ரூ.1.32 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா!
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் (சாத்தூர்) திறந்து வைத்தார்.
இதில், நென்மேனி ஊராட்சிக்குட்பட்ட வன்னிமடையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம், உப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கஞ்சம்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம், தோட்டிலோவன்பட்டியில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், பெத்துரெத்துபட்டியில் புதிய சமுதாயக்கூட கட்டிடம் மற்றும் சின்ன ஓடைப்பட்டியில் நியாய விலைக் கடை கட்டிடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, உப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை வசதி தொடங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், அங்கு மகப்பேறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கும் என உறுதியளித்தார். மேலும், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் ராஜகுமாரிடம், அங்கு இதுவரை மகப்பேறு அறுவை சிகிச்சை நடைபெறாததற்கான காரணங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன், நகர் மன்ற தலைவர் குருசாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
— மாரீஸ்வரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.