திமுக அமைச்சருக்கு நெருக்கமானவரை வேட்பாளராக்க துடிக்கும் அதிமுக விராலிமலை விஜயபாஸ்கர் !

திமுக அமைச்சருக்கு நெருக்கமானவரை வேட்பாளராக்க துடிக்கும் அதிமுக விஜயபாஸ்கர் ! மணப்பாறை சட்டமன்ற  தொகுதி 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுள் ஒன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதி. கரூர் மக்களவை தொகுதியின் கீழ் இடம்பெற்றிருக்கும் தொகுதி இது. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக, திமுக கூட்டணி கட்சியின் சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற பி.அப்துல்சமது இருந்து வருகிறார்.

2008- இல் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் உருவான தொகுதி மணப்பாறை. இதற்கு முன்னர், மருங்காபுரி தனித்தொகுதியாக இருந்தது. 2008 இல் திருச்சி மாவட்டத்தில் மட்டும் மருங்காபுரி, தொட்டியம், உப்பிலியபுரம், திருச்சி-1, திருச்சி-2 ஆகிய தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, மணப்பாறை, மண்ணச்சநல்லூர், துறையூர் (தனி), திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு என்பதாக மாற்றம் பெற்றது.

மணப்பாறை எம்.எல்.ஏ .ப. அப்துல் சமது

மணப்பாறை தொகுதி – பின்னணி !

மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய மூன்று ஒன்றியங்களையும், மணப்பாறை நகராட்சி, துவரங்குறிச்சி- பொன்னம்பட்டி பேரூராட்சியையும் உள்ளடக்கியிருக்கிறது. மணப்பாறை ஒன்றியத்தில் 21 ஊராட்சிகளில் 7 ஊராட்சிகள் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடம்பெற்ற நிலையில், எஞ்சியுள்ள 14 ஊராட்சிகளோடு, மருங்காபுரியில் 49 ஊராட்சிகள்; வையம்பட்டியில் 18 ஊராட்சிகள்; மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகளை கொண்ட தொகுதியாக மணப்பாறை இருந்து வருகிறது. இத்தொகுதியில் கவுண்டர், முத்தரையர், உடையார், ரெட்டியார், யாதவர், தேவர், பிள்ளைமார்கள், மற்றும் பட்டியலினத்தவர்கள் என பல சமூகங்களையும் கலவையாக கொண்ட தொகுதியாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, கணிசமாக கிறிஸ்துவர்கள் மற்றும் இசுலாமியர்களை கொண்ட தொகுதி இது. மணப்பாறை நகராட்சியில் மட்டும் 22.95% கிறிஸ்தவர்களாகவும்; 11.3% முஸ்லிம்களும், 17.1% பட்டியலினத்தவர்களும் வசித்து வருகிறார்கள். மருங்காபுரி இதுவரையில் 11 முறை சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இதில், 8 முறை தொடர்ந்து அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. திமுக 1996 இல் ஒரு முறையும் 2021 இல் கூட்டணி கட்சியான மமக ஒரு முறையும் வென்றிருக்கிறது. மருங்காபுரி தொகுதியின் முதல் தேர்தலை காங்கிரசு வென்றிருக்கிறது. அதன்பிறகு முழுக்க அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது.

பட்டியலினத்தவர் மற்றும் சிறுபான்மையினரும் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் பரவலாக வசித்து வந்த போதிலும், கவுண்டர் மற்றும் முத்தரையர் சமூகங்களை சேர்ந்தவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. தொகுதியின் குறை – நிறைகள் : இந்த கடந்த கால வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும், சாதி மற்றும் மதத்தை முன்வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் வழக்கமான நடைமுறைக்கு மாற்றாக, திருப்புமுனையாக, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கு அதுவும் கூட்டணி கட்சியான ம.ம.க.வுக்கு ஒதுக்கி வெற்றி பெற வைத்த தொகுதி என்ற தனிச்சிறப்பு இத்தொகுதிக்குரியது. 40 ஆண்டுகால கனவாக இருந்து வந்த அரசு கலைக்கல்லூரியை மணப்பாறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார், அப்துல்சமது. வையம்பட்டியில் ஐ.டி.ஐ. தொடங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தருவதிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார். மணப்பாறை மாட்டுச்சந்தைக்கான கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் இவரது சாதனைகளாக தொடர்கிறது. அதேசமயம், காவிரி மாவட்டத்திலிருந்து திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி வழியே பயணிக்கும் பொன்னணியாறு மேம்படுத்துவது தொடர்பாக, . காவிரி ஆற்றிலிருந்து தண்ணீரை பொன்னணியாறுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில் அவை தொடர்பான பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பது தொகுதியின் பெரும் குறையாக நீடிக்கிறது.

