யாருனு தெரியாமலே 1 மணி நேரம் பேசும் தலைமுறை! – அனுபவங்கள் ஆயிரம்(5)
ஒரு நாள் நான் பஸ்சில் பயணம் செய்த அனுபவம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்…
ஐந்து மாதம் முன்(மே மாதம்) தேர்வுக்காக ஐந்து நாட்கள் என் ஊரிலிருந்து வேறு நகரத்துக்கு தினமும் போக வேண்டியிருந்தது. அந்த நாளில் ஒரு தேர்வு முடிந்ததும், நானும் எனது தோழியும் பஸில் ஏறினோம். ஆனால் சீட் போதாததால் நாங்கள் பிரிந்தே உட்கார வேண்டி வந்தது.
என்னுடன் அருகில் ஒரு இளம் பெண், தோளில் பை, கையில் மொபைல். பார்த்தவுடன் மாணவியா அல்லது வேலைக்குப் போகிறவரா என்றே தோன்றியது. பஸ் கிளம்பிய ஐந்து நிமிடத்துக்குள் அவளது மொபைல் ஒலித்தது.
அடுத்து நான் கேட்ட உரையாடல்
அவள்: “ஹலோ… சொல்லுங்க…”
(அடுத்து அவன் என்ன பேசுறான்னு எனக்கு கேட்கலை )
அவள்: “ஆமா… என் பேர்தான்… நீங்க?”
அவன் : …….
அவள் : “அப்படின்னு எனக்கு யாரும் தெரியலையே! என் பேரு சரியா சொல்றீங்க, ஆனா உங்களைத் தெரியல. என் நம்பரை எப்படி கிடைச்சது?”
அவன் : …
அவள் : “சொல்லுங்க… என் நம்பர் எப்படி கிடைச்சது?”
அவன் : ……
அவள் : ஐயோ… சொல்லுங்களேன்…. (சிணுங்கல் வேறு)
எனக்கோ ….அட கால கொடுமையே…. என்றாயிற்று…
இப்படி கேள்வி கேட்டு, பின்னாடி சில பெண்கள் சில ஆண்கள் பேரையும் குறிப்பிட்டு சொன்னாள்
“அவ குடுத்தாளா? அவன் குடுத்தானா….அவங்க வீட்டுக்கு போனீங்களா? நம்ம சந்திச்சி இருக்கோமா?”
என்று தொடர்ந்தாள்.
அவன் :….
அவள் :…. ஹலோ சொல்லுங்களேன்… நீங்க எனக்கு கடலை போட்றீங்கன்னு தெரியுது… ஆனா நான் கமிட்டட்ங்க….
அவன் :…..
எனக்கோ தலை சுத்துவது போல இருந்தது…
இதன் தொடர்ச்சி நிமிஷம்னா பரவாயில்ல, ஐயோ… நாற்பத்திஐந்து நிமிஷமா பேச்சு போச்சு!
என் மனசுக்குள்ள “Truecallerல போட்டுப் பாரு டி!” என்று சத்தம் போட்டது. மொபைலை பிடுங்கி கால் கட் செய்துவிட்டு நானே true caller ல் போட்டு பேர் தெரிகிறதா என்று பார்க்கலாமே….
ஆனா வெளியில் அமைதி காப்பாற்றினேன்… இல்லனா அவள்
“பூமர் ஆண்டியா நீங்க.., உங்க வேலைய மட்டும் நீங்க பாருங்க ”என்று என்னை சொல்லிவிட்டால்…
அப்படி சிந்திச்சுக்கொண்டிருக்கையில், அவளது உரையாடல் இன்னும் கிளை கிளையாகப் போச்சு:
“சரி என் ஸ்டாப் வந்துருச்சு… நா வீட்டுக்கு போறேன்… நீங்க கால்ல கட் பண்ணுங்க… ரெப்ரெஷ் ஆயிட்டு அரை மணி நேரத்துல நானே மீண்டும் கால் பண்றேன்… அப்போ நீங்கள் யாருனு சொல்லுங்க… சரியா?”
நான் நினைத்தேன், “இப்போவாவது முடிந்திருக்கும்!”
ஆனா இல்லை! பஸ் இறங்கியதும், அவள் இன்னும் பேசி கொண்டுதான் இருந்தாள்.
நான் பஸ்சில் இருந்து இறங்கி என் இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு சென்றேன்… அப்போ அவள் என் முன்னால் நடந்து கொண்டிருந்தாள் இன்னும் மொபைல் காதிலேயே!
அவள் சொல்றாள்:
“ஹலோ… நா வீட்டுக்கு போன அப்புறம் கால் பண்றேன்…. நீங்க அப்போவாச்சும் சொல்லணும் யாருனு…”
அப்போ என் மனதுக்குள்ளே வடிவேலு குரலில்
“திரும்பவும் முதலிலிருந்தா?!”
அவள் பின் சென்று
அவளது பெற்றோர்களைச் சந்தித்து சொல்லணும்னு தோணிச்சு ..
“ஒத்தரோசா.! உன் பொண்ண நல்லா வளர்த்து வெச்சி இருக்கே மா!!!! ஆனா யாருனு தெரியாம ஒரு மணி நேரம் பேசற நிலைமையில இருக்கா… யாருனு தெரிஞ்ச பையனா இருந்தா எவ்ளோ மணி நேரம் பேசிருப்பா!!!!
நெனச்சா கண்ணு கட்டுதே…
அந்த ஒரு மணி நேர பஸ் பயணம் எனக்கு ஒரு பாடம் கற்றுத்தந்தது
“இந்த தலைமுறை கேள்வி கேட்காது, பேசிக் கொண்டே இருக்கும்!”
— மதுமிதா







Comments are closed, but trackbacks and pingbacks are open.