சாலையோர வியாபாரம் ! 10 ஆண்டு கால உழைப்பின் கதை அல்ல அனுபவம்!
திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, பகவதி அம்மன் கோவில் , இவை மூன்றையும் சுற்றி முடித்து, ஒரு சிறிய ஓய்வு தேவைப்பட்ட தருணம் அது. கடற்கரையோரம் நின்ற ஒரு தள்ளுவண்டி தேநீர்க்கடையின் வாசனை நம்மை இழுத்தது. வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பக்கோடா, சூடான தேநீர், காற்றில் கலந்த அந்த மணம் எங்களை அமைதியடையச் செய்தது.
அந்த வண்டிக்குப் பின்னால் இரண்டு பெண்கள், ராதிகா, சுதா . முகத்தில் சூரியத்தின் பிரகாசத்துடன், கைகளில் உழைப்பின் ஒளியுடன் இருந்தார்கள். அவர்களை பார்க்கும் போது அதிகப்படியான வேலை அழுத்தத்திலும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் கவனித்தனர். அது அவர்களின் தனித்தன்மையாக என்னை மிகவும் ஈர்த்தது. அவர்கள் கொடுத்த பஜ்ஜியை சுவைத்துக்கொண்டே அவர்களின் இந்த கடை அனுபவத்தை கேட்டேன்… அவர்களும் அதே இன்முகத்துடன் என்னிடம் பகிர்ந்தனர்..
பத்தாண்டுகளாக இங்கதான் நாங்கள் கடை நடத்துறோம் என்று சிரித்தபடி சொன்னார்கள்.
அந்த சிரிப்பின் பின்னால் இருந்தது பல ஆண்டுகளின் பாடு, பொறுமை, உறுதி.
ஒரு வருஷத்துக்கு அறுபதாயிரம் கவர்மென்ட்க்கு கொடுக்குறோம் . இது நம்ம கை வியாபாரம், நம்ம உழைப்பால் நிற்கும் வாழ்க்கை என்ற நம்பிக்கை அவர்களிடம். சில நாள் டெய்லி நானூறு, ஐந்நூறு வரலாம். சில நாள் ஆயிரம். சில நாள் ஒரு ரூபாய்கூட வராது. மழை வந்தா கடை போட முடியாது, புயல் வந்தா நாங்கள் வீட்டிலேயே உட்காரணும். அப்போ கஷ்டம் தான் என்று சுதா என்பவர் சொன்னார். அவர் சொற்கள் சாதாரணமாக இருந்தாலும், ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையின் வலி தெரிந்தது.
கொரோனா காலம் தான் ரொம்ப கஷ்டம் என்று ராதிகா நினைவுபடுத்தினார். அப்போ சாப்பாட்டுக்கே வழி இல்ல. கூட்டம் இல்லை, கடை மூடப்பட்டது. யாரும் உதவி செய்யல. ஆனாலும் விட்டுக்கொடுகல மீண்டும் ஆரம்பிச்சோம்.
அவர்களின் கண்களில் அந்த மீண்டு எழும் சக்தி ஒளிந்திருந்தது.
கார்த்திகை, மார்கழி மாதம் தான் நம்ம சீசன் என்று சுதா சொன்னார்.
அப்போ டூரிஸ்ட்ஸும் ஐயப்பன் கோவில் போறவர்களும் வருவாங்க. கூட்டம் இருக்கும், வியாபாரம் நன்றாக நடக்கும். ஆனால் அதுவும் சில மாதம் தான். ஆனா அந்த மாதங்களில்தான் நம்ம வாழ்வோட்டம் நீளும்.
அந்த உரையாடல் முடிந்தபின், தேனீரின் சூடு இன்னும் கையில் இருந்தது.
பஜ்ஜியின் வாசனை, கடலின் காற்று, அவர்களின் சொற்கள் , எல்லாமே ஒன்றாக கலந்து ஒரு உணர்வைத் தந்தது.
அந்த இரண்டு பெண்களும் வெறும் வியாபாரிகள் அல்ல , வாழ்க்கையின் போராளிகள்.
அவர்களது வண்டி, அவர்களது உழைப்பு, அவர்களது மரியாதை.
பத்து ஆண்டுகளாக சூரியன், மழை, காற்று எதையும் பொருட்படுத்தாமல் அந்தச் சாலையோரக் கடை அவர்களுடன் வாழ்கிறது.
அது ஒரு சிறு வியாபாரம் அல்ல.
அது உழைப்பின் வாசனை, தன்னம்பிக்கையின் சின்னம், பெண்மையின் பெருமை.








Comments are closed, but trackbacks and pingbacks are open.