கட்டண வசூலுக்கு தானியங்கி சென்சார் ! தீயை அணைக்க ஒரு மண்ணுமில்லை !
திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பராய்த்துறை டோல்பிளாசா அருகில், சாலையில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி தொட்டியம் கீழ கார்த்திகைபட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். காரில் அவருடன் சேர்த்து 6 பேர் பயணித்து வந்த நிலையில், திருப்பராய்த்துறை டோல்கேட் அருகில் வந்தபோது திடீரென்று எஞ்சினில் இருந்து புகை வந்திருக்கிறது. உடனடியாக, காரை நிறுத்திவிட்டு தீயை அணைக்கு கார்த்திக்கேயன் முயற்சித்தார்.
மேலும், குளித்தலை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் வந்து சேர்வதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. இந்த தீவிபத்து தொடர்பாக பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
”திருப்பராய்த்துறை டோல் அருகில் நடைபெற்ற இரண்டாவது தீ விபத்து சம்பவம் இது. இதுபோன்ற தீ விபத்து நடக்கும் போது தீயணைப்பு வாகனம் வரும் வரை காத்திருக்காமல், டோல்பிளாசா நிர்வாகமே போர்க்கால தடுப்புக்குழுவை அமைத்து தீயை அணைப்பதற்கு ஏற்ப போதுமான தீத்தடுப்பு உபகரணங்களுடன் தயார்நிலையில் வைத்திருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மின்சார கசிவால் ஏற்படும் தீ விபத்தை தண்ணீர் ஊற்றி அணைத்து விட முடியாது. எந்த வகையான தீ விபத்துக்கு என்ன வகையான முறையை பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டுமென்ற வழிமுறைகள் இருக்கின்றன. தீத்தடுப்பு தொடர்பான முறையான பயிற்சி பெற்ற ஊழியர்களை டோல்பிளாசாக்களில் பணியமர்த்த வேண்டும். பேட்ரோல் வாகனத்திலும் தீத்தடுப்பு கருவிகள் இருக்க வேண்டும். டோல் பிளாசா அருகில் எப்பொழுதும் ஒரு அவசர ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும்.

மேலும், பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரை இடையில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். எலமனூரில் இதற்கு தோதான இடம் இருக்கிறது. இந்த கோரிக்கை ஏற்கெனவே, மாவட்ட நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.” என்கிறார், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தங்கராஜ். தங்கராஜ் முன்வைத்த ஆலோசணைகளோடு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) த்தின் திட்ட இயக்குநர் அருணை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். ”தற்சமயம் எங்களிடம் நீங்கள் சொல்வது போன்ற வழிமுறைகள் கிடையாது.
ஆனால், இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். கண்டிப்பாக, ஏற்பாடு செய்கிறோம்.” என்றார். சினிமாவில் காட்டப்படுவது போலவே, எல்லாம் முடிஞ்சுபோன பிறகு தீயணைப்பு வாகனமும் ஆம்புலன்ஸூம் வந்து சேர்வதில் என்ன பிரயோஜனம்? வழியில் செல்லும் ஒரு வாகனத்தையும் விடாமல் வசூல் செய்வதற்கு மட்டும் பாஸ்ட்ராக் உள்ளிட்ட அதிநவீன சென்சார் கருவிகளை பயன்பாட்டில் வைத்திருக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), பயணிகளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கு குறைந்தபட்ச மெனக்கெடல் கூட செய்யாதா, என்ன?
– ஆதிரன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.