செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு சர்வதேச மெய்நிகர் பயிலரங்கம் !
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு கொள்கை ஆவணம் உருவாக்கப்பட வேண்டும், லிஸ்பன் பல்கலைக்கழக பேராசிரியர் பேச்சு…..
திருச்சிராப்பள்ளி, ஜூலை 7, 2025: திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் கணினிஅறிவியல்துறை மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்ட குளோப்எதிக்ஸ் (Globethics) நிறுவனம் இணைந்து “கற்பித்தல், கற்றல், மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சிக்கான ஜெனரேட்டிவ் AI-இன்ஸ்மார்ட் கருவிகளைப் பயன்படுத்துதல்” என்ற தலைப்பில் ஐந்து நாள் சர்வதேச மெய்நிகர் பயிலரங்கை ஜூலை 7 முதல் 11, 2025 வரை நடத்தின.
தொடக்கவிழா
பயிலரங்கின் தொடக்க விழாவில் குளோப் எதிக்ஸ் மேலாளர் டாக்டர் ராஜுலா மற்றும் தூய வளனார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை டாக்டர்எஸ். மரியதாஸ்சே.ச. ஆகியோர் தொடக்கவுரை ஆற்றினர். கணினி அறிவியல்துறைத் தலைவர் டாக்டர் எஸ். பிரிட்டோ ரமேஷ்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி துணை முதல்வர் அருட்தந்தை டாக்டர் எஸ். அருள்ஒளிசே.ச. பயிலரங்கின் நோக்கத்தையும் அதன் அமர்வுகளையும் குறித்து விளக்கினார்.
பயிலரங்கின் அமர்வுகள் மற்றும் வள வல்லுநர்கள்
கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், அதிநவீன AI கருவிகளை அறிமுகப்படுத்தும் வகையில் இந்தப் பயிலரங்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் பல்கலைக்கழகப் பேராசிரியர் லூயிஸ் மிகுவல் பரோஸ்கார்டோசோ அவர்கள், “கற்பித்தல் AI-ஐப் பயன்படுத்துவதில் உள்ள நெறிமுறைகள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தியாகு மற்றும் தூய வளனார் கல்லூரியின் கணினி அறிவியல்துறைப் பேராசிரியர் டாக்டர் விமல் ஜெரால்ட் ஆகியோர்பயிலரங்கின் பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தினர்.
பங்கேற்பாளர்கள்
இப்பயிலரங்கில் அமெரிக்கா, ஐக்கிய அரபு மிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமன், ஜாம்பியா, மலாவி, பிலிப்பைன்ஸ், காங்கோ, பங்களாதேஷ், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். பங்கேற்பாளர்களில் கல்லூரி முதல்வர்கள், கல்வித்தலைவர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், மருத்துவநிபுணர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பல்வேறுதுறை வல்லுநர்கள் அடங்குவர்.
நிறைவுவிழா
நிறைவு விழாவில், லிஸ்பன் பல்கலைக்கழகப் பேராசிரியர், 21 ஆம் நூற்றாண்டில் வாழ்நாள் முழுவதும் கற்கும் திறன் ஊக்குவிக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி கற்பிக்கும் சமூகம் செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி பெறுவதும், AI-ஐ நெறிமுறை மற்றும் பொறுப்புடன் பயன்படுத்துவது பற்றிய பயிற்சி பெறுவதும் அவசியம். பல கல்வி நிறுவனங்களுக்கு AI பயன்பாட்டிற்கான கொள்கை இல்லை. எனவே, உயர்கல்வி நிறுவனங்களின் தேவைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கக்கூடிய AI கல்வி கொள்கை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
இந்தப்பயிலரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி அதிபர் அருட்தந்தை டாக்டர்எம். பவுல்ராஜ் மைக்கேல் சே.ச., செயலர் அருட்தந்தை டாக்டர் எம். ஆரோக்கியசாமி சேவியர்சே.ச., முதல்வர்அருட்தந்தை டாக்டர் எஸ். மரியதாஸ்சே.ச., இணை முதல்வர் முனைவர்குமார் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறைத் தலைவர் பிரிட்டோ ரமேஷ்குமார், துணை முதல்வர் முனைவர்அருளொளி, ஜே.சி.ஐ.சி.டிபிரிவின் இயக்குனர் முனைவர் சந்தியாகு மற்றும் உதவிப்பேராசிரியர் விமல்ஜெரால்டு தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழுவினர் சிறப்பாகச செய்திருந்தனர்.