உறை கிணற்றில் வீசிய துர்நாற்றம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இருவர் மாயமான நிலையில், அழுகிய உடலாக உறைகிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூர் நடுவப்பட்டி அருகே வேப்பிலைப்பட்டி கெங்கம்மாள் கோயில் பின்புறம் உள்ள உறைகிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் அப்பையநாயக்கன்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் பெறப்பட்டதும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் உறைகிணற்றை தோண்டியபோது, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மாயமான ரவிக்குமார் (48), சுரேஷ் (45) ஆகியோரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.

இருவரும் வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் தொம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வேப்பிலைப்பட்டியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதிகாலை இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற பின்னர் திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் இவர்களை கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் அப்பையநாயக்கன்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
போலீசார் தொடக்கக் கட்ட விசாரணையில், இருவரும் வயல்வெளியில் சட்டவிரோத மின்வலைக்கு சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவர்களின் உடல்கள் உறைகிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே சடலங்களை எடுத்துச் செல்வோம் என உறவினர்கள் தெரிவித்ததால், அந்தப்பகுதியில் பதற்றநிலை நிலவுகிறது.
அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மாரீஸ்வரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.