முதல்வரான பாமரன் வெற்றி சொல்லும் பாடம்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பல்வேறு அரசியல் வியூகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது. ஏற்கெனவே, கைவசமிருந்த மத்தியபிரதேசத்தோடு ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கரில் ஆட்சியை பிடித்திருக்கிறது பாஜக. மிசோரமில் பாஜக, காங்கிரசை பின்னுக்குத்தள்ளி ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. தெலுங்கானாவில் எதிர்பாராத திருப்பங்களோடு காங்கிரசு கட்சி ஆட்சியை பிடித்திருக்கிறது. இதற்கு காரணம் தற்போது முதல்வராக பதவியேற்றிருக்கும் ரேவந்த் ரெட்டிதான் காரணம் என்பது மறுக்கவியலாத உண்மை.
யார் இந்த ரேவந்த் ரெட்டி ?
ரேவந்த் ரெட்டி உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது, பாஜகவின் மாணவர் பிரிவான ABVP- யில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 2007ஆம் ஆண்டு ஆந்திர மாநிலச் சட்டமன்ற மேலவைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு மேலவை உறுப்பினரானார். பின்னர் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 2009ஆம் ஆண்டு ஆந்திர மாநிலச் சட்டமன்றத்திலும், 2014 தெலுங்கானா சட்டமன்றத்திலும் தெலுங்குதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.
2017ஆம் ஆண்டு தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகிக் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் கோடங்கல் தொகுதியில் தோல்வியடைந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தார். 2021ஆம் ஆண்டு ரெட்டி தெலுங்கானா பிரதேசக் காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
மக்களின் மனம் கவர்ந்த ரேவந்த் ரெட்டி
2021 ஆண்டு முதல் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்களைச் சந்தித்தார். சந்திரசேகர ராவ் அவர்களின் கட்சியின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை மக்களிடம் சுட்டி காட்டினார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடிய மக்கள் நலத் திட்டங்களைப் பொதுக்கூட்டங்களில் எடுத்துரைத்தார்.
சாலை வசதிகள் இல்லாத கிராமங்களில் மக்களைச் சந்தித்தார். அடிப்படை வசதிகள் குறைவாக இருந்த கிராமங்களில் மக்களி டம் உரையாடினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிராமங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மற்ற அரசியல்வாதிகளைப்போல பேசாமல், மக்களின் மொழியில் எளிமையாக பேசி அவர்களின் உணர்வில் ஒன்றாக கலந்தார். அவர்களின் மனங்களை கவர்ந்தார்.
ரெட்டியின் வாக்குறுதிகள்
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக மகாலட்சுமி திட்டத்தின் கீழ்த் தெலுங்கானாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500க்கு வழங்கப்படும்; அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசப் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்; விவசாயிகளின் குத்தகை நிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்; விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படும்; நெல் பயிர் விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும்; ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் ; மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பரோசா அட்டை வழங்குதல் ; முதியவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்குவது மற்றும் ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளே தெலுங்கானாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
’கை’ கொடுத்த கிராமங்கள் !
தெலுங்கானாவில் நகர் புறங்களில் 28 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 15இல் சந்திரசேகர ராவ் கட்சியும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் SEMI URBAN என்று சொல்லக்கூடிய புறநகர் பகுதிகளில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகளிலும் சந்திரசேகர ராவ் கட்சியும், 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியும், பாஜக, சிபிஐ கட்சி (காங்கிரஸ் கூட்டணி கட்சி) தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.
தெலுங்கானா கிராமப்புறப் பகுதிகளில் மொத்தம் 75 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 54 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ரேவந்த் ரெட்டி முதல் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டதும், முதலில், தேர்தலில் காங்கிரஸ் அளித்த முக்கிய 6 வாக்குறுதிகளுக்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட்டியின் உழைப்பு பாராட்டுக்குரியது. காங்கிரஸ் எழுச்சி பெற, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் மக்களைச் சந்திக்கவேண்டும். மக்களிடம் உரையாடவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி சாத்தியப்படும் என்ற உண்மையை ரெட்டியின் வெற்றி உணர்த்தியுள்ளது. இந்த வெற்றியை ஒரு மாடலாக எடுத்துக்கொண்டு அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை, மாநிலத் தலைமைகளுக்கு உணர்ச்சியூட்டி 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் வெற்றி கிட்டும் என்பதைத்தான் தெலுங்கானா வெற்றி சொல்லும் பாடம்
-ஆதவன்