மணப்பாறைக்கு மல்லுக்கட்டுவோர்கள் யார் யார் ?

இந்நிலையில், திமுக தரப்பில் பிற்பட்டோர் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பள்ளப்பட்டி கோவிந்தராஜன் எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டுமென்று முனைப்பில் இருக்கிறார். இவரை தொடர்ந்து, ஒன்றிய சேர்மன் அமிர்தவள்ளி, வழக்கறிஞர் கிருஷ்ணகோபால், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், கீதாராஜா காவேரி மணியன், கீதா மைக்கேல்ராஜ், மும்பை நாகராஜ், முகமது ஹக்கீம், வெங்கடேஷ்வரன் என ஆளும் கட்சிக்குள்ளேயே அவ்வளவு போட்டி நிலவுகிறது. சென்றமுறை போலவே, இந்தமுறையும் கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கும் பட்சத்தில், காங்கிரஸ் சார்பில் வையம்பட்டி ரமேஷ், முருகேசன், வீரபாண்டியன், தமிழரசன் ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள்.

பாரதிதாசன் தேமுதிக
பாரதிதாசன் தேமுதிக

இந்தமுறை, தேமுதிகவும் திமுக கூட்டணிக்குள் வந்துவிட்ட நிலையில், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.பாரதிதாசன் எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார் என்கிறார்கள். அவரது மாமனார் கருப்பையா திமுகவின் மணிகண்டம் ஒன்றிய செயலாளராக இருப்பதும், அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவர் என்ற வகையிலும் கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கும் பட்சத்தில் எப்படியும் தனது மருமகனுக்கு சீட்டை வாங்கி கொடுத்துவிடுவார் என்றே சொல்கிறார்கள்.

டாக்டர் ரொஹையா துணைப்பொதுசெயலாளர்மறுமலர்ச்சி திமுக
டாக்டர் ரொஹையா துணைப்பொதுசெயலாளர் மறுமலர்ச்சி திமுக

இதுதவிர, மதிமுக சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொகையா மற்றும் சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய கூட்டணி கட்சியினரும் இந்த தொகுதிக்கு குறிவைத்து வருகிறார்கள்.

திமுக அமைச்சருக்கு நெருக்கமானவர் அதிமுக வேட்பாளரா ?

அதிமுக தரப்பில்தான் பெரிய ட்விஸ்டு காத்திருக்கிறது. அங்கே தெற்கு மாவட்ட அதிமுக மா.செ. குமார்,  முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர், சின்னசாமி ,  வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி ஆகியோர் இந்த முறை சீட் கேட்டு எதிர்பார்த்திருக்கும் நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் முன்னிறுத்தும் வேட்பாளரால் விழிபிதுங்கி கிடக்கிறது மணப்பாறை அதிமுகவினர். 

மணப்பாறை அதிமுக எம்.எல்.ஏ.கள். சின்னசாமி - சந்திரசேகர்
மணப்பாறை அதிமுக எம்.எல்.ஏ.கள். சின்னசாமி – சந்திரசேகர்

கடந்த 1 வருடத்திற்கு முன்பு அதிமுகவிற்கு வந்து விராலிமலை விஜயபாஸ்கர் துணையோடு மாநில மருத்துவர் அணியின் துணை செயலாளராக பதவியை பெற்றவரான மருத்துவர் விஜயகுமார் என்பவரை களமிறக்குவதற்கு எல்லா வகையான அஸ்திரங்களையும் பிரயோகித்து வருகிறாராம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர். விஜயபாஸ்கர் மட்டுமல்ல; எடப்பாடியாரின் வலதுகரமாக கருதப்படும் சேலம் இளங்கோவனின் சிபாரிசும் மருத்துவர் விஜயகுமாருக்குத்தான் என்கிறார்கள்.

அதிமுக மா.செ. குமார்
அதிமுக மா.செ. குமார்

மணப்பாறை பகுதியில் குமரன் மருத்துவமனை என்ற பெயரில், ஏரியாவிற்குள் பெயர் பெற்ற மருத்துவமனையின் உரிமையாளர்தான் விஜயகுமார். எம்.ஜி.ஆர். பாணியில் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட வேண்டுமென்ற முனைப்பில், தேர்தல் நெருங்கும் வேளையில் தொகுதி தொகுதியாக இலவச மருத்துவமனை முகாம்களை தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார் விஜயகுமார்.

