நியோமேக்ஸ் : இது ஒரு இமாலயப் பணி ! சரித்திர சாதனை ! பரபர பத்திரிகையாளர் சந்திப்பு !
நியோமேக்ஸ் | ஏலம் விட்டு முதற்கட்ட நிவாரணம் !
தமிழகத்தில் ஆரூத்ராவுக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றதாக கருதப்படும் நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை கண்டு வருகிறது. முதற்கட்டமாக, கண்டறியப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை நோக்கி வழக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்கம் மற்றும் தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், ஜன-23 அன்று மதுரை செய்தியாளர்கள் அரங்கில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார்கள். ” நியோமேக்ஸ் வழக்கில் ஒரு சரித்திர சாதனை” என்றும்; ஆளும் திமுக அரசுக்கு நன்றி தெரிவித்தும்; பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு டி.ஜி.பி. பாலநாகதேவியின் மேற்பார்வையில், எஸ்.பி.சரவணக்குமார் டி.எஸ்.பி . இம்மானுவேல் ராஜ்குமார் உள்ளிட்ட EOW போலீசாரின் செயல்பாடுகள் மற்றும் நீதியரசர் பரதசக்ரவர்த்தின் விரைவான நடவடிக்கை ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பில், சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்கம் ; தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள்; மற்றும் சங்கத்தின் சார்பில் நியோமேக்ஸ் வழக்கில் ஆஜராகி வாதிட்டு வரும் வழக்கறிஞர்கள் ரஜினி, லாவண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

” EOW போலீசாரின் பணிகளில் திருப்தி இல்லை; நியோமேக்ஸ் நிறுவனம் வழக்கை இழுத்தடித்து வருகிறது; அதற்கு நீதிமன்றமும் துணை போகிறது” என்பதாக, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், இந்த பத்திரிகையாளர் சந்திப்பும் அந்த சந்திப்பில் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளும் கவனத்தை பெற்றிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், விரிவான பல விசயங்களை பட்டியலிட்டிருக்கிறார்கள். கடந்த மூன்றாண்டு காலம் வழக்கு கடந்து வந்த பாதை மற்றும் மற்ற வழக்குகளை காட்டிலும் இந்த வழக்கில் உள்ள சிறப்புத்தன்மைகளை அந்த அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள்.
நியோமேக்ஸ் வழக்கில் ஒரு சரித்திர சாதனை :
நியோமேக்ஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட 60000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வு காணும் வகையில், முதல்கட்டமாக “Pool-A” சொத்துக்களை (அங்கீகாரம் பெற்ற வீட்டடி மனைகளை) பொது ஏலம் விட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
இதற்காக பெருமளவில் நடவடிக்கை எடுத்து பரிபூரணமாக ஒத்துழைத்து 60000 குடும்பங்களின் நலன்களை பாதுகாத்திட்ட தமிழக அரசு, இவ்விஷயத்தில் ஒரு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதுவரை நடந்தது :
* நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் தொடர்பான வழக்கு கடந்த ஜீன்-2023ல் மதுரை- பொருளாதார குற்றப்பிரிவால் பதியப்பட்டது.
* நியோமேக்ஸ் குழும் நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், இதுவரை 60000-க்கும் மேற்பட்டோர் சுமார் Rs. 6400+கோடிகள் கோரி புகார் அளித்துள்ளனர்.
