அங்குசம் செய்தி எதிரொலி ! முடிவுக்கு வந்த ஒன்பது ஆண்டுகால அவலம் !
“அங்குசம் செய்தி” எதிரொலியால் வெறும் இருபதே மாதங்களில், புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா கண்டிருப்பது கிருஷ்ணகிரி – மூங்கில்பட்டி கிராம மக்களை மகிழ்வில் ஆழ்த்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிக்கபூவத்தி ஊராட்சிக்குட்பட்ட அடர்ந்த வன பகுதிக்குள் அமைந்திருக்கிறது ‘ மூங்கில்பட்டி எனும் குக்கிராமம். வனமும் வனம் சார்ந்த விவசாயிகளால் வாழும் அழகுசூழ் கிராமம் அது.
அரசின் திட்டங்கள் எப்போதும் இதுபோன்ற, தொலைதூர கிராமங்களுக்கு அதுவும் மலை கிராமங்களுக்கு சென்று சேர்வது என்பது குதிரை கொம்புதான். அதன் துலக்கமான உதாரணம்தான், ஒன்பது ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வந்த கொடுமை. அரசு கட்டிக்கொடுத்த அங்கன்வாடி மையம் பாழடைந்து போனதால், அதில் பாம்பும், பூரான்களும், செங்குளவிகளும் தஞ்சமடைய தற்காலிகமாக வாடகை கட்டிடம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்தது அங்கன்வாடி மையம். ஒன்றல்ல இரண்டல்ல ஒன்பது ஆண்டுகளை அப்படியே ஓட்டிவிட்டார்கள். ஒருகட்டத்தில் அந்த கட்டிடத்தின் உரிமையாளரே, காலி செய்யுமாறு நிர்ப்பந்தம் செய்ய செய்வதறியாது, அங்குசம் செய்தியை அணுகினர் அப்பகுதிய இளைஞர்கள்.
வார்டு உறுப்பினர் முதல், எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் வரையில் மனுவுக்கு மேல் கொடுத்தும் எந்த ஒரு விடிவும் கிடைக்கவில்லை என்பதாக ஆதங்கத்தை பதிவு செய்திருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியராக அப்போது, சரயு இருந்தார். மாவட்டத்தின் கலெக்டராக இருந்தபோதிலும் தனியார் நர்சர் பள்ளிகளில் சேர்க்காமல் சிறந்த முன்னுதாரணமாக, அவர் தனது மகளை அரசு நடத்தும் அங்கன்வாடி மையம் ஒன்றில்தான் சேர்த்திருந்தார். இப்படி ஒரு மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ள மூங்கில்பட்டி கிராமத்தில்தான், ஒன்பது ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அவலம் நிலவுவதை ஒப்பிட்டு, “அரசு அங்கன்வாடியில் கலெக்டர் மகளும்; மேற்கூரையில்லாத அங்கன்வாடியும் ! ” … என்ற தலைப்பில் கடந்த 2024 ஜனவரி 18- அன்று அங்குசம் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். மாவட்ட ஆட்சியர் சரயுவின் நேரடி கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.
செய்தி வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் எம்.எல்.ஏ.வும்., எம்.பி. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும் அடுத்தடுத்து மூங்கில்பட்டிக்கு படையெடுத்தனர். பாழடைந்த அங்கன்வாடியையும், வசதிக்குறைபாட்டோடு வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அங்கன்வாடியையும் பார்வையிட்டு சென்றனர்.
இதனைதொடர்ந்து நேரடி கள ஆய்வுக்கு வந்திருந்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், “ நிச்சயமாக என்னுடைய நிதியிலிருந்து புதிய கட்டிடம் கட்டித்தருகிறேன்” என்பதாக அங்குசம் செய்திக்கும் வாக்கு கொடுத்திருந்தார். இதனையும் நாம் அடுத்தடுத்து அங்குசம் இணையத்தில் ஃபாலோ – அப் செய்திகளாக தொடர்ந்து வெளியிட்டு வந்தோம்.
இந்த பின்னணியில்தான், ‘தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை’ சார்பில் பணிகள் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டன. பாழடைந்த கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டு, அதனிடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான அங்கன்வாடி மையமும் எழுப்பபட்டது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு புத்தாண்டின் தொடக்கமாக, ஜனவரி-01 அன்று ஊர் பொதுமக்களே ஒன்றுகூடி அங்கன்வாடியை திறந்து வைத்திருக்கிறார்கள். தற்போது, அங்கன்வாடி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.
மூங்கில்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் , சர்வேஸன், பெருமாள் ஆகியோர் பேசும்போது, “அங்குசம் செய்தி அங்கன்வாடி மையத்தின் அவலநிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால்தான், எங்கள் அங்கன்வாடிக்கு விடிவு காலம் பிறந்தது. மேலும், முடக்கப்பட்டிருந்த சாலை வசதி, பஸ் போக்குவரத்தும் செயல்பட தொடங்கியது” என்றவர்கள், ”அதுவும் செய்தி வெளியிட்டு வெறும் 20 மாதங்களிலேயே அங்கன்வாடி மாதங்களிலே எங்கள் கிராம குழந்தைகளுக்குப் பாதுகாப்பான “அரசு அங்கன்வாடி மையம்” கிடைத்திருப்பதாக” மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
”மக்களுக்கான செய்தி” என்பது வெற்று முழக்கம் அல்ல; அது ”அங்குசம் செய்தி”யின் செயல் வடிவம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டது, இந்த நெகிழ்வான சம்பவம்.
— மணிகண்டன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.