பேரம் படியவில்லை – கூட்டணி அறிவிக்காமல் பின்வாங்கிய பிரேமலதா(?)
கடந்த 9ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் சுமார் 1இலட்சம் பேர் கலந்து கொண்டதாக அறிவிப்பு வெளியானது. விஜயகாந்த் மரணத்திற்குப் பின் தேமுதிக மாநாட்டில் கூடிய பெரிய கூட்டம் இதுதான் என்பதை மாநாட்டில் கலந்துகொண்ட தேமுதிக முன்னணி தலைவர்கள் வெளிப்படுத்தினர்.
இந்த மாநாட்டில் “தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 6 மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா,“யாருடன் கூட்டணி என்பதைக் கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். அதுவரை செய்தியாளர்கள் பொறுத்திருக்க வேண்டும்” என்பதைச் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைபோல் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் அரசியல் அரங்கத்திலும் தேமுதிக தொண்டர் மத்தியிலும் கடலூர் மாநாடு குறித்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் கூடிக்கொண்டிருந்தது.
ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய முன்னணித் தலைவர்கள் பலரும், “தேமுதிக தோல்வி அடைந்த கட்சியாக இருக்கலாம். ஆனால் திமுகவும் அதிமுகவும் தேமுதிக இல்லாமல் ஆட்சி அமைக்கமுடியாது. யார் ஆட்சியில் இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் தேமுதிக உள்ளது” என்று வீரவசனம் பேசினர். இதை இளைஞர் அணி செயலாளர் விஜய் பிரபாகரன், சுதீர், பிரேமலதா ஆகியோர் வீரவசனம் கேட்டுக் கைதட்டி இரசித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வில் பேசிய சிலர்,“கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குக் குருபூஜை நடத்தியதைப் பலர் இங்கே கேலி பேசுகிறார்கள். எங்கள் தலைவருக்கு நாங்கள் குருபூஜை செய்கிறோம். உங்களுக்கு என்ன வந்தது? கேப்டனை இல்லம் தேடி வந்தவர்களுக்குப் பசியாற உணவு தந்தார். ஊருக்கே சேறு போட்டார். அவர் நினைவிடத்தில் நாள்தோறும் சுமார் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. இதனை அண்ணியார் (பிரேமலதா) சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். இதனைக் கேலிபேசவோ கிண்டல் பண்ணிப் பேசவோ யாருக்கும் உரிமை இல்லை” என்று கோபம் கொப்பளிக்கப் பேசினர்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா தம்பியும் தேமுதிக முன்னணித் தலைவருமான சுதீர் பேசும்போது,“8 சீட்டுக்கும் 10 சீட்டுக்கும் அலையக் கட்சி என்கிறார்கள். எல்லாக் கட்சியிடமும் பேரம் பேசுகிறார்கள், இராஜ்யச் சபா சீட்டுக்காகக் கூட்டணி வைக்கின்றார்கள்” என்று பேசுகிறார்கள். நாங்கள் பேரம் பேசுவதில் என்ன தவறு. எங்களின் வாக்கு கூட்டணியில் உங்களுக்கு நாங்கள் போடும்போது பேரம் பேசுவதில் என்ன தவறு” என்று விளாசித் தள்ளினார். இளைஞர் அணி செயலாளர் விஜய் பிரபாகர் பேசும்போது,“இந்த மாநாட்டிற்கு நாங்கள் வரும்போது எங்கள் இரண்டு குலத் தெய்வக் கோவிலில் எங்கள் அம்மா, பொதுச்செயலாளர் சூறைத் தேங்காய் உடைத்தார். அந்த இரண்டு தேங்காய்கள் சிதறாமல் சரிபாதியாக இரண்டாகவே உடைந்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தேமுதிகவின் ஆதரவு ஆளுங்கட்சியான திமுகவுக்கும், எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் தேவைப்படுகின்றது. தேமுதிக ஆதரவு இல்லாமல் இங்கே ஆட்சியை யாரும் நடத்தமுடியாது என்பதைத் தெரிவிக்கின்றது” என்று சொல்லிக் கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியாக உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,“அரசியல் அரங்கில் எங்களைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இது தவறு. இங்கே பாருங்கள் 10 இலட்சம் கேப்டன் தொண்டர்கள் கூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேமுதிக ஒரு மாற்றத்தை உறுதியாகக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். நாங்கள் பேரம் பேசுகிறோம் என்று பத்திரிக்கைகள் அவதூறு பரப்புகின்றன. இதை நிறுத்திக் கொள்ளவேண்டும். கூட்டணியில் எங்களுக்கான இடத்தைக் கேட்டுப்பெறுகிறோம். இதைப் பேரம் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். நான் பல மாதங்களாகச் சொன்னபடி தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்கப்போகிறேன்.
