பெரியார்-அண்ணா பொதுவாழ்வில் திருச்சி ! வீடியோ செய்தி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெ ரியார்-அண்ணா பொதுவாழ்வில் திருச்சி – திராவிட இயக்கங்களின் திருப்புமுனை நகரமாக இருப்பது திருச்சி மாநகரம். நீதிக்கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார் பெரியார். அந்தத் தீர்மானத்திற்கு, ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்று பெயர். அடுத்த ஆண்டு, திருச்சியில் திராவிடர் கழக மாநாடும் நான்காவது சுயமரியாதை மாநாடும் திருச்சியில் நடந்தது.

Anna - Periyar - Trichy
Anna – Periyar – Trichy

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

1945 செப்டம்பர் 29, 30 ஆகிய இருநாட்கள் திருச்சி புத்தூர் மைதானத்தில் நடந்த மாநாட்டின் முதல் நாளில் வரவேற்புக்குழுத் தலைவர் திருச்சி வழக்கறிஞர் தி.பொ.வேதாசலம். இரண்டாம் நாளில் வரவேற்புக்குழுத் தலைவர் பேரறிஞர் அண்ணா. மாநாட்டிற்கு முன்பாக பெரும் மழை பெய்து மாநாட்டுத் திடல் சேறும் சகதியுமாக ஆகிவிட்டது.

தி.க. நிர்வாகிகள் மண்வெட்டியுடன் களமிறங்கி, மழை நீரை வடியச் செய்து, மணலைக் கொட்டி சரி செய்தார்கள். மண்வெட்டியும் தலையில் முண்டாசுமாக களமிறங்கியவர்களில் ஒருவர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் குடியிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா. பெரியார், அண்ணா ஆகியோரும் மாநாட்டுத் திடலுக்கு வந்து சரி செய்யும் வேலையில் ஈடுபட்டனர். சிறப்பாக நடந்த இந்த திருச்சி மாநாட்டில்தான், கருப்பு சட்டை படையை உருவாக்கினார் பெரியார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வீடியோ லிங்

1949ல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா. இரு இயக்கங்களுக்கும் பகையுணர்வு கடுமையாக இருந்தது. பெரியார் மிகுந்த கோபத்துடன் இருந்தார். விடுதலை நாளேட்டில் அது வெளிப்பட்டு வந்தது. தி.மு.க.வின் நிர்வாகிகளும் பதிலுக்குப் பதில் நின்றனர். அண்ணா நிதானமாக செயல்பட்டார்.

சகோதரப் பகை ‘குருஷேத்திர’மாகி, இன எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்பதை தி.மு.க. தொடங்கிய பிறகு சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த முதல் பொதுக்கூட்டத்திலிருந்தே அவர் அறிவுறுத்தி வந்தார். அதில் அவர் கவனமாகவும் இருந்தார்.

கைத்தறி துணி விற்கும் போது எடுத்த படம்
கைத்தறி துணி விற்கும் போது எடுத்த படம்

1949ல் தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில், 1950ல் நடந்த வழக்கின் தீர்ப்பும், சிறைத் தண்டனையும் பெரியார்-அண்ணாவின் பழைய பந்தத்தை வெளிப்படுத்தி, இயக்கத்தினருக்கும் அதனை உணர்த்தியது. அது பற்றி அண்ணாவே எழுதியிருக்கிறார்.

“திருச்சியில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி! பெரியாரும் அதே நாளில் அதே விதமான தண்டனை பெற்ற அதே சிறைக்கு வந்தார். ‘ஆரிய மாயை’ என்னும் ஏடு தீட்டியதற்காக எனக்குச் சிறை. ‘பொன்மொழிகள்’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை.

திருச்சி கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசை போலும்! இரண்டும் தனித் தனி வழக்குகள்; தனித் தனியாகத்தான் விசாரணைகள்; எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னை, அன்று அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்து, வேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து, ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையிலே இருந்த அதிகாரி, பெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம். எனக்கு உள்ளூர பயம். கேள்விக் கணையுடன் நிறுத்திக் கொள்ளாமல் அன்புக் கணையையும் (பெரியார்) ஏவினால் என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன்.

Anna - Periyar - Trichy
Anna – Periyar – Trichy

பக்கத்துப் பக்கத்து அறை; பகலெல்லாம் திறந்துதான் இருக்கும்; பலர் வருவார்கள்; இங்கு சிறிது நேரம்; அங்கு சிறிது நேரம்; இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள், நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமோ என்று! அவர், அறைக்கு உள்ளே இருக்கும்போது நான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியே வர முயற்சிக்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்று விடுவேன்.

