இதை சமூகமாக வன்மையாக கண்டித்திருக்க வேண்டும்!
கேரளாவில் ஒரு நிகழ்வு…
ஒரு பெண்மணி – பேருந்தில் தனக்கு பாலியல் ரீதியான சீண்டல் நடப்பதாக ஒரு காணொளியைப் பதிவு செய்கிறார்.
அந்தக் காணொளியில் ஒரு மத்திய வயது நபர் பெண்மணியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக 26 நொடிகள் மட்டுமே இருக்கும் காணொளி பதிவு செய்திருக்கிறார்.
நான் அந்தக் காணொளியைப் பலமுறைபார்த்த பிறகு எனது முடிவுக்கு அந்தச் சகோதரர் பாலியல் ரீதியான சீண்டலை அறிந்தோ தெரிந்தோ செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
எனினும், பெண்மணி ஆன்லைனில் நியாயம் கேட்டுப் பதிவிட சமூக ஊடகங்களில் இருக்கும் நம்மைப் போன்றோர் காவல் துறை விசாரிக்கும் முன்னமே எஃப்.ஐ.ஆர் போடும் முன்னமே அடுத்து நீதிமன்றத்திற்கு வழக்கு செல்லும் முன்னமே
அன்னாரின் பெயர் ஊர் வயது முகவரி என்று தோண்டித் துருவி அவருக்கு ” பாலியல் சீண்டல் குற்றவாளி” என்று நீதி வழங்கி அவரை சமூக ஊடகங்களில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அவரது குடும்பத்திலும் பாதிப்பை உள்ளாக்கி, கடுமையான மன அழுத்தத்தில் அன்னார் தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தி இப்போது வந்திருக்கிறது.
பேருந்தில் செல்லும் ஆண்கள் அனைவரும். ஏன் ஆண்கள் அனைவரும் யோக்கியர்கள் என்றோ ஒழுக்க சீலர்கள் என்றோ நான் கூறுவரவில்லை.
மாறாக பெண்கள் இது போன்ற பொதுப் போக்குவரத்துகளில் பாலியல் ரீதியான சீண்டலுக்கு உள்ளாகி வருவதும் உண்மை. எனினும், தற்செயலாக கூட்ட நெரிசலில் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் அதனால் ஏற்படும் விஷயங்களைக் காணொளியாக்கி அதன் மூலம் ஒரு நபரின் ( உண்மையாகவே அவர் அப்பாவியாக இருக்கக் கூடும்) அடையாளத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதால் உண்மையில் என்ன பயன்?
இந்தச் செயல் பப்ளிசிட்டிக்காக வைரல் ஆக வேண்டும் என்பதற்காக செய்த செயல் என்பது கண்கூடு. இதை சமூகமாக வன்மையாக கண்டித்திருக்க வேண்டும். ஆனால் சமூகம் கூட அந்த சகோதரரைக் கண்டித்தது. கேவலப்படுத்தியது.
அந்தப் பெண்மணி செய்த செயலுக்கு அவருக்குரிய கூலி நிச்சயம் கிடைக்கும்.
ஆனால் இழந்த சகோதரரின் உயிரை மீட்க இயலுமா?
பாலியல் சீண்டலுக்கு உள்ளானால் நிச்சயம் அந்த பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு எதிராக புகார் அளித்து அதற்குரிய தண்டனையை நீதியின் பக்கம் இருந்து பெற்றுத் தருவது தான் சரியான வழக்கம்.
ஆனால் இங்கு நடப்பதோ வேறு அனைவருக்குமே இண்ஸ்டண்ட்டாக வைரல் மெட்டீரியல் ஆகி விட வேண்டும் என்றும் லைக் / வியூவர்ஸ் கவுண்ட் அதிகமாக வேண்டும் என்பது மூளையில் பதியப்பட்டு வருகிறது.
நான் ஏற்கனவே எழுதியது போலத்தான் இங்கு அனைவரும் பிரபலம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோமே அன்றி அதற்கு உரிய தியாகத்தையும் உழைப்பையும் செலுத்த முற்படுவதில்லை.
கூடவே பலரும் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறோமே அன்றி அந்தப் பார்வையாளர்களுக்கு உபயோகபமாக அவர்கள் ரசிக்கும் படி ஏதேனும் செய்கிறோமா என்று சிந்திப்பதில்லை.
சமூகமும் மெல்ல மெல்ல யூட்யூப் பிரபலம் இண்ஸ்டா ஃபேமஸ் என்று மாறி அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கத் துவங்கி இருக்கிறது.
பள்ளி ஆண்டு விழாக்கள் கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் கூட கல்வியில் சாதித்து முன்னேறியவர்கள் விளையாட்டில் பதக்கம் வென்றவர்கள் பல்துறை சாதனையாளர்களைக் கூப்பிடுவதை விடுத்தும் சமூக ஊடகங்களில் அதிக லைக் / அதிக சப்ஸ்க்ரைபர்கள் வைத்திருப்பவர்களை அழைத்து அதன் மூலம் பள்ளிக்கும் கல்லூரிக்கும் விளம்பரம் தேடும் நிலையில் நாம் இருக்கிறோம்.
