அங்குசம் சேனலில் இணைய

பாதியிலேயே கைவிடப்படும் வன்கொடுமை வழக்குகள் : நாம் என்ன செய்யப்போகிறோம் ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு

(பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதிபதி நியமனம், காவல்துறையின் நடவடிக்கைகள், வன்கொடுமை வழக்குகளின் விபரங்கள் பற்றி புதுக்கோட்டை மாவட்ட அனைத்து கட்சிகளை சார்ந்த சமூகசெயற்பாட்டாளர்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள், வேலைத்திட்டங்கள் மற்றும் அரசுக்கான கோரிக்கைகள்)

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அறிக்கை

இந்தியாவில் 1989 ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பிறகு தலித் மக்களுக்கு ஒரு சட்டப்பாதுகாப்பு கிடைத்தது, அதனை தொடர்ந்து டாக்டர். புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டுக்கு பிறகு தலித் எழுச்சி நடைபெற்றது, அந்த தலித் எழுச்சி மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தீவிரமாக தமிழ்நாட்டு தலித் இயக்கங்கள் களமாடியது. பல்வேறு தீண்டாமை கொடுமைகளும் சாதிய வன்கொடுமைகளும் முடிவுக்கு வந்தது. ஆனால் 21ம் நூற்றாண்டில் 25 ஆண்டுகளை கடந்து நவீனமாக வாழும் இந்த சூழலில், பகுத்தறிவு பேசும், சமூகநீதி பேசும் தமிழ்நாட்டில் முன்பை விட சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இப்படியான சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் வன்கொடுமைகள் குறித்து பல்வேறு இயக்கங்களும் தலைவர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென தொடர்ந்து குரலெழுப்பி வருகிறார்கள்.. இந்நிலையில் மதுரையில் இயங்கி வரும் சமூக செயற்பாட்டாளர் கார்த்திக் அவர்களால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெறப்பட்டு வெளியிடப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்சூழலை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், என்ற நோக்கத்தில் தாதா திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான 18/9/2025 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 25 சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து “நாம் என்ன செய்யப் போகிறோம்” என்ற தலைப்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பின்வரும் செய்திகள் விவாதிக்கப்பட்டன. அதில் குறிப்பாக பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு புதுக்கோட்டை மாவட்ட தனிச் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நியமித்தல் மற்றும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு, காவல்துறையின் நடைமுறைகளை கேள்வியெழுப்புவது மற்றும் வலியுறுத்துவதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வழக்கு விவரங்களும் காவல்துறையின் செயல்பாடுகளும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 1999 லிருந்து 2025 ஜூன் மாதம் வரை 1536 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இவற்றில் 517 வழக்குகள் உண்மைக்கு புறம்பானவை என MF (MISTAKE OF FACT) செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 579 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவற்றில் காவல்துறையின் விசாரணையில் 19 வழக்குகள் இருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால் 1536 வழக்குகளில் வெறும் 60 வழக்குகளில் மட்டும்தான் குற்றவாளிகள் என நிர்ணயிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 361 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்த நீதிமன்ற விசாரணை என்பது கிட்டத்தட்ட கிணற்றில் போடப்பட்ட கல்லின் நிலை தான், அதாவது பதிவான வழக்குகளில் 33.65% வழக்குகள் MF செய்யப்பட்டிருக்கிறது, அதில் 37.69% வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள், 23.56 % வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் நிலையில் வெறும் 3.9 % வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு கூட்டத்தின் கூட்ட நடவடிக்கைகளின் அறிக்கையில் இருந்து கிடைக்கப்பெற்றவை.

வன்கொடுமை வழக்குகள்மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் அதாவது 2020 முதல் 2025 ஜூன் வரை 440 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன, அவற்றில் 124 வழக்குகள் MF செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டளவில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதில் புதுக்கோட்டை மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது, அதாவது கடந்த 25 ஆண்டுகளில் பதிவான 1536 வழக்கில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஐந்து ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி பதிவு செய்யும் வழக்குகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 28.18 % வழக்குகளை MF செய்து தமிழ்நாட்டில் அதிகமாக MF செய்யும் மாவட்டங்களில் முதலாவது இடத்தில் இருக்கிறது புதுக்கோட்டை. இவை அனைத்துமே அரசு கொடுத்த புள்ளி விவரங்கள். ஆனால் நடைமுறையில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் கொடுக்கும் புகார்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை. சாதிய வன்கொடுமைகளில் தீவிரம் காட்ட வேண்டிய அரசு இதனை துளியும் கண்டு கொள்வதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களில் இரண்டு பக்கமும் வழக்கு போடுவோம் அப்புறம் உங்க பசங்களோட வாழ்க்கையும் போயிரும் கொஞ்சம் என்னனு யோசிச்சுக்கோங்க என்ற முதல் யுத்தியை காவல்துறை