மருத்துவர் விஜயகுமார். - எடப்பாடி பழனிச்சாமி
மருத்துவர் விஜயகுமார். – எடப்பாடி பழனிச்சாமி

முகாம்களை நடத்துவதெல்லாம் பிரச்சினையில்லை. ஆனால், நாடோடிகள் திரைப்பட பாணியில், பத்துரூபாய்க்கு முகாமை நடத்திவிட்டு நூறு ரூபாய்க்கு பெறுமானமுள்ள அலப்பறையை கண்டுதான் கலங்கி கிடக்கிறார்களாம். இத்தனைக்கும், அவரது குமரன் மருத்துவமனைக்கென்று தொடங்கப்பட்ட இணையதளம் தேமே என்றிருக்க, இவரது பெயரில் அதிமுக அடையாளத்துடன் இயங்கும் இன்ஸ்ட்ராகிராம் பக்கம்தான் அப்டேட்டில் தூள் பறத்துகிறதாம். இவர் இதை வைத்து கட்சிக்கு விளம்பரம் தேடுகிறாரா? இல்லை, தனது சொந்த மருத்துவமனைக்கு ஆள் பிடிக்கிறாரா? என்றே குழம்பிக்கிடக்கிறார்களாம் மணப்பாறை வாக்காள பெருமக்கள். அதுவும், நம்ம விஜயபாஸ்கரா இப்படி? என்று வாயை பிளக்கும் வகையில், அவரே காமெரா வைத்து நோயாளிகளை பேச வைத்து வீடியோவை வைரலாக்குவதையெல்லாம் சொந்த கட்சியினரே ரசிக்கவில்லை என்கிறார்கள்.

மணப்பாறை அதிமுக
மணப்பாறை அதிமுக

புதுக்கோட்டைக்கு ராஜாவாக இருந்தாலும், திருச்சியையும் அப்படியே தன் கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில்தான், அவர் மணப்பாறை டாக்டர் விஜயகுமாரை முன்னிறுத்துகிறார் என்கிறார்கள். யார் இந்த மருத்துவர் விஜயகுமார்? முன்னாள் அமைச்சராக, கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக சக மருத்துவருக்கு அவர் சீட் கேட்டு பரிந்துரைப்பதில் அவரை வெற்றி செய்ய வைக்க வேண்டுமென்று மெனக்கெடுவதில் குறை சொல்வதற்கு எதுவும் இல்லைதான். ஆனால், அவர் யாரை கை காட்டுகிறார் என்பதுதான், இங்கே சிக்கலாகியிருக்கிறது.

தற்போது, விராலிமலைவிஜயபாஸ்கர் முன்னிறுத்தும் மணப்பாறை விஜயகுமார், வேறு யாருமல்ல. திமுகவின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராக இப்போதும் வலம் வரும், திருச்சியின் அசைக்க முடியாத சக்தியாகவும் திகழும் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமான விஜயகுமாரை அதிமுகவின் வேட்பாளராக அடையாளம் காட்டுவதைத்தான் சொந்தக் கட்சியினரே விரும்பவில்லை என்கிறார்கள். கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் பலர் இருக்க இவரை ஏன் திடீரென்று உள்ளே நுழைத்திருக்கிறார் விஜயபாஸ்கர் என்ற கேள்விதான் மணப்பாறையை எதிரொலிக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவின் மகள் நிர்வகித்துவரும் மாருதி மருத்துவமனையில் மருத்துவராக நீண்டகாலம் பணியாற்றி வந்தவர்தான் மருத்துவர் விஜயகுமார்.

மருத்துவர் விஜயகுமார் விழாவில் திமுக அமைச்சர் கே.என்.நேரு
மருத்துவர் விஜயகுமார் விழாவில் திமுக அமைச்சர் கே.என்.நேரு

மணப்பாறையில் 7 வருடங்களுக்கும் மேலாக கிளினிக் போல நடத்தி வந்த நிலையில், பல்வேறு நவீன வசதிகளுடன் ஸ்ரீகுமரன் மருத்துவமனையாக சமீப ஆண்டுகளில்தான் தரம் உயர்த்தியிருக்கிறார். நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்ரீகுமரன் மருத்துவமனை திறந்து வைத்ததே, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருதான். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி, எம்.எல்.ஏ.காடுவெட்டி தியாகராஜன், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா வரையில் திமுகவின் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்ற விழாவாக இருந்ததுதான் ஹைலைட்.

இப்படி, ஏரியாவில் திமுகவின் அடையாளமாக, அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவராக இருந்த மருத்துவர் விஜயகுமாரை அதிமுகவில் சீட்டு வாங்கி தர ஏன் துடிக்கிறார் விராலிமலை விஜயபாஸ்கர் என்ன என்பதுதான் ட்ரில்லியன் டாலர் கேள்வியாக தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறது.

அங்குசம் புலனாய்வுக்குழு.

Comments are closed, but trackbacks and pingbacks are open.