* நிறுவனத்தின் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் பெரும்பான்மையான சொத்துக்களை மதிப்பிட, மாண்புமிகு உயர்நீதிமன்ற (மதுரை கிளை) நீதிபதி மதிப்பிற்குரிய திரு. பரதச்சக்கரவர்த்தி அவர்கள், கடந்த ஏப்ரல் 2025ல், வல்லுநர்கள் குழுவை நியமித்தார்கள். மொத்த சொத்துக்களை 5 வகையாக (Pool-A, Pool-B, Pool-C, Pool-D & Pool-E என) வகைப்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட 60000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி 21, 2026 தேதியிட்ட ஒரு முக்கிய உத்தரவை (“Common Order’), நேற்று (ஜன-21) பிறப்பித்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு :
- பொது ஏலத்திற்கான உத்தரவு :
முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, நியோமேக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான சொத்துக்களில், உடனடி விற்பனைக்கு தயாராக உள்ள “Pool-A” சொத்துக்களை (DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்) பொது ஏலம் (Public Auction) மூலம் “உள்ளது உள்ளபடி நிலையில்” விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
- வரைவு விளம்பரம் (Draft Advertisement):
TNPID மற்றும் BUDS சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்த அதிகாரி (Competent Authority), பொது ஏலத்திற்கான “வரைவு விளம்பரத்தை’ (Draft Advertisement) தயார் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வரைவு விளம்பரம் வருகிற ஜனவரி 27, 2026 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கான சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- “Pool-A” சொத்துக்களின் விவரம்:
ஏலத்திற்கு வரவுள்ள “Pool-A” சொத்துக்கள் என்பவை-
* தமிழகம் முழுவதும் அமைந்துள்ள 31 DTCP அங்கீகராம் பெற்ற லே-அவுட்கள் (Approved Layouts);
* இதில் சுமார் 18666- க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் அடங்கும்.
* இதில் சுமார் 2400 ஏக்கர் பரப்பளவு நிலங்களில், கட்டுப்பட்ட 4,94,41,000 சதுரஅடிகள் கொண்ட வீட்டு மனைகள் உள்ளன.
* இவை அனைத்தும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற்ற மனைகளாகும்.
* மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி இந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் Rs. 2028 கோடிகள் ஆகும். ஆனால், நியோமேக்ஸ் நிறுவன மதிப்பீட்டின்படி இதன் மதிப்பு சுமார் Rs. 4165 கோடிகள் என நிறுவனத்தார் தரப்பில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியோமேக்ஸ் | ஏலம்… புகார்… நிவாரணம்… நீதிமன்ற விசாரணை !
- ஏல அறிவிப்பு மற்றும் தீர்வு:
* ஜனவரி 27 அன்று நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், முன்னணி நாளிதழ்களில் பொது ஏலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இதில் பொதுமக்கள் மற்றும் விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு அவர்களின் கருத்துப்படியான சந்தை மதிப்பில் (Market Value) ஏலத்தில் எடுக்கலாம். இதன்மூலம் திரட்டப்படும் பணமானது, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்குத் தீர்வாக (Settlement) வழங்கப்படும்.
* பாதிக்கப்பட்ட மற்றும் புகார்தெரிவித்த எந்த முதலீட்டாளரும் இந்த பொது ஏலத்தில் பங்கேற்கலாம். ஒவ்வொருவரும் 31 Project-களில் உள்ள 18000- க்கும் அதிகமாக உள்ள பிளாட்டுகளில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம்.
* ஒரு பிளாட்டிற்கு யார் அதிக விலை குறிப்பிட்டு விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பிளாட் அலாட்மெண்ட் செய்யப்படும் என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
* பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் விண்ணப்பித்தால், பொது ஏலத்திற்காக பொதுவாக நிர்ணயிக்கப்படும் EMD டெபாசிட் தொகையை அவர் செலுத்தத் தேவையில்லை.
இது ஒரு அற்புதமான ஏற்பாடு ஆகும்.