கையில் எடுக்கும், அதிலேதும் சாத்தியக்கூறுகள் இல்லாத போது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவது இரண்டாவது யுத்தி, அதாவது பாதிக்கப்பட்டவன் மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்து 10-15 முறை அலையனும், அவன் அலுத்து போய் இருக்கும் போது சாதிய ஆதிக்கவாதிகளின் அழுத்தத்தால் புகார் வாபஸ் செய்யப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த சமூகத்தின் சிலரையே சாதியவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்பது மறைக்கப்பட முடியாத வேதனை. இப்படி வன்கொடுமை தொடர்பான புகார்களில் பெரும்பான்மையாக மேற்கண்டவைகளே நடைபெறுகிறது. அவற்றை காவல்துறையே சாதிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக முன்நின்று செயல்படுத்துகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. காவல்துறை பெரும்பாலும் சாதிக்கு ஆதரவாகத்தான் செயல்படும் ஆனாலும் சில தவிர்க்க முடியாதவைகள் தான் வழக்குகளாக பதிவு செய்யப்படுகிறது. அப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பான்மையாக சமூக செயற்பாட்டாளர்களின் பங்கு இருக்கிறது. சரி வழக்குப்பதிவு செய்தாயாச்சுனு நிம்மதி அடையமுடியாது பதிவு செய்த வழக்கின் மீது காவல்துறையின் நடவடிக்கை என்பது கிட்டத்தட்ட 0 % குற்றவாளிகள் மீது புகார் வந்ததும், காவல்துறை விசாரணைக்கு வரச் சொல்லும் ஆனால் அவர்களை கைது செய்யாமல் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து வேலைகளையே செய்யும். பாதிக்கப்பட்டவர் போராடி வழக்கு பதிவு செய்ய வைத்தாலும் குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையே யோசனை சொல்லி குற்றவாளிகளை தப்பிக்க விட்டு அவர்களுக்கு பிணை (ஜாமீன்) கிடைக்கும் வரை குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் உதவி செய்கின்றனர். SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் முன்ஜாமின் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சில இடங்களில் புகார்தாரர் விவரமில்லாதவராக இருந்தாலோ அல்லது குற்றவாளிகள் பெரும் பொருளாதர பின்புலம் உடையவராக இருந்தாலோ, பதிவான வழக்கையே MF செய்வதை மிகச் சுலபமாக செய்துவிடுகிறது காவல்துறை. இப்படியாக SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படை வழிகாட்டுதல்களை யாரும் எந்த காவல்துறையினரும் பின்பற்றுவதில்லை என்பது வெட்டவெளிச்சம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் – நீதிமன்ற நடைமுறைகளும்

இந்தியர்கள் ஒவ்வொருவரும் சட்டத்தின் முன் சமமானவர்களே என்றாலும், எவ்வித பாகுபாடும் இன்றி சட்டத்தின் சமமான பாதுகாப்பு பெற உரிமை உள்ளவர்களே என்றாலும், வன்கொடுமைகளை சந்திக்கிற பட்டியல் மற்றும் பழங்குடிகளின் நிலை என்னவென்றால் அவர்களுக்கான நீதி தாமதிக்கப்பட்ட நீதியாகவே இருக்கிறது என்பதுதான். தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை கண்காணிப்பதிலும் அவற்றில் தலையிடுவதிலும் மதுரையில் இயங்கிவரும் திருமிகு எவிடன்ஸ்கதிர் அவழ்களின் தலைமையில் இயங்கிவரும் எவிடன்ஸ் அமைப்பின் 15 ஆண்டுகால அனுபவத்தில் பின்வருவனவற்றை கூறுகிறது. பாதிக்கப்பட்டோர், சாட்சிகள், சமூக

