மலக்குழியிலிருந்து மீளாத மனிதனும் ! அதிகாரி என்னும் அலட்சியமும் !
மலக்குழியிலிருந்து மீளாத மனிதனும் ! அதிகாரி என்னும் அலட்சியமும் !
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காகவும்; விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக வீரமுத்துவேல் என்ற தமிழர் இடம்பெற்றதற்காகவும் வியப்பில் வாயைப்பிளந்து விண்ணை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான், காலுக்கு கீழே பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் பணியில் மனிதர்கள் குடும்பம் சகிதமாக ஈடுபடுத்தப்பட்ட அவலமும் நிகழ்ந்தேறியிருந்தது.
திருச்சி பெரியகடை வீதியில், இந்தியன் வங்கி அருகில் ஆகஸ்டு-01 அன்று கண்ட காட்சி இது. தனிநபரோ, தனியார் நிறுவனமோ அல்ல; மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் அந்நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணியில் அதுவும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில்தான் இந்த அவலக்காட்சி என்பது மானக்கேடு.
மனிதக்கழிவுகளை சக மனிதனே தலையில் சுமந்து அப்புறப்படுத்திய காலமும் ஒன்று இருந்தது. என்னதான் ஆன்ட்ராய்டு யுகத்திற்கு மாறினாலும், கழிவுகளை அகற்றும் பணியிலிருந்து மனிதனை விடுவிக்க முடியாமல் தடுமாறுகிறது, சமூகம்.
பொதுவில் மனிதர்கள் என்பதைவிட, பாதாள சாக்கடைக்குள் இறக்கப்படுவதற்கென்றே ’ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட சாதியினரை’ என்று சொல்வதுதான் பொருத்தமானது.
பல்வேறு போராட்டங்கள், புள்ளிவிவரங்களுக்கு கட்டுப்படாத உயிரிழப்புகள், நீதிமன்ற வழக்குகள் என தொடர் இயக்கங்களின் விளைவாக, ”எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு பணியாளரையும் அபாயகரமான கழிவு நீர் கட்டமைப்புகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது” என்றும்; மீறினால், “இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறை மீறினால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்” என்றும் எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்று நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் கடந்த ஜூன்-17, 2023 அன்று வெளியிடப்பட்டிருந்தது. நீதிமன்றத்தின் பல்வேறு கண்டனங்களும் அரசு கோப்புகளில் பத்திரமாக இருக்கிறது. ஆனாலும், கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தபடும் அவலம் மற்றும் மாறிவிடவில்லை.
நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அறிக்கையாகவும், முன்னணி பத்திரிகைகளில் அரைப்பக்க அளவிலான பத்திரிகை செய்தியாகவும் வெளியிட்டதையெல்லாம் தூக்கி கடாசிவிட்டு, பாதாள சாக்கடைக்குள் குடும்பம் சகிதமாக மனிதர்களை இறக்கியிருக்கிறது, திருச்சி மாநகராட்சி நிர்வாகம்.
இதற்கு பேசாமல், “மனிதர்களை மலக்குழிக்குள் இறக்காமல் அடைப்பு எடுக்க சாத்தியமே இல்லையென்று” பகிரங்கமாக அறிவித்து விட்டு போய்விடுங்களேன். கண்டவன் கேள்வியெழுப்புவதற்கான அவசியம் இருக்காதல்லவா?
– இளங்கதிர்.