சில வாரங்களுக்கு முன்பு தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி யாருடன் நாம் கூட்டணி சேரவேண்டும் என்று துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுக்கச் சொன்னேன். எழுதிக் கொடுத்த சீட்டைப் பிரித்துப் படித்துக் கட்சியினரின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ளேன். எந்தக் கட்சியும் கூட்டணியை அறிவிக்காத சூழ்நிலையில் தேமுதிக எதற்காக முந்திக் கொண்டு கூட்டணியை அறிவிக்கவேண்டும்? நின்று நிதானமாக யோசித்துக் கூட்டணி யாருடன் என்பதை அறிவிப்பேன். தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்கமுடியாது. வரப்போகும் தேர்தல் கூட்டணி ஆட்சியாகக்கூட இருக்கலாம். அந்த ஆட்சியில் தேமுதிக இடம்பெறும்” என்று உரையை நிறைவு செய்தார். வாய் பிளந்து எதிர்பார்ப்போடு காத்திருந்த கேப்டன் தொண்டர்கள் கொட்டாவி விட்ட வண்ணம் சுறுசுறுப்பு இல்லாமல் கலைந்து சென்றார்கள்.
அரசியல் களத்தில் கூட்டணி குறித்துக் கடைசி நிமிடத்தில் அறிவிப்பதைத் தேமுதிக ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறது. காரணம் இறுதிவரை பேரம் பேசுவது, இடங்களை அதிகரிப்பது, வைட்டமின் ‘ப’ கோடிக்கணக்கில் பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தேமுதிக ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுகவோடு கூட்டணி பேசிக் கொண்டிருக்கின்றது. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் உதயக்குமார் அவர்களால் 1 மாநிலங்களவை சீட்டு + 8 சட்டமன்றத் தொகுதிகள் வரை கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,“6 சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 4 அல்லது 5 தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள். அடுத்த முறை மாநிலங்களவையில் ஒரு சீட் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று பட்டும்படாமலும் உறுதி வழங்கியுள்ளார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் யாருடன் கூட்டணி என்பதற்குத் திமுக என்று 60% பேரும், அதிமுக என்று 20% பேரும் தவெக என்று 20% பேரும் வாக்களித்துள்ளனர். திமுக வெற்றிக்கூட்டணி அதில் சேருவதே தேமுதிக வளர்ச்சிக்கு உதவும் என்றும், மாநிலங்களவை உறுப்பினர் கொடுத்தால் அதிமுகவோடு கூட்டணி என்றும், இரண்டும் மறுத்தால் தவெகவில் அதிகச் சீட்டுகளைப் பெறலாம். வாக்கு வங்கியைக் கூட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணவோட்டமே தேமுதிகவில் உள்ளது. திமுக – அதிமுகவிடம் கூட்டணி பேரம் படியாமல்தான் பிரேமலதா கடலூர் மாநாட்டில் கூட்டணியை அறிவிக்கவில்லை என்று கட்சி வட்டாரங்கள் செய்தி தெரிவிக்கின்றன. திமுக – அதிமுக தேமுதிகவோடு இணைந்து ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்றாலும் ஒப்புக்குச் சப்பாணியாகவே அந்தக் கட்சிகள் பார்க்கின்றன என்பது தேமுதிகவிற்கு நன்றாகவே தெரியும் என்பதுதான் நகைமுரண்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.