செயற்பாட்டாளர்கள், தலித் அமைப்புகளுக்கும், தலித்துக்களுக்கும் கிடைத்த பாடம் என்னவெனில் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டோர் எதிர்பார்க்கிற நீதிக்கான நடைமுறைகளில் ஏராளமான முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே ஆகும். வழக்கை பதிவு செய்ய, புலன்விசாரணை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை என ஒவ்வொரு கட்டத்திலும் அந்த முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதாமை, போதிய பாதுகாப்பின்மை, கண்காணிப்பு குழுக்களின் செயல்பாட்டில் போதாமை, முறையின்மை, நிவாரணம் அளிப்பதிலும் மறுவாழ்வு வழங்குவதிலும் போதாமை, தாமதம் ஆகியவை உள்ளிட்ட முட்டுக்கட்டைகளும் உள்ளன.

1955 ஆம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பின் இச்சட்டம் 1976ல் தீண்டாமை குற்றங்கள் சட்டம் என்ற அறியப்பட்டு திருத்தப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 (விதிகள் 1995) என்ற சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின் 2015இல் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது (திருத்த விதிகள் 2016) அதாவது தலித் பழங்குடியினர் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து 2009 ஆம் ஆண்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கான தேசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார்கள். இவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் இந்த கூட்டமைப்பின் அனைத்து முயற்சிகளாலும் இடையராத பணிகளின் இறுதிப் பலனாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்துவதற்கான அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது இது இந்திய அரசின் அரசிதழில் பதிவு எண் DL-(N)04/007203/14 அசாதாரண பகுதி ||, பிரிவு ல் அறிக்கை செய்யப்பட்டு 2014 அன்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் கடந்த காலத்தில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவருக்கும், சாட்சிகளுக்கும் கடுமையானவையாக இருந்த பல்வேறு பிரச்சனைகளில் தீர்வுக்கு வழி வகுக்கின்றன. வழக்குகளை பதிவு செய்யாமலிருப்பது, புலன் விசாரணைகளில் தாமதம், கைது நடவடிக்கைகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் தாமதம், நீதிமன்ற விசாரணையில் தாமதம் போன்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள இந்த திருத்தங்கள் உதவக் கூடியவையாக உள்ளன. அண்மைக்காலமாக அடிக்கடி நடைபெறுகிற ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படாத புதிய வடிவங்களிலான வன்முறைகள் தொடர்பாகவும் புகார் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இது உதவுகிறது.

அரசு நிர்வாக கடமை பொறுப்புக்கான ஏற்பாடுகள் பகுத்துரைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் அரசு ஊழியர்கள் துன்புறுத்துவார்களானால் அவர்கள் நிர்வாக பரிந்துரைகள் மூலமாக தண்டிக்கப்படலாம். குறிப்பாக தனி சிறப்பு அதே சிறப்பு நீதிமன்றங்களில் நீதிமன்றங்களிலும், தனி அரசு

வழக்குரைஞர்களாலும் இரண்டு மாத காலத்திற்குள், தினசரி அடிப்படையில், நீதிமன்ற விசாரணைகளை முடிப்பதற்கும் இந்த திருத்தங்கள் வழிவகுக்கின்றன.

அவசர சட்டத்தில் முன்மொழிக்கப்பட்டுள்ள சில முக்கிய திருத்தங்கள் வருமாறு:

