனுமதி அளிப்பார். அம்மாநாட்டை நாம் வெற்றிகரமாக நடத்துவோம். சட்டமன்ற தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுக்கு திமுக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலூர், சோழவந்தான், மதுரைகிழக்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றிபெற திமுகவினர் கண்ணும் கருத்துமாக தேர்தல் பணியாற்ற வேண்டும்” என அன்பு கட்டளையிட்டிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
-ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.