“அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி தொடரும்” – அதிமுக ஐவர் அணி அதிரடி !
“அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே கூட்டணி தொடரும்”
கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். டெல்லி பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமியோடு பேசியதை அடுத்து, “கட்சியினர் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கக்கூடாது” என்று எடப்பாடி வாய்மொழி உத்தரவு போட்டிருந்தார்.
இதற்கிடையில் பேரறிஞர் அண்ணா குறித்துத் தான் தெரிவித்த கருத்து வரலாற்றுப்பூர்வமானது. இதில் மன்னிப்புக்கே இடமில்லை என்று தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். பாஜக மேலிடம் அண்ணாமலையைக் கண்டிக்கவில்லை என்று அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் குமுறிக்கொண்டிருந்தனர்.
அதிமுக முன்னணித் தலைவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து விமானம் மூலம் தலைநகர் டெல்லி சென்றனர். இவர்களோடு டெல்லியில் இருந்த சி.வி.சண்முகமும் இணைந்துகொண்டார். இந்த ஐவர் குழு டெல்லியில் உள்துறை அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பியூஸ்கோல் ஆகியோரைச் சந்தித்து அண்ணாமலையின் பேச்சுகள் கூட்டணிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதை விளக்கிக் கூற நேரம் கேட்டிருந்தனர்.

22.09.2023 இரவு அதிமுகவின் ஐவர் குழு பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்தது. தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் தேவையற்ற செயல்களை அண்ணாமலை செய்துவருவதைச் சுட்டிக்காட்டிப் பேசினர். ஐவர் குழு சொன்ன தகவலைக் கேட்டுக்கொண்ட நட்டா “உங்களின் தகவல்களைத் தலைமை அமைச்சர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் எடுத்துச்சொல்கிறேன். அமித்ஷா தற்போது 5 மாநிலத் தேர்தல் மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருப்பதால் நீங்கள் சந்திக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
இதனைக் கேட்ட ஐவர் குழு, “தமிழ்நாட்டில் பாஜக-அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என்றால் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கவேண்டும். அண்ணாமலையை வைத்துக்கொண்டு எங்களால் கூட்டணியைத் தொடரமுடியாது” என்று உறுதிபடத் தெரிவித்ததாகப் அதிமுக அரசியல் விமர்சகர் கிஷோர்சாமி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாஜக முன்னணித் தலைவர் பியூஸ்கோல் அவர்களையும் ஐவர் குழு சந்தித்து, தமிழ்நாட்டின் கூட்டணி நிலவரங்களை எடுத்துரைத்தனர்.அண்ணாமலையை நீக்கித் தமிழ்நாட்டில் அதிமுகவோடு கூட்டணியைத் தொடருமா? என்ற கேள்வி தமிழ்நாடு அரசியல் களத்தைப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.