1.) தண்டனைக்குரிய குற்றச் செயல்களின் பட்டியலில் பின்வரும் வகையைச் சேர்ந்த குற்றங்களும் இணைக்கப்பட்டுள்ளன: சட்டத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்செயல்களுடன் பின்வரும் புதிய குற்ற செயல்கள் சேர்க்கப்பட்டுள்ளன சில உதாரணங்கள் பின்வருமாறு: தலையை மொட்டை அடித்தல், மீசையை வலித்தல் அல்லது தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் கௌரவத்தை சீர்குலைக்கும் வகையிலான இதே போன்ற செயல்கள்; நீர்ப்பாசன வசதிகள் அல்லது வன உரிமைகளை மறுத்தல்: மனித சடலங்கள் அல்லது விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்துதல்; அல்லது தூக்கிச் செல்லுதல் அல்லது கல்லறை தோண்டுதல், கையால் துப்புரவு பணி செய்ய வைத்தல், அல்லது அனுமதித்தல்; தலித் பெண்களை தேவதாசிகளாக அர்ப்பணித்தல், சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்துதல்; பில்லி சூனியத்தின் பெயரால் வன்கொடுமைகளை நிகழ்த்துதல்; சமூக புறக்கணிப்பு அல்லது பொருளாதாரப் புறக்கணிப்பை திணித்தல்; தேர்தல்களில் போட்டியிட தலித் மற்றும் ஆதிவாசி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதை தடுத்தல், தலித் பழங்குடி பெண்ணின் ஆடைகளை களைவதன் மூலம் அவரது கௌரவத்தை சீர்குலைத்தல், வீட்டை விட்டு கிராமத்தை விட்டு அல்லது குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்தித்தல், தலித் மற்றும் பழங்குடியினருக்கு புனிதமான விஷயங்களை அவமதித்தல், பாலியல் தன்மையுடன் பெண்களைத் தொடுதல், வார்த்தைகளை பயன்படுத்துதல் செயல்கள் அல்லது சைகைகளில் ஈடுபடுதல்.

2.) வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றங்கள் தொடர்பாக இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் சிறப்பு: தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனைக்குரியவை என்று குறிப்பிடப்பட்டுள்ள, தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிராக நிறுத்தப்படுகிற குற்றச் செயல்கள் மட்டுமே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்ற செயல்களாக ஏற்கப்படுகின்றன. (காயப்படுத்துதல், கடுமையாக காயப்படுத்துதல், அச்சுறுத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட) பொதுவாக செய்யப்படும் பல குற்றச்செயல்கள் சட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. இந்த பொதுவான குற்றங்களின் ஈடுபடுவோர் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு சட்டத்தில் இந்த குறைபாடுகள் வழி வகுக்கின்றன. ஆகவே திருத்தப்பட்டுள்ள சட்டத்தில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களின் தண்டனை ஒரு அட்டவணை சேர்க்கப்பட்டுள்ளது.

3.) வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்காக, இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை விசாரிப்பதற்கென்று தனிச்சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், சிறப்பு அரசு வழக்கு வழக்குரைஞர்களை நியமித்தல்: தற்போதுள்ள சிறப்பு நீதிமன்றங்களாலும் அரசு வழக்குரைஞர்களாலும் வன்கொடுமை வழக்குகள் அல்லாத மற்ற வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் வழக்குகள் முடிவதற்கு நீண்ட காலமாகிறது. இவ்வாறாக பதிக்கப்பட்டவர்களுக்கு நீதி அல்லது விரைவான நீதி மறுக்கப்படுகிறது. ஆகவே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிச்சிறப்பு நீதிமன்றங்கள் மாவட்டங்களில் அமைக்கவும் தனி அரசு வழக்குரைஞரை நியமிக்கவும் அவசரச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

4.) குற்றங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு இரண்டு மாதங்களில் வழக்கை முடிப்பதற்கு தனி சிறப்பு நீதிமன்றங்களுக்கு அதிகாரம்: இந்த வகையில் அமைக்கப்படுகிற அல்லது அறிவிக்கப்படுகிற நீதிமன்றங்கள், இந்தச் சட்டத்தின் கீழ்வரும் குற்ற செயல்களை நேரடியாக எடுத்துக் கொள்ளவும், சாத்தியமான அளவிற்கு விசாரணையை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து இரண்டு மாத காலத்திற்குள் முடிக்கவும் அதிகாரம் பெறுகின்றன.

5.) பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளின் உரிமைகள் என்ற புதிய அத்தியாயம் சேர்ப்பு: தற்போதுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்கு உள்ள ஒரு சில உரிமைகளை சட்டம் அங்கீகரிக்கிறது. ஆகவே எவ்வகையான அச்சுறுத்தல், நிர்ப்பந்தம் அல்லது தூண்டல் அல்லது வன்முறை அல்லது வன்முறை மிரட்டல்களிலிருந்து பாதிக்கப்பட்டோரையும் அவர்களை சார்ந்திருப்பவரையும், சாட்சிகளையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அரசுக்கு கடமையையும் பொறுப்பையும் வழங்குகிற வகையில் மேலும் பல முக்கிய உரிமைகள் சேர்க்கப்படுகின்றன.

