தீபாவளி ஸ்வீட்ஸ் தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை !
தீபாவளியை முன்னிட்டு, ஸ்வீட்ஸ் மற்றும் காரம் தயாரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சாத்தூரில் இன்று (09.10.2025) நடைபெற்றது. இந்த கூட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., உணவு பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் ஆர்.லால்வேணா, இ.ஆ.ப., மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் எண்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
அதிகாரிகள், வணிகர்கள், பலகாரத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் பேசும்போது, “அனைத்து இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று கடைகளில் காட்சிப்படுத்த வேண்டும். தரமான மூலப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி சுகாதாரமான சூழலில் பொருட்கள் தயாரிக்க வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெய் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தயாரிப்பு நாள், காலாவதி நாள், உரிமை எண் உள்ளிட்ட லேபிள் விபரங்கள் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும்,” என்றவர்,
மேலும், “பணியாளர்கள் டைஃபாய்டு மற்றும் மஞ்சள்காமாலை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கடைகளில் பயன்படுத்தப்படும் நெய் மற்றும் எண்ணெய் விபரங்கள் நுகர்வோருக்கு தெளிவாக காட்சிப்படுத்தப்பட வேண்டும். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் வணிகர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்திற்கான பகுப்பாய்வு அறிக்கை அவசியம் வைத்திருக்க வேண்டும்,” என்றும் எச்சரித்தார்.
வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள், அனுமதிக்கப்பட்ட உணவுச் சேர்மங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.