விருதுநகர் மாவட்டம் சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்த சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் இன்று நனவாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதால், இந்த மேம்பாலம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. கடந்த 2024 ஜூலை மாதம் துவங்கிய பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இன்று மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், எம்.பி. மாணிக்கம் தாகூர், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்து பார்வையிட்டனர். நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
“இந்த மேம்பாலம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட மூன்று மாதங்களுக்கு முன்பாகவே திறக்கப்பட்டுள்ளது. சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தது தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகும். இதைத் தொடர்ந்து திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளும் விரைவில் துவங்கப்படும்,” என்றார்.
பின்னர் பேசிய வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:
“சிவகாசி மக்களின் நீண்டநாள் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது. இதுதான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ராசி. முன்னாள் முதல்வர் கலைஞர் பல பாலங்களை கட்டியவர்; அதே வழியில் அவரது மகன் ஸ்டாலினும் மாநிலம் முழுவதும் வளர்ச்சி பாலங்களை அமைத்து வருகிறார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் யார் என கேட்டால், ஒரே பெயர் – மு.க.ஸ்டாலின் என்பதே வரும்,” என தெரிவித்தார்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.