6.) அனைத்து மட்டங்களிலும் அரசு ஊழியர்கள் ‘வேண்டுமென்றே புறக்கணித்தல்’ என்ற சொல்லாடலுக்கு தெளிவான வரையறையையும் கடமையிலிருந்து தவறுவதற்கான அம்சங்களையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவருதலும்: தற்போதைய சட்டத்தின் 4வது பிரிவு, அரசு ஊழியர்கள் ‘வேண்டுமென்றே புறக்கணித்தல்’ என்ற சொல்லாடலின் பொருள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை, ஆகவே சில குறிப்பிட்ட சட்ட மீறல்களை பட்டியலிட்டு இருப்பதன் மூலம் இது வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பாதிக்கப்பட்டவரின் புகாரை காவல்துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக

சரியாகப் பதிவு செய்யாமல் இருப்பது, பாதிக்கப்பட்டவரின் கையெழுத்ததை பெறுவதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்டிருப்பது என்ன என்பதை வாசித்துக் காட்ட தவறுவது, சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருப்பது, சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யாமல் இருப்பது. இன்னபிற….

7.) தெரிந்தே குற்றம் செய்ததாக கருதப்படுவது என்பது சேர்க்கப்பட்டுள்ளது: குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் அல்லது அவரது குடும்பத்துடன் ஏற்கனவே தொடர்பு இருக்கிறது என்றால் வேறு வகையாக நிரூபிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்டுவரின் சாதி அல்லது பழங்குடி அடையாளம் குறித்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏற்கனவே தெரியும் என்று நீதிமன்றம் கருதும் என சேர்க்கப்பட்டுள்ளது.

மாவட்டம்தோறும் SC/ST வன்கொடுமை வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனிச்சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும், என்று சட்டம் இயற்றப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை திருச்சி,தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, விழுப்புரம், புதுக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், கடலூர், தேனி, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், நாகர்கோவில் ஆகிய 21 மாவட்டங்களில் மட்டுமே சிறப்பு SC/ST நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் சிறப்பு SC/ST நீதிமன்றங்கள் உருவாக்கப்படாமல், மற்ற நீதிமன்றங்களோடு SC/ST வன்கொடுமை வழக்குகளை விசாரித்து வருகின்ற சூழ்நிலை இருந்து வருகிறது.

மேற்கண்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015-ன் முக்கிய கூறுகளை நாம் ஆராயும்போது. மேற்கண்டவைகளில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய 3 மற்றும் 4 பகுதிகளில் குறிப்பிட்டதை போல புதுக்கோட்டை மாவட்டத்தின் நீதிமன்ற செயல்பாடுகள் இருக்கின்றதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அதாவது மீதமிருக்கும் 17 மாவட்டங்களுக்கும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட தனிச்சிறப்பு நீதிமன்றம் கேட்டு வரும் சூழ்நிலையில், கொடுமையிலும் கொடுமையாக புதுக்கோட்டை மாவட்ட தனிச்சிறப்பு SC/ST நீதிமன்றத்தில் நீதிபதி நியமிக்கப்படவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 20/06/2020 முதல் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தனி சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி நியமிக்கப்படவில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதற்கு முன்னரும் நீண்ட காலமாக நீதிபதியில்லாமல் இருந்த்தாகவும், ஒரு பெண் நீதிபதி நியமிக்கப்பட்டு 3 மாதத்தில் அவரும் சென்றுவிட்டதாக வழக்கறிஞர்களால் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் MF

செய்யும் அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு வழங்கி இருக்கும் நிலையையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் MF அதிகரித்திருக்கும் நிலையையும் நாம் பொருத்திப்பார்க்க வேண்டும்.

மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வருவாய் அலுவலர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், தனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அரசு வழக்கறிஞர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் சாரா உறுப்பினர்கள் அடங்கிய, புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு, ஒவ்வொரு காலாண்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடி வன்கொடுமைகள் மற்றும் வழக்குகள் பற்றிய கலந்துரையாடல் நடத்தி வழக்குகளை கண்காணிப்பதோடு, வன்கொடுமைகள் நிகழா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 20/06/2025-ல் நடந்த கூட்டத்தில் கூட மாவட்டத்தில் தீண்டாமை அதிகமாக கடைபிடிக்கும் கிராமங்களை கண்டறிந்து தீண்டாமை ஒழிப்பு தொடர்பாக வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மற்றும் காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, தனி வட்டாட்சியர் மற்றும் அந்தந்த வட்டாட்சியர்கள், மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், வருவாய் கோட்டாட்சியாளர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி ஏதேனும் நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறதா என்றால் எதுவும் இல்லை என்பது தான் பதிலாக நமக்கு கிடைக்கிறது. மேலும் வன்கொடுமைகள் நிகழ்ந்த ஏதேனும் ஒரு இடத்தையாவது விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு ஆய்வு செய்திருக்கிறதா, என்றால் அதற்கும் பதில் இல்லை. அலுவல் சாரா உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர மீதமுள்ளோர் அனைவரும் பெயரளவில் தான் இருக்கிறார்கள் என்பது அனைவரின் குற்றச்சாட்டு.

கட்சிபொறுப்பாளர்களின் தலையீடு

வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக அவர்களுக்குரிய சட்ட உதவிகளை செய்வதற்கு கட்சிப் பொறுப்பாளர்கள் எந்தவிதமான எதிர்பார்களுமின்றி பாடாற்றி வருகின்றனர். ஆனாலும் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து கட்சியின் முன்னனி பொறுப்பாளர்கள் தலையீடு செய்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேங்கைவயலில் நடந்த ஒரு மனிதத் தன்மையற்ற செயலுக்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஓரணியில் இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, அதைபோலவே ஒவ்வொரு

வன்கொடுமை வழக்குகள்நிகழ்விலும் ஒரு பட்டியல் சமூகத்தவர் பாதிக்கப்படுகிறபோது சாதி இந்துக்களான அனைத்துக் கட்சியினரும் வரிந்துக் கட்டிக் கொண்டு பஞ்சாயத்துக்கு வருகிறார்கள். நாமெல்லாம் ஒன்னுமண்ணா பழகியிருக்கோம், நமக்குள்ள என்னயா வேற்றுமை கிடக்கு, இப்படி வழக்கு கிழக்குனு போய்ட்டா ஊர் ரெண்டு பட்டுருமென சிலர் குளைவது மாதிரி பேசுவார்கள், சிலர் டேய் நீ வாபஸ் வாங்குறியா இல்லையானு மிரட்டுபவர்களும் சிலர் உண்டு. இவர்களுக்கு தங்கள் கட்சிகளின் சமூகநீதி கொள்கை பற்றியோ, பொதுவுடமை கொள்கைகள் பற்றியோ எந்த புரிதலும் அக்கறையும் இருக்காது. இது ஏதோ அடிமட்ட தொண்டர்களின் நிலைபாடு என கருதவேண்டாம். ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர், முந்நாள்- இந்நாள் அமைச்சர்கள் என அனைவருக்கும் இதே சாதிய மனநிலைதான். இந்த சூழலில் சில இடங்களில் சாதிய ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்ய பொதுவுடமைவாதிகளில் ஒருசிலரும், தலித் இயக்களில் பயணிக்கும் ஒருசிலரும் வரும் நிலை என்பது ஆகப்பெரும் வேதனை.

இப்படி பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆழமாக ஆலோசனை செய்யப்பட்டு வன்கொடுமைகளுக்கு எதிராக பின்வரும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்

1.) அனைத்துக் கட்சிகளை சார்ந்த கட்சி சார்பற்ற சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது எனவும், ஒருங்கிணைந்து செயல்படும் இந்த குழு “பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” எனும் பெயரில் இயங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

2.) புதுக்கோட்டை மாவட்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட தனிச்சிறப்பு நீதிமன்றத்திற்கு தனி நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், நீதித்துறையையும் “பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” வலியுறுத்துகிறது.

3.) புதுக்கோட்டை மாவட்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்ட தனிச்சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமிக்க காலதாமதம் ஏற்படும் பட்சத்தில், ‘பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை அறிவித்து நடத்தும் என தீர்மானிக்கப்படுகிறது.

4.) வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக அரசால் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞரை தவிர்த்து, சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமித்துக் கொள்வதற்கான நடைமுறை சிக்கல்களை போக்கி, பாதிக்கப்பட்டவர் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க கோரும் பட்சத்தில் எந்த தடையும் இல்லாமல்,

அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதற்கு ஒத்துழைப்பை தர வேண்டும் என தமிழ்நாடு அரசை “பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” வலியுறுத்துகிறது.

