பத்திரிக்கையாளர்களை நிர்வாணமாக ஓடவிட்ட நடிகை பூனம் பாண்டே !
30 வருடங்களுக்கு முன்பு… ‘தினகரன்’ ஆசிரியர் கே.பி. கந்தசாமி திருச்சி அலுவலகம் வந்திருந்தார். அவர் எப்போது வந்தாலும் அலுவலகத்திற்கான வசதிகள், வரவு செலவு பற்றி பார்த்துவிட்டு, ஊழியர்கள் விண்ணப்பித்திருந்த திருமணச் செலவு, மருத்துவ செலவு, சம்பள, கடன் பிரச்சினைகளை தீர்த்து விட்டு, கடைசியாக புகார்கள் பற்றி விசாரிப்பார்.
அவரது விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பள குறைப்புக்கு ஆளாவார்கள், அல்லது வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்பது பொதுவான நிலை . ஒருமுறை அவரின் விசாரணை வளையதிற்குள் நான் சிக்கினேன்… ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் நடந்த ரோட்டரி கிளப் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்தியில் துணைத் தலைவரின் பெயர் ‘ஜெயராமன்’ என்பதற்கு பதில் ‘ஜெயராம்’ என்று அந்த பிட்டு செய்தியில் குறிப்பிட்டு விட்டேன்.
இதில் சிக்கல் என்னவென்றால் ஜெயராமனை எதிர்த்து போட்டியிட்டவர் ஜெயராம். ஜெயராமன் 15 பைசா போஸ்ட் கார்டில் ஆசிரியருக்கு புகார் அனுப்பி விட்டார். அந்த புகாரின் விசாரணை இன்று… நான் நடுக்கத்துடன் ஆசிரியரை அவரது அறையில் சந்தித்தேன்… அவரது மேஜையில் நான் எழுதிய பிட்டுச் செய்தியும் ஜெயராமன் அனுப்பிய புகார் கார்டும் இருந்தது. ஆறடி உயர அஜாகுபானுவான கம்பீரத் தோற்றம் கொண்ட எங்கள் ஆசிரியர் தனது நீண்ட தோள் துண்டை சரி செய்து கொண்டே என்னிடம் கேட்டார்.
“ராமுக்கும், ராமனுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியுமா?° என்றார். எதனால் அப்படி கேட்கிறார் என்று தெரியாமல் நான் திகைத்து நின்றேன். உடம்பெல்லாம் வியர்த்து கொட்டிக் கொண்டிருந்தது. அவரே தொடர்ந்தார் “நீங்கள் முஸ்லிம் என்பதால் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான் ஆனால் ஒரு பத்திரிகையாளர் தெரியாத ஒன்றை, புரியாத ஒன்றை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்த பிறகு அதை செய்தியாக பதிவிட வேண்டும்.
எழுத்துப் பிழைதான் என்றாலும் உங்கள் செய்தி தவறானது. இந்த செய்திக்குள் உங்களை இணைத்துக் கொண்டிருந்தால்…அங்கு போட்டியிடுவது ராமும், ராமனும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். செய்தியை சரியாக எழுதி இருப்பீர்கள். செய்தி என்பது எழுதுவதல்ல… உணர்வது, உணர்ந்ததை மற்றவர்களுக்கு உணர்த்துவது.
தவறான செய்திக்காக மூன்று நாட்களுக்கு காலை உணவைத் தர வேண்டாம் என்று மெஸ் நிர்வாகத்திடம் சொல்லி இருக்கிறேன். இந்த தண்டனை பசியை உங்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அல்ல….தவறான செய்திகள் மற்றவர்கள் உணர்வை எப்படி பாதிக்கும் என்பதை உணர்த்துவதற்காக… சொல்லிவிட்டு எனது கையில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை தந்தார்.
இது பிளாஷ்பேக்…
இன்று… ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே புற்று நோயால் இறந்து விட்டதாக நான்கு வரி ட்விட்டர் பதிவை வெளியிட்டு இந்தியாவில் உள்ள அத்தனை மீடியாக்களையும் நடுத்தெருவில் நிர்வாணமாக ஓடவிட்டிருக்கிறார்.
எந்த விசாரணையும் செய்யாமல், எதையும் உறுதிப்படுத்தாமல் அப்படியே வெளியிட்ட அத்தனை மீடியாக்களும் இன்று தலை குனிந்து நின்று கொண்டிருக்கிறது
சில ஆண்டுகளுக்கு முன்பு மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்த நடிகை பூனம் பாண்டே இன்று மீடியாக்கள் அனைத்தையும் ஓட வைத்திருக்கிறார்.
– மீரான் முகமது
மூத்த பத்திரிகையாளர்