இப்படிப் பத்து நாட்கள். நாளைய தினம் எங்களை விடுவிக்கிறார்கள் – முன் தினம் நடுப்பகலுக்கு மேல் ஓர் உருசிகரமான சம்பவம் நடைபெற்றது. பெரியாருக்கு வேலைகள் செய்து வந்த ‘கைதி’, என் அறைக்குள் நுழைந்து, ‘அய்யா தரச் சொன்னார்’ என்று சொல்லி, என்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத்தான். கையில் வாங்கியதும் என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்தபோது கண்ட காட்சிகளின் மீது சென்றது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

வீடியோ லிங்

மறுநாள் திடீரென்று விடுதலை கிடைத்தது. அந்த வேடிக்கையும் கேள், தம்பி! எங்களை விடுதலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே வெளியே தெரிந்து விட்டிருக்கிறது. எனவே, எங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் வெளியே ஏற்பாடுகள் செய்யத் தொடங்கி விட்டிருந்தனர். நமது (தி.மு.)கழகத்தார் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு, நேரத்தை மறந்து விட்டனர்; எனவே சிறைக் கதவு திறக்கப்பட்டு எங்களை வெளியே அனுப்பியதும் வாசற்படியருகே பெரியாரை அழைத்துச் செல்ல வந்தவர்கள் கொண்டு வந்த மோட்டார்தான் இருந்தது. அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர்.

அண்ணா முதல்வர் பதவி
அண்ணா முதல்வர் பதவி

இது போதாதென்று போட்டோ எடுப்பவர் ஒருவர் ஓடி வந்தார். ‘இருவரும் அப்படியே நெருக்கமாக நில்லுங்கள்’ என்று போட்டோ எடுத்துவிட்டார். அது வெளியிடப்படவில்லை. (தி.பொ.) வேதாசலம் அவர்கள் வீடு வரையில் சென்று அவர் (பெரியார்) இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன்” -என விவரித்திருக்கிறார் அண்ணா.

நூறு வார்த்தைகளால் சொல்ல வேண்டியதை திருச்சி சிறைக்குள் ஆறு பிஸ்கட்டுகளால் உணர்த்தியிருக்கிறார் பெரியார். அது, வேனில் அழைத்துச் சென்று, அண்ணாவை இறக்கிவிடும் வரை தொடர்ந்திருக்கிறது.

பெரியாருக்கு இரண்டாவது தலைநகரம் திருச்சிதான். புத்தூரில் உள்ள பெரியார் மாளிகையில்தான் அவர் இயக்கப் பணிகளை கவனித்தார். அண்ணாவின் புத்தகங்களை வெளியிட்ட திராவிடப் பண்ணை பதிப்பகம் திருச்சியில்தான் செயல்பட்டது.

பெரியாரிடம் ஆசீர்
பெரியாரிடம் ஆசீர்

1953ல் கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைப்பதற்காக தி.மு.கவினர் கைத்தறித் துணிகளை விற்கும் இயக்கத்தை நடத்தினர். திருச்சியில் துணி விற்பனை செய்தவர் அண்ணா. தெப்பக்குளம் பகுதியில் அன்பில் தர்மலிங்கம், நாகூர் அனீபா போன்றவர்களுடன் கூவிக்கூவி துணி விற்று, அந்தப் பணத்தை நெசவாளர்களுக்குத் தந்தார் அண்ணா.

1956ல் திருச்சியில் நடந்த தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டில்தான் தேர்தலில் தி.மு.க போட்டியிடுவது என்று தொண்டர்களின் வாக்கெடுப்பு மூலம் முடிவெடுக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டது. தி.மு.க.வை எதிர்த்த திராவிடர் கழகம், காங்கிரசை ஆதரித்தது.

10 ஆண்டுகள் கழித்து 1967ல் நடந்த தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அண்ணா தன் தம்பிகளான நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் ஆகியோருடன் சென்னையிலிருந்து காரில் புறப்படுகிறார். அந்தக் கார் வந்து சேர்ந்த இடம், திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை.

அண்ணா இறந்தபோது பெரியார் அஞ்சலி செலுத்திய படம்
அண்ணா இறந்தபோது பெரியார் அஞ்சலி செலுத்திய படம்

பெரியாரே இதை எதிர்பார்க்கவில்லை. தேர்தல் களத்தில் எதிராக இருந்தாலும், கொள்கைவழி ஒன்றுதான் என்பதால் திருச்சியில் பெரியாரை சந்தித்து வாழ்த்துகள் பெற்றபிறகே, சென்னைக்குச் சென்று முதலமைச்சராகப் பதவியேற்றார் அண்ணா. அவருடைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை பெரியாருக்கு காணிக்கையாக்கினார்.

பெரியார்-அண்ணா எனும் இருபெரும் தலைவர்களின் பொதுவாழ்க்கை வரலாற்றில் திருச்சிக்கு தனி அத்தியாயம் உண்டு.

-Govi Lenin

வீடியோ லிங்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.