5.) “பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” சார்பாக மாதம்தோறும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தகவல்களைப் பெற்று வன்கொடுமை வழக்குகளை கண்காணிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

6.) புதுக்கோட்டை மாவட்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவில் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்வதில் வெளிப்படையுடன் இருக்க வேண்டும் எனவும், சமூக செயற்பாட்டாளர்களை குழுவில் இணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

7.) “பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு மூலமாக பாதிக்க பட்டவர்களின் பாதுகாப்பு, சாட்சிகளின் பாதுகாப்பு, ஆகியவற்றில் கவனம் செலுத்துவது எனவும், வழக்கின் போக்கை கண்காணித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

8.) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், புதுக்கோட்டைபட்டியல் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்ட தனிச்சிறப்பு நீதிமன்றம் கிடப்பில் போட்டிருக்கும் வழக்குகளையும், இனிவரும் வழக்குகளையும் விரைந்து விசாரணை செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் “பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” வலியுறுத்துகிறது.

9.) வன்கொடுமை தொடர்பாக வரும் புகார்களை காவல்துறை தாமதிக்காமல் வழக்காக பதிவு செய்ய வேண்டும் எனவும். எக்காரணத்தை முன்னிட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக புகாரை வாபஸ் பெரும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடக்கூடாது எனவும் ‘பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” வலியுறுத்துகிறது.

10.) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பட்டியல் சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பட்டியல் சமூக மக்களை ஒருங்கிணைத்து செயல்படும் “பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” தொடர்ந்து இயங்குவதற்காக ஒவ்வொரு உறுப்பினரும் மாதம் ரூ 100/-சந்தா செலுத்துவதென்றும், இந்த சந்தா சேமிப்பு நமது குழுவின் வளர்ச்சிக்கும், பட்டியல் சமூக வளர்ச்சிக்கும் பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

மேற்கண்ட 10 தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு, நமது “பட்டியல் மக்கள் உரிமை மீட்புக்குழு” எதிர்கால வேலை திட்டங்களாக பின்வருவன முன்மொழியப்படுகிறது. இவை அடுத்தடுத்த அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்பவைகளை அங்கீகரிக்கப்படுவதோடு, புதிய வேலை திட்டங்களை முன்மொழிவதற்கு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

எதிர்கால வேலைத்திட்டங்களின் முன்மொழிவுகள்:

1.) புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெறும் வன்கொடுமை வழக்குகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், இன்றும் தொடரும் தீண்டாமை கொடுமைகளை களைவதற்கு தொடர்ச்சியான சட்ட போராட்டங்களை முன்னெடுப்பதோடு தீவிரமாக களப்பணி செய்து அவைகளை தடுப்பது.

2.) இழிதொழில் ஒழிப்பு இயக்கம் நடத்தி சாதிய அடிமைத் தொழில்களை களைவதற்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வது.

3.) இட ஒதுக்கீட்டில் பட்டியல் சமூக மக்களுக்கு ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வது.

4.) புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களோடு தாதா இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு முன்வைத்த இரட்டை வாக்குரிமையை மீண்டும் பேசு பொருளாக்கி இரட்டை வாக்குரிமைகள் கிடைப்பதற்கான தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது.

5.) மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பட்டியல் சமூக மக்களையும், கட்சி பாகுபாடின்றி சமூக உரிமை என்ற ஒரே உடன்பாட்டின் அடிப்படையில் ஒரே குடையின் கீழ் திரள்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வது.

6.) கொள்கை, கோட்பாடு, தத்துவங்களின் அடிப்படையில் நமது பயணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், நமது இலக்கு ஒன்றுதான். ஆகவே குறைந்தபட்ச உடன்பாட்டின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான வேலைகளை செய்வது.

7.) பட்டியல் சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான உதவிகளை, பணிகளை செய்வது.

8.) நமது மாவட்டத்தின் ஒருங்கிணைப்பை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்த மாவட்டங்களில் நமது பணிகளை விரிவுப்படுத்துவது.

மேலும் முன்மொழிவுகள் உறுப்பினர்களின் வேண்டுகளுக்கிணங்க சேர்த்துக்கொள்ளப்பட்டு இந்த முன்மொழிவுகள் அனைத்தும் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.