சிக்ஸர்களை பறக்கவிட்ட பேட்ஸ்மேன்!
நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி, ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ரசிகர்களுக்கு மாபெரும் சிக்ஸர் விருந்தாக அமைந்தது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் மார்க் சாப்மேனின் அதிரடி வானவேடிக்கையால் நியூசிலாந்து அணி இமாலய ஸ்கோரை எட்ட, கடைசி ஓவர் வரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என நியூசிலாந்து சமன் செய்துள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவைத் தவறாக்கும் விதமாக நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங்கில் மிரட்டினர். தொடக்க வீரர்கள் டிம் ராபின்சன் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் 55 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளமிட்டனர். நான்காவது வீரராகக் களமிறங்கிய மார்க் சாப்மேன்தான் ஆட்டத்தின் நாயகனாக உருவெடுத்தார். வெறும் 28 பந்துகளைச் சந்தித்த அவர், 7 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 78 ரன்களைக் குவித்து, 278.57 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்தார். பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்தார். அவரது இந்த அதிரடியால், நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் என்ற ஸ்கோரை எடுத்தது. 208 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தது. 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், நியூசிலாந்தின் வெற்றி எளிதாகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், களமிறங்கிய ரோவ்மன் பொவெல் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். வெறும் 16 பந்துகளில் 45 ரன்களை (ஸ்ட்ரைக் ரேட் 281.25) விளாசிய அவர், போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றார். அவருக்குத் துணையாக, ரொமாரியோ ஷெப்பர்டும் 16 பந்துகளில் 34 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். இறுதியில், கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், நியூசிலாந்து பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் அபாயகரமான பொவெலை ஆட்டமிழக்கச் செய்து, நியூசிலாந்துக்கு 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைத் தேடித் தந்தார். நியூசிலாந்து தரப்பில், இஷ் சோதி மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர். நியூசிலாந்து அணிக்காக, குறைந்தபட்சம் 25 பந்துகளைச் சந்தித்த ஒரு இன்னிங்ஸில், அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் (279) பதிவு செய்த வீரர் என்ற சாதனையை சாப்மேன் படைத்தார்.
நியூசிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்
மார்க் சாப்மேன் – 279 (vs வெஸ்ட் இண்டீஸ், ஆக்லாந்து, 2025)
டிம் சைஃபர்ட் – 255 (vs பாகிஸ்தான், வெலிங்டன், 2025)
மார்ட்டின் கப்தில் – 252 (vs இலங்கை, ஆக்லாந்து, 2016)
ஃபின் ஆலன் – 245 (vs வங்கதேசம், ஆக்லாந்து, 2021)
ஆட்டத்தின் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய சாப்மேன், தனது முதல் 10 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், அதன்பிறகு சந்தித்த 18 பந்துகளில் 366.67 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் 66 ரன்களை விளாசினார். இது டி20 போட்டிகளில் சாப்மேனின் 10-வது அரை சதமாகும்.
— மு. குபேரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.