விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
விஜய் மாணவர்கள் சந்திப்பு!
~
இன்று 17.06.2023 ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சி வகுப்பு. (இத்தகைய பயிற்சி ஐஸ்கட்டி போன்றது. கைமாறி கைமாறி ஆசிரியர்களிடம் வரும்போது கரைந்திருக்கும். மாணவர்களிடம் செல்லும்போது ஆவியாகியிருக்கும்.)
ஒரு சின்ன ஹாலால் சிறை வைத்திருந்தார்கள்.
நாட்டில் என்ன நடக்கிறது?தெரியவில்லை. வீட்டுக்குவந்துதான் இன்றைய தினத்தை update செய்யமுடிந்தது.
விஜய் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசும் சான்றிதழும் விருந்தும் கொடுத்திருக்கிறார்.
பொதுவாக முதல் மூன்று இடங்கள் என்றால், கல்வி மாவட்ட அளவில், அல்லது, வருவாய் மாவட்ட அளவில் தேர்வு செய்வார்கள்.
விஜய் மக்கள் இயக்கம் தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கிறது. உண்மையில் விஜய்க்கு மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால்,
சூர்யா கடைபிடிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்திருக்க வேண்டும்.
இந்நிகழ்வு மூலம் விஜய்க்கு மாணவர்கள் நலன் மீது இருக்கும் ஆர்வத்தைவிட, அவரது அரசியல் ஆர்வத்தையை புரிந்து கொள்ள முடிகிறது.
விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருப்பது எந்த வகையிலும் தவறில்லை.
சனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
அதேவேளை ஒருவர் புதிதாக அரசியலுக்கு வரும்போது, அவரது அரசியல் தேவை, தனித்தன்மை வாய்ந்ததாகவும் அவசியமானதாகவும் இருக்க வேண்டும். பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது.
நலத்திட்ட உதவிகளை செய்வது விஜய்காந்த் போன்றவர்கள் ஸ்டைல். Corporate Social Responsibility போன்றது.
என்ஜிஓக்களும் செய்வதுதான்.
கோடிகளில் சம்பளம் பெறும் விஜய், ஏழைகளிடம் ஓட்டுப்போட பணம் வாங்காதே! என்கிறார். இது அன்னாஹசாரேவும், கமலும் பேசும் அரசியல்.
விஜய் மாணவர்களிடம் அம்பேத்கர், பெரியார், காமராஜரை படிக்கச் சொல்கிறார். ஒன்றை அடுத்தவர்களுக்கு உபதேசிக்கும்முன் அதை நாம் முயல வேண்டும்.
விஜய் அம்பேத்கரை படித்திருந்தால் வேங்கைவயல் அநியாயத்தைக் கண்டித்திருப்பார்.
பெரியாரைப் படித்திருந்தால் சினிமாவில் நாயகிகளை இழிவுபடுத்தும் காட்சிகளில், பாடல்களில், நடித்திருக்க மாட்டார்.
காமராசரை படித்திருந்தால் நீட் , நெக்ஸ்ட் , புதிய கல்விக் கொள்கை போன்றவற்றை கண்டித்திருப்பார்.
தன்னை கிறித்துவர் எனக்கூறும் பாஜகவின் மதவெறி அரசியலை எதிர்த்து இதுவரை விஜய் எதுவும் கூறியதாகத் தெரியவில்லை.
பிரகாஷ்ராஜ், டாப்ஸி, சித்தார்த் போன்ற திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்,
மைய நீரோட்ட அரசியலுக்கு வரவில்லை. விஜய்போல இவர்களுக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இல்லை. ஆனாலும் தொடர்ந்து
மத ஃபாசிச அரசியலை எதிர்க்கிறார்கள்.
ஓட்டுப்போட காசு வாங்காதே! என்பது இந்தியாவின் அரசியல் இல்லை. சாமியை சொல்லி, மதத்தை சொல்லி , சாதியைச் சொல்லி ஓட்டுக்காக இந்தியர்களை பிளவுபடுத்தாதே ! என்பதுதான் இன்றைய அரசியல்.
விஜய்யிடம் சினிமா கவர்ச்சி இருக்கிறது. அது மட்டுமே அரசியலுக்கு உதவாது. சினிமா ஹீரோவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கும், அரசியல் தலைவரிடம் மக்கள் எதிர்பார்ப்பதற்கும் இடைவெளிகள் உள்ளன.
இதே +2 மாணவர்கள் பட்டம் பெற்று, வேலையின்று நடுவீதியில் நிற்கும்போது அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருக்கலாம்.
வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படும்போது அவர்கள் பெரியாரிஸ்ட்டுகளாக மாறலாம். மாட்டுக்கறி அரசியலை புரிந்து கொள்ளும்போது அவர்கள் அம்பேத்கரிஸ்டாக பரிணாமம் பெறலாம்.
விஜய் அரசியலுக்குவர நினைத்தால் அவர் பெரியாரை, அம்பேத்கரை, காமராசரை படிக்கிறாரோ இல்லையோ, தினந்தோறும் தினத்தந்தியை படித்தாலே போதும். தமிழர்கள் நாள் தோறும் விடும் கண்ணீரை அறியலாம்.
பாவம் அவருக்கு லோகேஷ் கனகராஜோ, வெங்கட் பிரபுவோ எழுதிக் கொடுக்கும் வசனத்தைப் படிக்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது.
– கரிகாலன்
டிஜிட்டல் படைப்பாளி