- எங்களது சங்கத்தின் சார்பாக மதிப்பிற்குரிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பரதச் சக்கரவர்த்தி அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி :
கடந்த 15 மாதங்களாக, இந்த கடினமான வழக்கினை மிகப் பொறுமையாக தீர விசாரித்து, நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தையும், மதிப்பீட்டு குழு அமைத்து முறையாக மதிப்பிட்டு, கிட்டத்தட்ட 60000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து புகார் பெற ஆவண செய்து, அதற்கான செட்டில்மெண்ட் செய்வதற்கு முன்முயற்சி எடுத்து எங்களது பல குடும்பங்களின் உயிரையும் உடமையையும் பாதுகாத்து காத்திட்ட மதிப்பிற்குரிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பரதச் சக்கரவர்த்தி அவர்களுக்கு அனைத்து 60000 குடும்பங்களின் சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
- எங்களது சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும், மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு DGP மதிப்பிற்குரிய பாலநாகதேவி அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுகளும் நன்றிகளும் :
மிகவும் குறுகிய காலத்திற்குள், பாதிக்கப்பட்ட 60000-க்கும் மேற்பட்ட புகார்களை கனிவோடு பெற்று, அவர்களை ஆறுதல்படுத்தி, நிறுவனத்தாரினை தீரவிசாரித்து அனைத்து சொத்துக்களையும் கைப்பற்றி, அவற்றை மதிப்பீடு செய்து, மதிப்பிற்குரிய சென்னை உயர்நீதி மன்றம் கோரும் அனைத்து விவரங்களையும் சரிவர சமர்ப்பித்து, அதோடு இவ்வழக்கில் தொடர்புடைய சுமார் 150க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு பதிலளித்து வழக்கினை சரியான திசையில் நடத்திட ஒத்துழைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தந்திட ஓயாமல் உழைத்திட்ட பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு எங்களது சிரம்தாழ்ந்த நன்றிகள்.
இது ஒரு இமாலயப் பணி.
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் சென்னை குற்றப்பிரிவு உயர்அதிகாரிகள் மற்றும் இந்த வழக்கில் இதுவரை வாதாடிய அனைத்து உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் அனைவருக்கும் எங்களது அனைத்து 60000 குடும்பங்கள் சார்பாக உளமார்ந்த நன்றிகள் பல.
சரித்திர சாதனை:
இந்தியாவில் இவ்வளவு குறுகிய 2 1/2 வருட காலத்திற்குள், Rs. 6000 கோடிக்கும் அதிகமான தொகைக்கான புகார் பெறப்பட்ட, இவ்வளவு பெரிய வழக்கில் அனைவரும் ஒத்துழைத்து செட்டில்மெண்டிற்கான துவக்கத்தினை எட்டியிருக்கும் செயல் என்பது ஒரு சரித்திர சாதனை. இது இந்தியாவில் முதல்முறை.
- வேண்டுகோள்:
60000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, அவர்களின் பணத்தை அல்லது அதற்கு இணையான சொத்துக்களை விரைவாகவும், நேர்மையாகவும் முழுமையாக திரும்பப் பெற்றுத் தருவதே மதிப்பிற்குரிய தமிழக அரசு மற்றும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரே நோக்கமாக இருந்தது. இதற்கான முயற்சிகள் தற்போது வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளது.
நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கும், தமிழக அரசின் உயரிய குறிக்கோள்களுக்கும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு, எங்களது சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.” என்பதாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.
தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில், நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் ஆளும் திமுக அரசின் தலையீடு காரணமாகத்தான், நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் தாமதமும் அநீதியும் இழைக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சுமத்தப்பட்டு வரும் நிலையில், ஆளும் திமுக அரசையும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் செயல்பாடுகளையும் பாராட்டி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.
நியோமேக்ஸ் தொடா்பான வீடியோ பதிவுகளை காண
நீதிமன்றம் வைத்த செக் ♟ வேகமெடுக்கும் வழக்கு !
இதுதான் பிரச்சினை… தேவை தனி கவனம் !
இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?
தனி டி.ஆர்.ஓ, தனி விசாரணை அதிகாரி ஏன் அவசியம் ?
எல்லா வழக்குகளும் ஒரே நீதிபதியிடம்… தயவு காட்டுவாரா தலைமை நீதிபதி ?








Comments are closed, but trackbacks and pingbacks are open.