தமிழகத்தில் காரல் மார்க்ஸ் !
காரல் மார்க்ஸ் சிலைக்குழுத் தோழர்கள் மூன்றாண்டு காலம் தொடர்ந்து செயல்பட்டதன் விளைவே இன்று காரல் மார்க்சின் கம்பீரமான சிலையாக தமிழகத்தில் ஒளிவீசிக் கொண்டுள்ளது.
பெயருக்கு நான் சிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும் இது குறித்த பல தோழர்கள் தொடர்ந்து செய்த பணியின் விளைவே இன்று கன்னிமரா பொது நூலக வளாகத்தில் காரல் மார்க்ஸ் உருவச் சிலை இன்று ஒளிவீசி நிற்கிறது. அவர்களில் தலைமை தாங்கி ஒளிவீசி நிற்கும் தோழர்களாக கீழ்க் கண்ட தோழர்களைக் குறிக்கலாம்.
தோழர்கள் மரிய சூசை, பாஸ்கரன், அன்பு தனசேகரன், பாலசுப்பிரமணியன், மனிதி செல்வி. ரமணி, மாரியப்பன், ரவிச் சந்திரன், சின்னப்பாத் தமிழர், கபிலன்……. இன்னும் பல முக்கிய தோழர்கள் இதில் செயல்பட்டுள்ளனர். அதில் சில பேர்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.
என்னுடைய சில நினைவுகளை இங்கே நான் நினைத்துப் பார்க்கிறேன். அவற்றில் சில:
முந்திய பிரிட்டிஷ் ஆட்சிக் காலங்களில் காரல் மார்க்சை இந்திய தமிழகங்களில் (அந்த பிரிஷ்டிஷ் ஆட்சிக் காலத்தில்) ஏற்றுக் கொள்வதில்லை என்னும் நிலை இருந்தது. சிங்லப்பூரில் ஒரு தொழிலாளியாகச் சென்றிருந்த என் தந்தை அடுத்த சில ஆண்டுகளில் அக்கட்சியில் முக்கிய செயல்பாட்டாளர்களில் ஒருவரானார்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பெரிய அளவில் ஆங்காங்கு சூரையாடப் பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த நம் மதிப்பிற்குரிய “மலையா கணபதி” அன்றைய பிரிட்டிஷ் அரசால் தூக்கில் இடப்பட்டார். என் தந்தை ஒரு உடைந்த கப்பலில் தப்பித்து வந்து தமிழகத்தில் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட தமிழரான என் தந்தையின் நண்பர் சுப்பையா இந்தியாவிற்குக் கட்டாயமாக அனுப்பப் பட்டபோது என் தந்தை அவரை ஏற்றுக் கொண்டார்,
அடுத்த சில ஆண்டுகளில், பிரிட்டிஷ் ஆட்சி இருந்தவரை அவர் கண்காணிக்கப்பட்டார். அப்படியான சூழலில் பிறந்தவந்தான் நான். அது நிற்க.
கடும் வறுமை மத்தியில் சற்றே ஒரு சிறிய வாழ்க்கையை உருவாக்கியபோது நான் பிறந்தேன். நான்காம் வகுப்புவரை நான் பள்ளி செல்லவில்லை. என் அன்னையின் பயிற்சியில் படித்து நான்காம் வகுப்பில் போய் என்னைச் சேர்த்தார்கள். அப்படிக் உருப்பெற்ற நான் நான்காம் வகுப்பில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.
11ஆம் வகுப்பில் நான் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற உடன் என் அம்மா என்னை திருச்சி செயின் ஜோசப் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என வற்புறுத்தியதால் அங்கு தேர்வு செய்யப்பட்டேன்.
என்னை அன்றைய கிரிஸ்தவ முதல்வர் “காரல் மார்க்ஸ்” எனும் பெயரை கண்டித்தார். என் கல்லூரி விண்ணப்பத்தை என் தந்தை மீது தூக்கி எரிந்தார். சில நிமிடங்களுக்கு பின் என் தந்தையை அவர்களின் உயர் அதிகாரி ஒருவரிடம் சென்று கையொப்பம் இட்டு வாங்கி வரச் சொன்னார். என் தந்தை என் விருப்பைக் கேட்காமலேயே அழைத்து வந்து தஞ்சை அரசு கல்லூரியில் நான் சேர்க்கப் பட்டேன்.
இதை எல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் அன்று கிறிஸ்தவப் பள்ளிகள் இப்படி இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். அதன் பின் இறுதிவரை அரசு கல்லூரியில் மாணவனாகவும் அரசு கல்லூரி ஆசிரியனாகவும் என் வாழ்க்கை அமைந்தது,
ஏதோ இன்று ஒரு கணம் காரல் மார்க்ஸ் சிலையை நான் இப்போது நம் தோழர்கள் மத்தியில் கண்டபோது சற்றே என் கண்களில் நீர் பதிய நினைத்துப் பார்க்கிறேன், காரல் மார்க்ஸ் எனும் பெயர் ஒரு காலம் வரை சற்றே அவ்வளவு எளிராக ஏற்கப் பட்டதில்லை.
ஆனால் இன்று அந்த நிலை இல்லை. என் அன்பிற்குரிய தோழர்கள் கடந்த மூன்றாண்டுகளாக காரல் மார்க்ஸ் சிலை நம் தமிழகத்தில் ஒளிவீச வேண்டும் என மேற்கொண்ட செயல்களை ஒரு கணம் நினைத்தபோது என் நெஞ்சில் நிறைந்த நினைவுகள்.
— அ.மார்க்ஸ்








Comments are closed, but trackbacks and pingbacks are open.