சமூகம் எதற்கு அங்கீகாரம் தரத் துவங்குகிறதோ அதைத் தேடி இளைஞர்கள், இளைஞிகள், சிறார், சிறுமியர் ஓடுகிறார்கள்.
ஒரு காலத்தில் நன்றாகப் படிப்பவன் கெட்டிக்காரன் இன்னொரு காலத்தில் நன்றாக விளையாடுபவன் வீரன் இன்று யூட்யூப் சேனல் ஆரம்பித்து லட்சம் சப்ஸ்கரைபர் இருந்தால் அவரை மதிப்போம். இண்ஸ்டாவில் ரீல்ஸை பல்லாயிரம் பேர் பார்த்தால் அருமை என்று காலம் மாறியிருப்பது நல்லதல்ல.
இந்த சமூக அங்கீகாரம் மற்றும் பொருள் ஈட்டும் தோற்றுவாயாக சமூக ஊடகங்கள் மாறி இருப்பதால், சிறார் சிறுமியர் – கல்வி கூட இரண்டாம் பட்சம் தான். சமூக அந்தஸ்து மற்றும் பார்வை போதும். பணம் ஈட்டிவிடலாம் என்று படிப்பை இரண்டாம் பட்சமாக எண்ணும் சூழல் வந்துள்ளது.
படித்துப் பெறும் பட்டம் என்பது வெறுமனே சம்பாதிக்கத் தான் என்ற எண்ணம் ஊட்டப்பட்டதால் சம்பாதிக்க படிப்பு தேவையில்லை – கண்டெண்ட் க்ரியேட்டராக இருந்தால் போதும் என்ற சூழல் உருவாகி வருகிறது.
யூட்யூப் /இண்ஸ்டா வருமானம் சமூக ஊட புகழ் யாவையும் நிலையற்றவை. கற்ற கல்வி பெற்ற பட்டம் ஆகியன எப்போதும் நிலையானவை என்பதை நாம் தான் புரிய வைக்க வேண்டும்.
நாமோ படிப்புக்கும் சம்பாத்தியக்கும் சம்பந்தமில்லை என்று அவர்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுகிறோம்.
இதன் விளைவாக சிறார் சிறுமியர் மது அருந்தும் காணொளிகள் கொடும் ஆயுதங்களைக் கையில் வைத்து இளையோர் மிரட்டும் காணொளிகள். ஓடும் தொடர்வண்டியில் தொங்கிக் கொண்டு செல்லும் காணொளிகள் என்று வந்து கொண்டிருக்கின்றன.

உணவுகளில் இண்ஸ்டண்ட் மகிழ்ச்சி தரும் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகள் எவ்வளவு ஆபத்தானவையோ அதே போலத்தான் காணொளிகளிலும் உங்களை சிந்திக்க வைக்காத கல்வி தராத இண்ஸ்டண்ட் சந்தோசம் தரும் காணொளிகளும் போதை வஸ்துக்களே ஆகும்.
இவற்றால் சமூகத்திற்கு நன்மையன்றி தீமையே விளையும்.
உண்மையிலேயே அந்த நபர் பாலியல் சீண்டல் செய்திருந்தாலும்
அதற்கு காவல் துறை விசாரணை – தேவைப்படின் கைது நடவடிக்கை- நீதி விசாரணை பின் சட்டப்படி தண்டனை என்பது தானே சரி.
ஆனால் அதை விடுத்து ஒரு சாதாரண நிகழ்வின் மூலம் ஆதாயம் தேட அந்தப் பெண்மணி நினைத்தார். அந்த நிகழ்வை வைத்து ஆதாயம் தேட சமூகமும் நினைத்தது.
இந்தப் பேராசையால் ஒரு உயிர் இன்று நம் கண்முன்னே சென்றிருக்கிறது.
இது நாளை யாருக்கும் உங்களுக்கும் எனக்கும் நமது வீட்டில் ஒருவருக்கும்ஷ நடக்கலாம் அன்பர்களே..
இறந்தவர் என் சகோதரர் காட்சிப் பதிவை இட்டவர் எனது சகோதரி அதற்கு ஓரவ் ரியாக்ட் செய்தது எனது சமூகம்.
இதில் ஒவ்வொன்றையும் நான் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. அனைவராலும் ஆன்லைன் நச்சுத்தன்மையை சகித்துக் கொள்ள இயலாது.
இப்போது அந்தச் சகோதரி மீது நமது நச்சுத்தன்மையை விதைக்காமல் விலகி இருப்போம்.
விழித்துக் கொள்வோம் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்..
— Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா








Comments are closed, but trackbacks and pingbacks are open.