லஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா?
இலஞ்ச ஒழிப்புத் துறை என்ன போஸ்ட் ஆபிஸா ? நீதிபதி காட்டம் !
பட்டா மாறுதல் கோரி விண்ணப்பத்தவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட நபர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில், இலஞ்ச ஒழிப்புத்துறை என்ன போஸ்ட் ஆபிசா? என கடுமை காட்டியிருக்கிறது.
மதுரை எழுமலை அதிகாரிப்பட்டியை சேர்ந்த மலர்விழி என்பவர் தொடுத்த வழக்கு, நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. கடந்த 2022 இல் தனது கணவர் இறந்துவிட்ட நிலையில், அவரது பரம்பரை சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதற்காக, அதிகாரிபட்டி கிராம நிர்வாக அலுவலரை அணுகியிருக்கிறார். அந்த சொத்து தொடர்பாக இருந்த வில்லங்கங்களை சரிசெய்து பட்டா பெயர் மாற்றம் செய்து தர இரண்டு இலட்சம் இலஞ்சம் கேட்டிருக்கிறார். மலர்வழியும் அதற்கு உடன்பட்டு கேட்ட பணத்தை கொடுத்திருக்கிறார். ஆனாலும், சொன்னபடி வேலையை முடித்துக் கொடுக்காமல் மேலும் பணம் கேட்டிருக்கிறார். இதனையடுத்தே, இலஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருக்கிறார். வி.ஏ.ஓ. மனைவி கணக்கிற்கு ஜி.பே. மூலம் இலஞ்சப் பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தையும் வழங்கியிருக்கிறார். ஆனாலும், இலஞ்ச ஒழிப்புப் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அரசு அதிகாரிகள் மீதான புகார் என்பதால் மாவட்ட ஆட்சியருக்கு புகாரை அனுப்பி வைத்திருக்கிறோம். அவர் போதுமான ஆதாரங்களை இணைக்கவில்லை என்பதாக பதில் அளித்திருந்ததை பார்த்து கடுப்பான நீதிபதி புழேந்தி, இலஞ்ச ஒழிப்புத்துறையா? போஸ்ட் ஆபிசா? என்பதாக கேள்வி எழுப்பியிருக்கிறார். ஜி.பே. ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை. ஒருவேளை ஆதாரம் அவசியம் என கருதியிருந்தால் புகார்தாரரை அணுகி கேட்டிருக்கலாம். குறைந்தபட்சம் விசாரணைக்கு கூட அழைக்காமல் இப்படி பதில் தருவது சரியல்ல என்பதாக தமது அதிருப்தியை பதிவு செய்திருக்கிறார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறை வலிமையாக இருக்க வேண்டும். இத்துறைக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 611. தற்போது 541 பேர் மட்டுமே உள்ளனர். மாநிலத்தில் 16.93 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆண்டுக்கு 15 ஆயிரம் புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை விசாரிக்க தற்போதுள்ள ஊழியர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையை பலப்படுத்த தமிழக அரசு 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதாகவும் அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
— சிறப்பு செய்தியாளர் குழு.